PUBLISHED ON : ஜூன் 16, 2024

காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், குமரக்கோட்டம் முருகன், சித்ரகுப்தர் என, எத்தனையோ தெய்வங்களைத் தரிசித்திருப்பீர்கள்.
இங்குள்ள பெருமாள் கோவில் ஒன்றில், தலையில் விளக்கை சுமந்து கொண்டிருக்கும் ஆதிசேஷன் பாம்பை பார்த்திருக்கிறீர்களா! காஞ்சிபுரம் பச்சைவண்ணர் பெருமாள் கோவிலில், இந்த பாம்பை தரிசிக்கலாம்.
மரீசி என்ற முனிவர், தீவிர பெருமாள் பக்தர். அவருக்கு, தசாவதாரங்களில் ஒன்றான ராமாவதாரம் மீது, ஒரு சந்தேகம்.
மனிதனாக ஏன் பெருமாள் பிறக்க வேண்டும். தெய்வத்தன்மையை மறந்து, தன் மனைவியை ஏன் ஒரு அரக்கனிடம் பறிகொடுக்க வேண்டும். அப்படியே பறிகொடுத்தாலும், இலங்கையில் அவள் இருப்பது தெரியாதா என்ன. இவரே, கண நேரத்தில் அழைத்து வந்திருக்கலாமே. உண்மையிலேயே, ராமாவதாரம் என்ற ஒன்று இருந்ததா!
இந்தக் கேள்விகளுக்கு விடை காண, பெருமாளை நினைத்து தவமிருந்தார், மரீசி முனிவர்.
பெருமாளும் அவர் முன் தோன்றி, 'நான், ராமனாக பிறந்தது உண்மையே. சகோதர ஒற்றுமை, தந்தை சொல் மீறாமை, ஒருவனுக்கு ஒருத்தி, மருமகளை, மாமியார்கள் நடத்த வேண்டிய விதம் உள்ளிட்ட குடும்ப உறவு பற்றி சொல்வதற்காகவே, நான் மனிதனாகப் பிறந்தேன்.
'மேலும், பூலோகத்திலுள்ள பல ரிஷிகள் என் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களுக்கு என் உண்மை வடிவைக் காட்டாமல், மனித வடிவில் தரிசனம் தந்தேன்...' என்றவர், பச்சை வண்ணத்தில், ராமனாக உருவெடுத்து, அவர் முன் காட்சி தந்தார்.
நெகிழ்ந்து போன மரீசி, இதே வடிவில் தனக்கு காட்சி தந்த அவ்விடத்தில் தங்கி, பக்தர்களுக்கு அருளுமாறு கேட்டுக் கொண்டார்.
உடனே, மகாலட்சுமியை அழைத்த பெருமாள், அவளையும் தன்னுடன் தங்குமாறு வேண்டினார். அவளைச் சீதாதேவியாகப் பார்த்து மகிழ்ந்தார், மரீசி.
பின், இருவரும் அங்கு தங்கினர். பிற்காலத்தில், அங்கு கோவில் எழுந்தது. பச்சை வண்ணத்தில் பெருமாள் காட்சி தந்ததால், பச்சைவண்ணர் என்ற பெயர் ஏற்பட்டது. தாயாருக்கும் பச்சை வண்ணக் கல்லான மரகதத்தின் பெயரால், மரகதவல்லி என்ற பெயர் ஏற்பட்டது.
ராமனின் தம்பி லட்சுமணனாக பிறந்தது, பெருமாளைத் தாங்கும் படுக்கையான ஆதிசேஷன் எனும் பாம்பு. பெருமாள், மரீசிக்கு காட்சி தந்த போது, ஆதிசேஷனும் உடன் வந்தது.
பெருமாள், மரீசிக்கு நின்ற கோலத்தில் அருள்பாலித்ததால், தன் மீதும் வழக்கம் போல் அமர வேண்டும் என, வேண்டிக் கொண்டது. அப்போது, தன்னைத் தீபமாக மாற்றிக் கொண்டு, ஆதிசேஷனின் தலையில் ஒளிர்ந்தார், பெருமாள். இதை, நாக தீபம் என்பர்.
இந்த விளக்கை ஒன்பது வெள்ளிக்கிழமைகள் ஏற்றி, விரைவில் திருமணம் நடக்கவும், புத்திர தோஷம் நீங்கவும் வேண்டுவர். தாயார் சன்னிதியில், இந்த தீபத்தைத் தரிசிக்கலாம்.
பாம்பின் மேல் ஒளிரும் இந்த தீபத்தை காண, காஞ்சிபுரம் செல்வோமா!
தி. செல்லப்பா