
வாசலில் இருந்த பால் பாக்கெட்டை உள்ளே எடுத்து வந்த யமுனா, கட்டிலில இருந்து எழுந்த அம்மா சாவித்திரியை பார்த்ததும், ''அம்மா... ஊரிலிருந்து, பக்கத்து வீட்டு சாரதாம்மா வந்திருக்காங்க,'' என்றாள்.
'ம்... கொடுத்து வைத்தவள்...' என, சாவித்திரியிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.
அம்மா வயது தான் சாரதாவுக்கும்.
எந்த குறையுமில்லாமல், மகன் வீட்டில் நிம்மதியாக இருக்கிறாள். தன்னைப் போலவா... இரண்டு பிள்ளைகள் இருந்தும், யாரிடமும் இருக்க முடியாமல், மகளிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.
உடம்பு நல்லபடியாக இல்லை. இடுப்புக்குக் கீழ் அப்படியொரு வலி. எழுந்தால், உட்கார முடியவில்லை; உட்கார்ந்தால், எழுந்திருக்க முடியவில்லை. டாக்டரிடமும் காண்பித்தாகி விட்டது. மருந்து, மாத்திரையில் பொழுது போகிறது.
கட்டில்தான் கதி. பாத்ரூம் போக, குளிக்க மட்டும் மெல்ல எழுந்து போவாள். மற்றபடி, சாப்பாடு முதற்கொண்டு, எல்லாம் படுக்கையில் தான்.
மாப்பிள்ளைக்கு தங்கமான குணம். அதனால், அவள் பொழுது போகிறது.
''என்ன சாவித்திரி, எப்படி இருக்க... உடம்பு இப்ப பரவாயில்லையா?'' என்று கேட்டபடி, சிரித்த முகத்துடன் உள்ளே வந்தாள், சாரதா.
''வா சாரதா... ஏதோ இருக்கேன், முன்னைக்கு உடம்பு ரொம்பவே படுத்துது. எழுந்து நடமாட முடியலை,'' முகம் வாட சொன்னாள், சாவித்திரி.
சாரதாவின் குரல் கேட்டு, உள்ளிருந்து வந்த யமுனா, ''வாங்கம்மா... நல்லா இருக்கீங்களா? உங்க பிள்ளை, நாலு மாசத்துக்கு ஒருமுறை, நீங்க வாழ்ந்த வீட்டில் கொண்டு வந்து விட்டுட்டு போறாரு.
''நீங்களும், இங்கிருக்கிற கோவிலுக்கு எல்லாம் போயிட்டு, ஒரு மாசம் தங்கியிருந்து, கிளம்பறீங்க. சரிம்மா, காபி கொண்டு வரட்டுமா?'' என்றாள்.
''வேண்டாம்மா, நான் வந்ததுமே, வள்ளி வந்துட்டா. காலையில் காபி, டிபன் எல்லாம் கொடுத்தா, சாப்பிட்டு தான் வந்தேன். உனக்கு ஏதும் வேலை இருந்தா பாரு, யமுனா. நான் அம்மாகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பறேன்,'' என்றார்.
உள்ளே போனாள், யமுனா.
''சாரதா, நீ ரொம்பவே கொடுத்து வச்சவள். ஒரே பிள்ளையாக இருந்தாலும், பாசமுள்ள பிள்ளை. உன் விருப்பத்துக்காக, நீ வாழ்க்கைப்பட்டு, கணவனோடு வாழ்ந்த ஊருக்கு அழைச்சுட்டு வர்றான். எத்தனை பேர் இப்படி, அம்மாவுக்கு அனுசரணையாக இருக்காங்க சொல்லு,'' என்றாள், சாவித்திரி.
''நீ ஏன் வருத்தப்படற, சாவித்திரி. பிள்ளைகள் சரி வர கவனிக்கலேன்னாலும், மகள் நல்லபடியாக பார்த்துக்கிறா. இத்தனை வயசுக்குப் பிறகு, நமக்கு கிடைச்சதை நினைச்சு சந்தோஷப்படணும்.''
''நீ சுலபமா சொல்லிட்ட, என்னால முடியலை சாரதா. என் உடம்பை பார்த்தியா, 10 நிமிஷம் எழுந்து நிற்க, நடக்க முடியலை; இடுப்புக்குக் கீழ் அப்படியொரு வலி. இதிலே நான் எதை நினைச்சு சந்தோஷப்பட்டுக்க முடியும் சொல்லு,'' விரக்தியுடன் கூறினாள்.
''சரி சாவித்திரி, நான் கிளம்பறேன். கோவிலுக்கு போகணும்; உனக்காகவும் சாமிகிட்ட வேண்டிக்கிறேன். யமுனாகிட்ட சொல்லிடு,'' என்றாள்.
டிபன் எடுத்து வந்த, யமுனா, ''அம்மா, சாரதாம்மா கிளம்பிட்டாங்களா?'' என்றாள்.
''ஆமாம்... அவளுக்கென்ன, குறையில்லாத வாழ்க்கை. எனக்கு உபதேசம் பண்ணிட்டு போறா. நல்ல கவனிப்பு, உடம்பும் ஒத்துழைக்குது. அந்த கொடுப்பினை எனக்கு இல்லையே!''
