
மாமியார் பேச்சை கேளுங்கள்!
பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அம்மாள், எதற்கெடுத்தாலும், தன் மருமகளை குறை கூறிக் கொண்டிருப்பார். பொறுத்து பொறுத்து பார்த்த மருமகள், தன் கணவனிடம் சொல்லி குறைபட்டிருக்கிறாள். அதற்கு அவள் கணவன், 'அம்மாவிடம் பேசிப் பார்க்கிறேன்...' என்று, கூறியுள்ளார்.
ஒருநாள், 'எப்பப் பாரு, என் பொண்டாட்டிய ஏதாச்சும் குத்தம், குறைன்னு சொல்லிக்கிட்டே இருக்கியே... ஏம்மா இப்படி அவளை, 'டார்ச்சர்' பண்ற...' என, கேட்டார், மகன். அந்த அம்மா நிதானமாக, 'உன் பொண்டாட்டி மேல எனக்கு எந்த கோபமும் இல்லைடா. அவ உனக்கு பொண்டாட்டின்னா, எனக்கு, அவள் மருமகளும் கூட. ஒரு தாய் பிள்ளையை கண்டிக்கிற மாதிரிதான் நான் அவளை கண்டிக்கிறேன்.
'உன் அக்காவை இப்படி எல்லாம் சொல்லும் போது, உனக்கு கோபம் வரலை. ஆனா, பொண்டாட்டின்னதும், உனக்கு கோபம் வருது. 'அவள் தாய் இல்லாம வளர்ந்த பிள்ளை. கள்ளம் கபடமில்லாம எல்லாரோடயும் பேசறது, பழகறது தப்பில்லை தான். ஆனா, யார் நல்லவங்க, யார் கெட்டவங்கன்னு எனக்கு தான் தெரியும். 30 வருஷம் இதே ஏரியாவுல இருந்த அனுபவம். எல்லாரும், எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.
'பொண்ணோட சாதாரண சிரிப்பு கூட, ஒரு வயசானவரை தடுமாற வைக்கும். யார் பொறாமைக்காரி, யார் அடுத்தவங்க குடும்பத்துல கலகத்தை உண்டு பண்ற வஞ்சகக்காரிங்கிறது, எனக்குத்தான் தெரியும். புதுசா வந்திருக்கிற மருமகளுக்கு தெரியாது.
'என் அனுபவத்தை தான், என் மருமகளுக்கு எச்சரிக்கையாக கொடுக்கிறேன். பொறுத்துக்க, புது மாப்பிள்ளை மோகம் எல்லாம் படிப்படியா குறையும் போது, அம்மா சொன்னதெல்லாம் நல்லதுக்குத்தான்னு உனக்கும், மனைவிக்கும் புரியும்...' என்றார்.
வீட்டுக்கு வீடு நடக்கும் மாமியார் - மருமகள் பிரச்னையை புரிந்து கொண்டு தீர்வு காண, இந்த அம்மாவின் அறிவுரை நிச்சயம் உதவும்.
-பெ.பாண்டியன், காரைக்குடி.
பொறுத்தது போதும், பொங்கியெழுங்கள்!
எனக்கு தெரிந்த, விதவை பெண் ஒருவர், ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் துலக்கும் வேலை செய்து வருகிறார். வறுமையிலும், அவரது ஒரே மகனை, கல்லுாரி வரை படிக்க வைத்தார். அவனோ, உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரின் மூளைச் சலவையால், வேலைக்கு போகாமல், அரசியல்வாதிக்கு, 'அல்லக்கை'யாக சுற்றித் திரிந்தான்.
அவனிடம் எவ்வளவோ மன்றாடினார், அப்பெண். வேலைக்குப் போவதை விட, அரசியல்வாதியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதே என் லட்சியம்...' என்று, வீர வசனம் பேசி, ஊதாரியாக திரிந்தான், மகன். அரசியல்வாதியால் தன் மகனின் வாழ்வு சீரழிவதோடு, குடி, புகை என்று, அவன் உடல்நலமும் கெட்டது. கட்டைப்பஞ்சாயத்து மற்றும் ரவுடியிசத்தால் நற்பெயருக்கு களங்கமும் ஏற்பட்டது.
