sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அருட்செல்வர். ஏ.பி. நாகராஜன்! (13)

/

அருட்செல்வர். ஏ.பி. நாகராஜன்! (13)

அருட்செல்வர். ஏ.பி. நாகராஜன்! (13)

அருட்செல்வர். ஏ.பி. நாகராஜன்! (13)


PUBLISHED ON : ஜூன் 23, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 23, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமால் பெருமை படப்பிடிப்பு நடக்குமிடம், திருவடீஸ்வரம் என்ற பெருமாள் கோவில் அமைந்த மலைக்கிராமம். அவ்வளவு சுத்தமாகவும் இல்லை.

சிவகுமாரை அழைத்து, 'கவுண்டரே... காலில் எதையும் மிதிச்சுட்டு வந்திடாத; சுத்தமா வைச்சுக்கோ. நான், உன் காலை வாய் வைத்து கடிக்கணும்...' என்றார், சிவாஜி.

அதன்படி திருமங்கை மன்னன், திருமாலின் காலிலுள்ள மிஞ்சியை கடிப்பது போல், படம் பிடிக்கப்பட்டது.

திருமால், பத்து அவதாரமாகக் காட்சி அளிப்பது போல் எடுக்கப்பட்டது. இப்போது மாதிரி, கிராபிக்ஸ் தொழில்நுட்பம் எல்லாம் இல்லாத காலம்.

ஒவ்வொரு அவதாரம் முடித்த உடன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அடுத்த அவதாரத்துக்கான ஒப்பனை செய்யப்பட்டு, மறுபடியும் படம் பிடிக்கப்படும்.

இவ்வாறு பத்து அவதாரம் தொடர்பான படப்பிடிப்பும் முடியும்போது, முதல் நாள் மாலை துவங்கி மறுநாள் காலை 8:00 மணி ஆகிவிட்டது. ஒப்பனைக்காக போடப்பட்ட வர்ணங்களை அகற்றும் பொருட்டு எண்ணெயை உடம்பு முழுதும் தேய்த்து வெந்நீர் போட்டு, பலமுறை குளித்ததால், நடிகர் சிவகுமாருக்கு, டைபாய்டு காய்ச்சல் வந்து, பல நாட்கள் அவதிப்பட்டார்.

இயக்குனர் ஏ.பி.நாகராஜனின், திருமால் பெருமை படத்தில், சூடிக்கொடுத்த சுடர்கொடியாக, ஆண்டாளாக நடித்தார், குட்டி பத்மினி. இப்படத்திலும், சிவாஜி கணேசனுடன் நடித்தார்.

படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியில், குட்டி பத்மினியை கன்னத்தில் அடிப்பது போன்று எடுக்கப்பட்டது. கொஞ்சம் அழுத்தமாக அடித்து விட்டார், சிவாஜி. அதனால், அவர் காதில் மாட்டியிருந்த குண்டலம் அறுந்து விழுந்து விட்டது. ஆனாலும், அதை பொறுத்துக் கொண்டு, வசனத்தைப் பேசி, நடித்து முடித்து விட்டார், குட்டி பத்மினி.

காட்சி முடித்த பின், தவறை உணர்ந்த சிவாஜி, குட்டி பத்மினியை வாரி அணைத்து கொஞ்சியதுடன், கொஞ்சம் அழுத்தமாக அடித்ததற்கு மன்னிப்பும் கேட்டார்.

இது தவிர படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும், இயக்குனர் ஏ.பி.நாகராஜனின் வீட்டிற்கு, குட்டிபத்மினி அடிக்கடி செல்வதுண்டு. அப்போது, ஏ.பி.நாகராஜனும், அவர் மனைவியும், தன்னை சொந்த மகள் போலவே கவனித்துக் கொள்வர் என்றும், வசனத்தை அழகு தமிழில் சொல்லிக் கொடுக்கும் அழகே தனி என்ற கருத்தையும், பதிவு செய்துள்ளார், குட்டி பத்மினி.

'ஆனந்த விகடன்' இதழின் ஆசிரியரும், ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளருமான, எஸ்.எஸ்.வாசன், சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர். ஆனந்த விகடனில், பல புதிய எழுத்தாளர்களை திறமையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளார்.

