
பா - கே
'மணி... கன்னிமரா லைப்ரரி வரை போயிட்டு வருவோம் வாப்பா...' என்றார், லென்ஸ் மாமா.
'அதிசயமாயிருக்கு; நுாலகம் பக்கம் எல்லாம் ஒதுங்க மாட்டீரே...' என்றேன்.
'நம்ம மாதிரி புரபஷனல் ஆளுங்களுக்கு, அவ்வப்போது, காலத்திற்கேற்ப, 'அப் - டேட்' செய்து கொள்வது முக்கியம்ன்னு உனக்கு தெரியாதா? வா போகலாம்...' என்றார், மாமா.
அவர் சொல்வதும் உண்மை என்பதால், உடனே நானும், அவருடன் கிளம்பினேன்.
கன்னிமரா லைப்ரரியினுள் நுழைந்தோம். பெரிய பெரிய அலமாரியில், ஏராளமான புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தனர்.
நுாலகரிடம் அனுமதி பெற்று, புகைப்பட கலை சம்பந்தமான புத்தகங்கள் இருக்கும் அலமாரி முன் வந்து நின்று பார்வையிட்டார், மாமா.
நான், வேறு பக்கம் சென்று, 'ஜெனரல் சப்ஜெக்ட்' கொண்ட புத்தகங்களை நோட்டமிட ஆரம்பித்தேன். 'கனவு!' என்ற தலைப்பில், அழகான அட்டைப் படத்துடன் இருந்த புத்தகத்தை எடுத்து புரட்டினேன்.
அலுவலக லைப்ரரியில், 'கனவுகளுக்கான பலன்கள்' என்ற புத்தகத்தை பார்த்துள்ளேன். அது போல் தான் இதுவும் என்று நினைத்து, புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தேன்.
அதில்:
கனவுகள், விடை காண முடியாத புதிர்ன்னு சிலர் சொல்றாங்க.
'கனவு, மனச்சாட்சியின் குரல்...' என்கிறார், சாக்ரடீஸ்.
'உடல் அசதியால் ஏற்படற ஒரு காட்சி...' என்கிறார், வால்டேர்.
'உணர்வற்ற ஒரு நிலைக்கு, அழைச்சுக்கிட்டு போற ராஜபாட்டை...' என்கிறார், மனோவியல் அறிஞர், பிராய்டு.
ராமாயணத்துல, திரிசடை கண்ட கனவு. சிலப்பதிகாரத்துல, கண்ணகி கண்ட கனவு. இதெல்லாம் பின்னாடி நடக்கப் போறதை, முன் கூட்டியே சொல்லியது.
எகிப்து வரலாறுல, நாலாவது துட்மோஸ்னு ஒருத்தர், வேட்டையாடிட்டு வந்த களைப்புல, 'ஸ்பிங்ஸ்' தேவதை சிலைக்கு பக்கத்துல படுத்து துாங்கிவிட்டார். அப்போ, அவரு பட்டத்துக்கு வர்ற மாதிரி ஒரு கனவு.
அது மாதிரியே பிற்காலத்தில், அவர் பட்டத்துக்கும் வந்துட்டார்!
கனவுகள் சில சமயம், ஒழுங்கா கோர்வையா வருது. சில சமயம், ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தமில்லாம கன்னாபின்னான்னு வரும். விடிஞ்சதும் யோசிச்சு பார்த்தா, என்ன கனவுன்னே நினைப்பு வராது.
பொதுவா, மூன்று நிலைமைகள்ல கனவு வரலாம்.
ஒன்று, கடுமையான அசதி அல்லது உடல்நிலை பாதிப்பால் கனவு வரலாம்.
இரண்டாவது, மனசுல உள்ள ஆசைகள் வெளிப்படுத்தற வகையிலயும் ஏற்படலாம்.
மூன்றாவது, ஆத்மாவுலேர்ந்து தெய்வீக சக்தியால வெளிப்படுதுன்னும் சிலர் சொல்றாங்க.
இதுல, முதல்ல சொன்ன நிலைக்கு விளக்கம் கொடுக்க முடியும். அடுத்த ரெண்டு நிலைக்கும் விளக்கம் சொல்றது, கஷ்டம்.
இந்த உலகம் முடிவில்லாதது, சிக்கல் மிகுந்தது. இதை சமாளிக்க, செயல்களை ஒழுங்குபடுத்தி இயங்கி வர்ற மனித இனத்துக்கு ரெண்டு வழி இருக்கு. முதல் வழி, நம் மூளையின் இடது பகுதியுடன் தொடர்பு உள்ளது. நாம முழிச்சுகிட்டு இருக்கிறப்போ செய்யும் செயல்கள் எல்லாமே இதோட கட்டளைப்படியே நடக்கும்.
இரண்டாவது வழி, நம் மூளையின் வலப்பகுதியுடன் தொடர்பு உள்ளது. உண்மை செயலை விட, உணர்வுக்கு மதிப்பு கொடுக்கற இந்த பகுதி தான், கனவு காண்கிற மன நிலைக்கு கொண்டு செல்லும்.