பொறுத்துப் பார்த்த அப்பெண் ஒருநாள், அரசியல்வாதியின் வீட்டுக்கு நேரில் சென்று, 'உங்கள் சுயநலத்திற்காக, அடுத்தவர் வீட்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை, ஏன் சூனியமாக்குகிறீர்கள்... உங்கள் பிள்ளைகள் படித்து, அதிகாரத்தில் அமர வேண்டும், எங்கள் பிள்ளைகள் அடிமையாகவே அழிய வேண்டுமா?
'நீங்கள் மட்டும் குடும்பம், பிள்ளைகள் என்று வாழ்வது போல, எங்கள் பிள்ளைகளும், வேலைக்கு சென்று வாழ வேண்டாமா?' என்று கேட்டுள்ளார். இதை எதிர்பார்க்காத அரசியல்வாதி, அப்பெண்ணின் மகனிடம், 'ஏதாவது வேலைக்கு சென்று, சம்பாதிக்கும் வழியை பார்...' என்று அறிவுரை கூறி, அனுப்பி வைத்தார். அநியாயங்களைக் கண்டும் காணாமல் போவதை விட, தட்டிக் கேட்டு சூடு கொடுப்பதே, தகுந்த விமோசனத்திற்கு வழிவகுக்கும்!
-வி.முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
உழைக்க தயாரானால், வேலையும் தயார்!
உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு சென்றிருந்தேன். முன்னால் தோட்டம் போட வசதியாக, நிறைய இடம் விட்டு, வீடு கட்டியிருந்தனர். அந்த காலி இடத்தில், மலைப் பிரதேசங்களில் வளரும் அழகான குரோட்டன்ஸ் செடிகள், பல வண்ண ரோஜா செடிகள் என்று பார்ப்பதற்கு, ரம்யமாக இருந்தது.
சில மாதங்களுக்கு பின், சமீபத்தில் அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. முன்பிருந்த பூச்செடிகள், குரோட்டன்ஸ் இல்லாமல், கத்தரி, வெண்டை, தக்காளி காய்கறிகள் ஒருபுறம், கீரைகள், கொடி வகைகள் என, ஒரு காய்கறி தோட்டமே உருவாகி இருந்தது. ஒரு திருநங்கை, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.
'எப்படி இந்த மாற்றம்?' என்று கேட்டேன்.
'மலைப் பிரதேசங்களிலிருந்து கொண்டு வந்து அழகுக்காக வைத்த செடிகள் எல்லாம், நம் ஊர் சீதோஷ்ணத்துக்கு ஒத்து வராமல் வாடிப் போய் விட்டது. இந்த வழியாக போன திருநங்கை, பிழைப்புக்காக இந்த இடத்தை அவர் பொறுப்பில் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டார்.
'நாங்கள் சம்மதித்ததும், இதை ஒரு காய்கறி தோட்டமாக மாற்றி விட்டார். அவர் உழைப்புக்கு ஊதியமாக, விளையும் காய்கறிகளை எல்லாம் அவரையே எடுத்துக்க சொல்லிட்டோம். அதை தெருவில் உள்ளோருக்கு விற்று, லாபம் பார்த்து வருகிறார்.
'இடத்தை கொடுத்த எங்களின் தினசரி தேவைக்கான காய்கறிகளை கொடுத்து விடுவார். இருவருக்கும் இது லாபம் தான். உழைக்க தயாராக இருக்கும் திருநங்கைக்கு உதவிய திருப்தியும் கிடைக்கிறது...' என்றார், உறவினர்.
அவர் சொன்னதை கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது. வேலை இல்லை என்று சோம்பிக் கிடக்காமல், தன் வாழ்க்கைக்கான வழியை தேடிக்கொண்ட அந்த திருநங்கையை பாராட்டி வந்தேன்.
என்.விஜயலட்சுமி, மதுரை.