
உலகத்தில் உண்மையாகவே வேதாந்தம் பேசுபவர்களும் உண்டு. உள்ளுக்குள்ளே வேறுமாதிரி இருந்துக்கிட்டு வெளியில் வேதாந்தம் பேசுபவர்களும் உண்டு.
கடை வைத்து வியாபாரம் செய்து வந்தான் ஒருவன்; மகா கஞ்சன். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டான்.
அந்த ஊருக்கு ஆண்டுக்கு ஒரு தடவை வரும் முனிவர், ஒரு நாள், ரெண்டு நாள் தங்கி இருப்பார்.
அந்த முனிவர் வரும் போது, அவரை வரவேற்று, பெரிய வேதாந்தி மாதிரி அவரிடம் பேசி கொண்டிருப்பான், அந்த ஆள்.
'பணம் என்ன சார் பணம். இன்று ஒருத்தன் கையிலே இருக்கும். நாளைக்கு வேறொருத்தன் கையிலே இருக்கும். எல்லாம் மாயம். எனக்கு இன்னமும் இந்த சம்சார பந்தத்தில் இருந்து விடுபட நேரம் வரலே...' என்பான்.
'ஏம்ப்பா அப்படி சொல்றே? இப்ப கூட நீ சரின்னு சொல்லு. உனக்கு தீட்சை கொடுத்து, இதுலேயிருந்து விடுபடற ஞானத்தைப் போதிக்கிறேன்...' என்பார், முனிவர்.
'ஐயோ சாமி. உடனே அது எப்படி முடியும்? பிள்ளைங்கள்லாம் சின்னஞ்சிறுசுங்க. அதுக்கெல்லாம் கல்யாணம் காட்சின்னு செய்து கடமையை முடிச்சுட்டா, நீங்க சொல்றபடி செஞ்சுடலாம்...' என்பான்.
சில ஆண்டுகள் கழித்து, மறுபடி ஒருநாள், அந்த ஊருக்கு வந்தார், முனிவர். இவன் கடைக்கும் வந்தார். அங்கே கல்லாவில் நம்ம ஆள் இல்லை. அவன் மகன் தான் உட்கார்ந்திருந்தான். அப்பாவை போலவே பிள்ளையும் எழுந்து ஓடி வந்து முனிவரை வரவேற்றான்.
'அப்பா எங்கே?' என்று கேட்டார், முனிவர்.
'சாமி. உங்க கிட்டே தீட்சை வாங்கி, இந்த சம்சார பந்தத்துலேயிருந்து விடுதலை பெறணும்ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். அது நிறைவேறாமலே போய் சேர்ந்துட்டார். போன மாசம் ஒரு நாள் திடீர்ன்னு, 'நெஞ்சு வலிக்குது'ன்னார். அவ்வளவு தான். பொட்டுன்னு போயிட்டார்...' என்று புலம்பினான், மகன்.
இதை கேட்டதும் சிரித்தார், முனிவர்.
'அவன் எங்கேடா போவான்? உன் அப்பன் எங்கேயும் போகல. இதோ வாலை ஆட்டிக்கிட்டு உன் காலடியிலேயே இருக்கிறான் பார்...' என்று சொல்லி, அங்கே நின்றிருந்த நாயை சுட்டிக்காட்டினார்.
'என்ன சாமி சொல்றீங்க?' என்று ஆச்சரியமா கேட்டான், மகன்.
உடனே, அந்த நாயோட தலையிலே தட்டி, 'பேசுடா...' என்றார், முனிவர்.
'காயமே இது பொய். வெறும் காற்றடைத்த பை...' என, வேதாந்தம் பேச ஆரம்பித்தது, அந்த நாய்.
'அடேய், இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலே. நீ விரும்பினா, உனக்கு தீட்சை கொடுத்து என்னுடன் அழைத்து சென்று, உனக்கு ஞானத்தை போதிக்கிறேன். வர்றீயா...' என்றார், முனிவர்.
'ஐயோ, அது முடியாதுங்க சாமி. நான் உண்ணாமல், ஏராளமாக சொத்து சேர்த்து வச்சுட்டேன். என் பிள்ளைங்க, அதன் பெருமை தெரியாமல் ராத்திரி, கதவை திறந்து போட்டுட்டு துாங்கிடுவானுங்க. அதனால, இப்படி நாயாய் பிறந்து, ராத்திரி பகலா, சுத்தி சுத்தி வந்து காவல் காத்துக்கிட்டிருக்கேன். இப்ப எப்படி சாமி வர முடியும்?' என்றது, அந்த நாய்.
அறியாமையில் சுழன்று, சுகம் காணும் இவர்களுக்கு, ஞானம் போதிப்பது அவ்வளவு சுலபமல்ல!
பி. என். பி.,