
ஒருநாள், தனியாக குதிரையின் மேல் போய்க் கொண்டிருந்தார், ஆபிரகாம் லிங்கன். வழியில், சேற்றில் சிக்கி மீள முடியாமல் ஒரு பன்றி தத்தளிப்பதை பார்த்து பரிதாபப்பட்டார்.
குதிரையை விட்டு இறங்கி, பன்றியை, சேற்றிலிருந்து இழுத்து வெளியே விட்டார். இதனால், அவர் உடைகள் சேறானது. அப்படியே நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
செய்தி அறிந்த அனைவரும், அவருடைய இரக்க சிந்தனையை பாராட்டினர்.
'ஒரு பன்றி துன்பப்படுவதை கூட காண சகிக்காதவர் நீங்கள்...' என்று, அவர் பண்பை புகழ்ந்தனர்.
'நான் ஒன்றும் அந்த பன்றியின் துன்பத்தை போக்குவதற்காக இதை செய்யவில்லை. என் துன்பத்தை போக்கிக் கொள்வதற்காகவே இதை செய்தேன். பன்றியின் துன்பம், என் உள்ளத்தில் துன்பத்தை ஏற்படுத்தி விட்டது. அந்த துன்பத்திலிருந்து மீளவே, பன்றிக்கு உதவினேன்...' என்றார், லிங்கன்.
****
அகில இந்திய சாகித்ய சம்மேளனத்திற்கு தலைமை தாங்க, மார்ச், 1937ல், சென்னைக்கு, ரயிலில் வந்து கொண்டிருந்தார், காந்திஜி.
விஜயவாடா நிலையத்தில், ரயில் நின்றதும், ஒரே கூட்டம், காந்திஜியை காண குவிந்தனர். கூட்டத்தினரிடையே, காந்திஜி இருந்த பெட்டியை நோக்கி வந்தார், ஒரு நிருபர்.
'பாபுஜி, காங்கிரஸ் பதவி ஏற்குமா?' என்று கேட்டார், நிருபர்.
ஆம் என்றாலோ, இல்லை என்றாலோ பெரிய சிக்கலாகும் என நினைத்த, காந்திஜி, 'தாங்களும் ஒரு மந்திரியாக விரும்புகிறீர்களோ?' என்றார்.
சிரித்தபடி மெதுவாய் நழுவி விட்டார், நிருபர்.
மற்றொரு சமயம், 'நடைமுறைக்கேற்ற வகையில் நட்பை பற்றி ஒரு தெளிவான விளக்கம் கொடுக்கவும்...' என்றார், ஒரு நிருபர்.
'நட்பை பற்றி எனக்கு எதுவும் தெரியாதே...' என்றார், காந்திஜி.
'அப்படியென்றால் உங்களுக்கு நண்பர்களே இல்லையா...' என்றார்.
'எனக்கு, பகைவர்களாக யாரும் இல்லை. அவ்வாறு இருந்தாலன்றோ, நட்பின் பெருமை தெரிய வரும். நான் என்னைப் போலவே பிறரை நேசிக்கிறேன். அவர்களும், என்னை அப்படியே நேசிக்கின்றனர்...' என்றார், காந்திஜி.
***
கடந்த, 1922ல், தேசிய காங்கிரஸ் கூட்டம், காக்கிநாடாவில் நடந்தது. அதையொட்டிய பொருட்காட்சி வாசலில், கேட்கீப்பராக நின்றாள், துர்கா என்ற சிறுமி.
டிக்கெட் இல்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பது, சிறுமிக்கு இட்ட உத்தரவு.
பொருட்காட்சியை பார்க்க வந்தார், ஜவஹர்லால் நேரு.
வாசலில் நின்றிருந்த சிறுமி, அவரை உள்ளே அனுப்பவில்லை.
'இரண்டனா கொடுத்து, டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்...' என்றாள், சிறுமி.
அந்த சமயம், நேருவிடம் பணம் இல்லாமல் முழிக்க, துாரத்திலிருந்த சில காங்கிரஸ் தொண்டர்கள், இதைப் பார்த்து ஓடி வந்தனர்.
சிறுமி காதை பிடித்து திருகி, 'அவர் யார் தெரியுமா?' என்று கேட்டனர்.
'ஓ தெரியுமே, ஜவஹர்லால் நேரு...' என்றாள்.
'அவரை நிறுத்தலாமா?' என்றனர்.
'நீங்கள் தானே, யாரையும் டிக்கெட் இன்றி அனுப்பக் கூடாது என்றீர்கள். அதன்படி நடந்தேன்...' என்றாள்.
'அந்த சிறுமியின் செயல் சரியானது. நாம் சில நியதிகளை உண்டாக்கி விட்டு, அதை நாமே மீறக் கூடாது. இச்சிறுமியை போன்ற பெண்கள் தான் தற்போது நம் நாட்டிற்கு தேவை...' என்றார், நேரு.
- நடுத்தெரு நாராயணன்

