/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பிரிட்டன் திரையரங்கின், புதுமையான அறிவிப்பு!
/
பிரிட்டன் திரையரங்கின், புதுமையான அறிவிப்பு!
PUBLISHED ON : ஜூன் 23, 2024

பிரிட்டனில், 'குறிப்பிட்ட வெள்ளி நாணயம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு, இந்தத் திரையரங்கில் நடைபெறும் ஒவ்வொரு காட்சிக்கும், இலவச டிக்கெட் தரப்படும்...' என்று, ஒரு அறிவிப்பை வெளியிட்டது, பழமை வாய்ந்த, 'பிரிஸ்டல் ஓல்ட் விக்' என்ற திரையரங்கம்.
அந்த நாணயத்தைப் பயன்படுத்தி, அவர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுதும், இந்தத் திரையரங்கில் இலவசமாக படம் பார்த்துக் கொள்ளலாம். 1766ம் ஆண்டு பொறிக்கப்பட்ட அந்த நாணயங்கள், விரைவில் ஏலம் விடப்படவுள்ளது.
துவக்க காலத்தில், 'ராயல் தியேட்டர்' என அழைக்கப்பட்ட, 'பிரிஸ்டல் ஓல்ட் விக்' திரையரங்கம், 1764 - 1766களில் கட்டப்பட்டது.
திரையரங்கின், 50 பங்குதாரர்களுக்கு வழங்குவதற்காக, கடந்த, 1766ல், 50 வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டன. 50 பங்குதாரர்களும், திரையரங்கம் கட்டுவதற்காக, இந்திய மதிப்பில், தலா 5,055 ரூபாய் கொடுத்துள்ளனர். 18ம் நுாற்றாண்டில், அது மிகப்பெரிய தொகை.
திரையரங்கின் கட்டுமானத்திற்கு உதவியதற்காக, ஒவ்வொருவருக்கும் வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது. அதை வைத்து, திரையரங்கில் எந்த நிகழ்ச்சியையும், அவர்கள் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்.
மதிப்புமிக்க அந்த, 50 வெள்ளி நாணயங்களும், தற்போது ஏலம் விடப்பட உள்ளது. ஒவ்வொரு நாணயமும், குறைந்தது, 1.5 லட்சம் முதல், 2.5 லட்சம் ரூபாய் வரை ஏலம் போகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை, 20 வெள்ளி நாணயங்கள் பத்திரமாக உள்ளன. ஆனால், இவற்றில் சில நாணயங்கள் மட்டுமே ஏலம் விடப்பட உள்ளன. ஏனெனில், விற்பனையாளர்கள் அனைவருமே பிரிஸ்டலைச் சேர்ந்தவர்கள். தங்கள் வரலாற்றை பறைசாற்றும் முக்கியத்துவம் வாய்ந்த புதையலாக, அந்த நாணயங்களை அவர்கள் கருதுகின்றனர்.
இந்த, 20 நாணயங்கள் போக, மீதி, 30 நாணயங்களில், காலப்போக்கில், தொலைந்து போனதாம். மேலும் சில, மற்றவர்களுக்கு விற்கப்பட்டன. அதில் சில, போலியாகவும் வெளியிடப்பட்டன என்கின்றனர்.
பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தில் உள்ள ஆவணங்களின் உதவியால், சில நாணயங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. 1791ல், ஒரு நாணயம், 3,000 ரூபாக்கு விற்கப்பட்டுள்ளதாக ஆவணம் தெரிவிக்கிறது.
எம். முகுந்த்