பகல்ல ஏற்படற பலவித உணர்ச்சிகள் இங்கே பதிவாகிடும். ராத்திரி துாக்கத்துல கனவுங்கிற வடிகால் மூலமா அதுக்கெல்லாம் தீர்வு காணப்படும்.
பொதுவா, கனவு காண்பது நல்லதுன்னு தான் பலர் சொல்றாங்க.
ஆழ்ந்த துாக்கம், போதுமான ஓய்வை நம் மூளைக்கு கொடுக்குது. தீர்க்க முடியாத சிக்கல்களுக்கு கனவு மூலமா தீர்வு ஏற்பட்டிருக்கும்.
- இப்படி தொடர்ந்தது, அப்புத்தகம். வேறு ஒரு சமயம், முழுவதுமாக படிக்கலாம் என்று புத்தகத்தை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
ப
'விடுதலை வீரர்கள்' என்ற நுாலிலிருந்து படித்தது:
ஒருமுறை, காந்திஜி, காசிக்கு சென்றபோது, மதன்மோகன் மாளவியாவை சந்தித்தார்.
'இங்கிலாந்து ராணி யிடமிருந்து, எனக்கு அழைப்பு வந்துள்ளது. வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அதில் கலந்து கொள்ள சில நிபந்தனைகளும் விதித்துள்ளார்.
'அது என்ன நிபந்தனை என்றால், 'ராணியைப் பார்க்க வருபவர்கள், பேன்ட், கோட், சூட், டை, தொப்பி எல்லாம் போட்டு வரணும்; ஆங்கிலத்தில் தான் பேசணும்...' என, உள்ளது.
'இந்த நிபந்தனையை நான் ஏற்க முடியாது. அதனால், இங்கிலாந்து ராணியின் அழைப்பை நிராகரிக்க முடிவு செய்துள்ளேன்...' என்றார், காந்திஜி.
'எனக்கும் கூட, அப்படி ஒரு அழைப்பு இங்கிலாந்து ராணியிடம் இருந்து வந்துள்ளது. நான், அதில் கலந்து கொள்வதாக பதில் எழுதியிருக்கேன்...' என்றார், மாளவியாஜி.
மாளவியா இப்படி சொன்னதை கேட்டதும், காந்திஜிக்கு ரொம்ப ஆச்சரியம்.
'ஏனெனில் அவர், இவரை விட, தீவிரமான சுதேசி சிந்தனை உள்ளவர். காசியில், விஸ்வ வித்யாலயாவை உருவாக்கி, நம் கலாசாரத்தை போதித்து வருபவர். அப்படிப்பட்டவர், எப்படி அந்த அழைப்பை ஏற்றார்?' என, யோசித்தார், காந்திஜி.
அவரிடம், தான் அனுப்பிய பதில் கடித நகலை படிக்கக் கொடுத்தார், மாளவியா.
அதில், 'நான், இந்த அழைப்பை ஏற்று, வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்கிறேன். ஆனால், நான் இந்திய நாட்டில் பிறந்து வளர்ந்ததால், எனக்கு பழக்கமான உடை அணிந்து தான் வருவேன். ஏனெனில், நான் இந்த நாட்டின் பிரதிநிதியாகத்தான் அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறேன். அதனால், என் நாட்டு உடையில் தான் வர வேண்டியிருக்கும்.
'பல மொழி பெயர்ப்பாளர்களை அமர்த்திக் கொள்ளவும் வசதி படைத்தவர், ராணி. அதனால், என் நாட்டு மக்கள் சார்பாக, நான் பேசும் மொழியை, மொழி பெயர்க்க நீங்கள் ஏற்பாடு செய்ய முடியும். ராணியின் மாளிகையில், என்னுடைய சவுகரியத்துக்கு வேண்டிய வசதிகளை செய்வது ரொம்ப சுலபம் என நினைக்கிறேன்.
'நான் தினமும், கங்கை நீரில் குளிப்பது தான் வழக்கம்; கங்கை நீரைத்தான் குடிக்கிறேன். அதனால், ராணியின் விருந்தினராக இருக்கும் வரைக்கும், எனக்கு, இந்த வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்கணும்...' என, கடிதத்தில் எழுதியிருந்தார், மாளவியா.
வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள இருவருக்கும் அனுமதி கிடைத்தது. காந்திஜியும், மாளவியாவும், சுதேசி உடையிலேயே கலந்து கொண்டனர்.
அது மட்டும் இல்லை, அந்த ஏழு நாளும், அவர்கள் விரும்பியபடி, கங்கை நீரை பயன்படுத்தவும் ஏற்பாடு செய்திருந்தனர்.
'நம் அடிமைகள் தானே, நாம் எது சொன்னாலும் கேட்பர்...' என நினைத்த, இங்கிலாந்து ராணிக்கு, சரியான பாடம் கற்றுக் கொடுத்து விட்டனர், காந்திஜியும், மாளவியாவும்.