ஊருக்கு வந்து, நான்கு வாரம் ஆகிறது. நேரம் கிடைக்கும் போது, சாவித்திரியை பார்த்து, நலம் விசாரித்து போவாள், சாரதா.
கதவு தட்ட, வாசலுக்கு வந்தாள், யமுனா.
வாசலில் சாரதா நிற்பதைப் பார்த்து, ''வாங்கம்மா... உள்ளே வாங்க,'' என்றாள்.
''இல்லம்மா... வள்ளியோடு பக்கத்து ஊரிலிருக்கும், முருகன் கோவிலுக்கு போறேன். அபிஷேகத்திற்கு கொடுத்திருக்கேன். மகன், என்னை அழைத்து போக வர்றதாக சொல்லியிருக்கான்.
''சாவியை வெச்சுக்கோ, சீக்கிரமே வந்துடுவேன். ஒருவேளை, நான் வர்றதுக்குள்ள அவன் வந்துட்டா, வீட்டில் இருக்கச் சொல்லு. வந்துடறேன்ம்மா,'' என சொல்லி, கிளம்பினாள்.
சாரதா சொன்னது போல, அவள் கிளம்பிய சிறிது நேரத்துக்குள், கார் வந்து நிற்க, வாசலுக்கு விரைந்தாள், யமுனா.
காரிலிருந்து இறங்குபவனைப் பார்த்து, ''வாங்கண்ணா... அம்மா, கோவிலுக்கு போயிருக்காங்க. கொஞ்ச நேரத்தில் வந்துருவாங்க. வீட்டு சாவி என்கிட்ட தான் இருக்கு. உள்ளே வாங்களேன்,'' அன்போடு அழைத்தாள்.
சிரித்தபடி, ''எத்தனை கோவில் போனாலும், அம்மாவுக்கு திருப்தி வராது. இந்த ஒரு மாசமா, நிறைய கோவிலுக்கு போயிட்டு வந்திருப்பாங்க,'' என்று சொல்லிய படி, உள்ளே வந்தான்.
கட்டிலில் படுத்திருக்கும், சாவித்திரியைப் பார்த்து, ''அம்மா... நல்லா இருக்கீங்களா?''
''யாரு, சாரதா மகனா? வாப்பா, நல்லா இருக்கியா? அம்மாவை ஊருக்கு அழைச்சுட்டு போக வந்தியா. உங்கம்மா கொடுத்து வச்சவ. கோவிலுக்குப் போயிருக்கா வந்துடுவா. உட்காருப்பா,'' என்றாள், சாவித்திரி.
''பேசிட்டு இருங்க. காபி எடுத்துட்டு வரேன்,'' என்று கூறி உள்ளே போனாள், யமுனா.
''உங்க உடம்பு எப்படிம்மா இருக்கு. கால் வலி பரவாயில்லையா?'' என்றான்.
''ஏதோ இருக்குப்பா, பொழுதை ஓட்டிட்டு இருக்கேன்.''
''என்னம்மா செய்யுறது, வயதானால் ஏதாவது உடம்பு படுத்ததான் செய்யுது. எங்கம்மாவ பாருங்க, வந்திருக்கிற வியாதியை, சர்வ சாதாரணமாக ஏத்துக்கிட்டு, வாழ்ந்துட்டு இருக்காங்க,'' என்றான்.
''என்னப்பா சொல்ற... சாரதா உடம்புக்கு என்ன?''
''அம்மாவுக்கு, 'ப்ளட் கேன்சர்!' ஒரு வருஷமா மருந்து, மாத்திரையில் வாழ்ந்துட்டு இருக்காங்க. அலைய வேண்டாம்மான்னு சொன்னாலும், கேட்க மாட்டேன்கிறாங்க.
''அவங்க, என்ன சொல்றாங்கன்னா... எதுக்குப்பா பயப்படணும், கவலைப்படணும். வயது முதிர்வில் உடம்பு ஆரோக்கியம் குறையும்போது, இப்படி ஏதாவது ஒரு தொந்தரவு வரத்தான் செய்யும்.
''எனக்கு,'ப்ளட் கேன்சர்' இருக்கு. அதுக்காக, இனி வரும் நாட்களை, உடம்புக்கு வியாதி வந்துடுச்சேன்னு கவலைப்பட்டுட்டு இருக்கணுமா... வேண்டாம்பா, அதுக்கான வைத்தியம் பார்க்கிறோம். அதைப் பற்றியே நினைச்சுட்டு இருக்காமல், இருக்கும் காலத்தை பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போறேன்.
''எனக்கு கிடைச்ச நல்லதை நினைச்சு, குறைகளை பெரிசுபடுத்த கூடாது. இந்த வாழ்க்கையை ஒரு கொடுப்பினையாக நினைச்சு, கிடைச்ச நல்லதுகளுக்கு, கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு வாழணும். அப்படின்கிறாங்க...'' என்றான், சாரதா மகன்.
சிறிது நேரம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்த சாவித்திரி, நிதானமாக, தன் வலிகளை புறந்தள்ளி, ''இருப்பா... நான் போய், உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்,'' என்றவாறு, படுக்கையிலிருந்து எழுந்து, அடுப்படிக்கு நடக்கத் துவங்கினாள்.
பரிமளா ராஜேந்திரன்