அப்படி அவர் அறிமுகப் படுத்தியவர்களில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின், கதை இலாகாவில் பணியாற்றியவர்களில், கொத்தமங்கலம் சுப்புவும் ஒருவர்.

அதில், ஒரு நாவல் - 'தில்லானா மோகனாம்பாள்!' நாதஸ்வர வித்துவானுக்கும், நடன பெண்மணிக்கும் இடையிலான அழகான காதலை நளினமாக சொன்ன நாவல் அது.

ஆனந்த விகடன் இதழில், தொடராக வெளிவந்த போதே படித்துள்ளார், ஏ.பி.நாகராஜன். கதை, அவருக்கு மிகவும் பிடித்து விட்டதால், திரைப்படமாக்க வேண்டுமென்று விரும்பினார்.

கதையை எழுதிய கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்புவை சந்தித்து, 'தில்லானா மோகனாம்பாள்' கதையை திரைப்படமாக்கும், தன் ஆசையை வெளியிட்டார். ஆனால், 'அதன் உரிமை வாசனிடமே உள்ளது. எனவே, அவரை அணுகுங்கள்...' என்று சொல்லி விட்டார், கொத்தமங்கலம் சுப்பு.

ஒரு கலைஞன், ஒரு நாவலையோ அல்லது கதையையோ மிகவும் விரும்பி படித்தால், அது அவனது மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அப்படி பதிந்தால் அந்தக் கதையை அவன் அசை போட ஆரம்பித்து விடுவான்.

அதைப் போல, 'தில்லானா மோகனாம்பாள்' கதை, நாகராஜன் மனதில் திரைப்படமாக ஓட ஆரம்பித்து விட்டது. அதை படமாக எடுத்தால் நன்றாக இருக்கும். எனவே, 'தில்லானா மோகனாம்பாள்' கதையை வாசனிடமிருந்து வாங்கி திரைப்படமாக எடுக்கலாமென்று நினைத்தார், ஏ.பி.நாகராஜன்.

தில்லானா மோகனாம்பாள் படத்தை, நாதஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலத்தை கதாநாயகனாக வைத்துத்தான் தயாரிக்க நினைத்தார், ஏ.பி.என்.,

காருக்குறிச்சி அருணாசலம் பெயரில், 'அருணாசலம் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட நிறுவனம் ஆரம்பித்து, அதன் சார்பாக, ராஜநர்த்தகி என்ற திரைப்படத்தை தயாரிக்க ஏற்பாடு செய்தார், நாகராஜன். ஆனால், அது நிறைவேறவில்லை.

அதனால், அந்த ஆசையை, தில்லானா மோகனாம்பாள் படத்தில் காருக்குறிச்சி அருணாசலத்தை, கதாநாயகனாக நடிக்க வைத்து தணித்துக் கொள்ளலலாம் என்று நினைத்தார். எனவே, காருக்குறிச்சி அருணாசலத்தை அழைத்துச் சென்று, எஸ்.எஸ்.வாசனை சந்தித்து, 'தில்லானா மோகனாம்பாள்' கதையை, அவரிடம் கேட்டார், ஏ.பி.என்.,

'அக்கதையை நானே, வைஜெயந்தி மாலாவை கதாநாயகியாக வைத்து எடுக்கப் போகிறேன். காருக்குறிச்சி அருணாசலம் வேண்டுமானால் சண்முக சுந்தரமாக நடிக்கட்டும். அதுமட்டுமல்லாது, நானும், நீங்களும் சேர்ந்தே கூட்டு தயாரிப்பாகவே அத்திரைப்படத்தை தயாரிக்கலாம்...' என்றார், வாசன்.

இடையில் சில ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இடைப்பட்ட காலத்தில், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை மற்றும் திருமால் பெருமை என, சிறந்த புராணப் படங்களை எடுத்து, மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குனராகி விட்டார், நாகராஜன். அதுவரை எஸ்.எஸ்.வாசன், 'தில்லானா மோகனாம்பாள்' கதையைத் திரைப்படமாக எடுக்கவில்லை.

தொடரும்.

நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.

- கார்த்திகேயன்







      Dinamalar
      Follow us