
நல்லதை கற்றுக்கொடுங்கள்!
சில தினங்களுக்கு முன், ஒரு திருமண நிகழ்ச்சிக்காக, குடும்பத்துடன் மதுரை சென்றேன். முகூர்த்த நாள் என்பதால் பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்தது. மனைவி, குழந்தையுடன் ஒரு சீட்டில் அமர்ந்து பயணம் செய்தேன்.
வழியில், 5 வயது மதிக்கத்தக்க குழந்தையுடன், பேருந்தில் ஏறிய பெண்மணி, என் சீட் அருகே வந்து, அந்த குழந்தைக்கு உட்கார இடம் கேட்டார். மனிதாபிமான அடிப்படையில் நான், மனைவி, குழந்தை மூவரும் நெருக்கி அமர்ந்து, அந்த குழந்தைக்கு, என் அருகே உட்கார இடம் கொடுத்தேன்.
பேருந்து சிறிது துாரம் சென்றிருக்கும், நாங்கள் மூவரும் துாங்க ஆரம்பித்தோம். நாங்கள் துாங்குவதை கவனித்த, அப்பெண்மணி, என் சட்டை பாக்கெட்டிலிருந்த பணத்தை, என் அருகே இருந்த குழந்தை மூலமாக திருட முயன்றுள்ளார். யதார்த்தமாக கண் விழித்த மனைவி, என் பாக்கெட்டிலிருந்து பணத்தை, அந்த குழந்தை எடுத்து, அவள் அம்மாவிடம் கொடுக்கும்போது, கையும் களவுமாக பிடித்து விட்டாள்.
உடனே, பேருந்தில் உள்ள அனைவரும் அந்த பெண்மணியை திட்டி, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தோம். திருட்டு தொழில் செய்வதே தவறு. அந்த தொழிலில் பெண்கள் மட்டுமல்லாது, சிறு குழந்தைகளையும் ஈடுபடுத்துவது வேதனைக்குரிய செயல்.
பெற்றோர்களே... பிள்ளைகளுக்கு நல்லதை மட்டும் கற்றுக் கொடுங்களேன்!— எம்.கல்லுாரி ராமன், கரிசல்புலி, ராமநாதபுரம்.
'ஆபர்' என்ற வலையில் சிக்காதீர்!
தெரிந்த ஒருவர், ஊரில், புதிதாக பிரியாணி கடை ஒன்றைத் துவக்கினார். வாடிக்கையாளர்களை கவர, 'ஒரு பிளேட் பிரியாணி வாங்கினால், இன்னொரு பிளேட் இலவசம்...' என்று, அடிக்கடி, 'ஆபரில்' விற்று வந்தார்.
அரிசி மற்றும் இறைச்சி விற்கும் விலையில், அது எப்படி சாத்தியமாகிறது என, ஒரே குழப்பம் எனக்கு. அவரிடம் அதுபற்றி விசாரித்ததில் தெரிந்தது, அதிர்ச்சியான உண்மை.
அன்றன்று விற்காமல் மீந்து போகும் பழைய பிரியாணியை, மறுநாள் சூடுபடுத்தி, 'ஆபர்' என்ற பெயரில், வரும் வாடிக்கையாளர்கள் தலையில் கட்டி, காசு பார்த்து விடுவாராம். சில நாட்களில், அவரது நண்பர்களின் கடைகளில் மீந்து போகும் பிரியாணியையும் சேகரித்து வந்து, இவர்கள் கடையில் வைத்து, 'ஆபரில்' விற்று விடுவாராம்.
வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, வாடிக்கையாளர்களின் உடல்நலத்தில் விளையாடும், இதுபோன்ற சுயநலவாதிகளிடம், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 'ஆபர்' என்றவுடன், அடித்து பிடித்து ஓடுவதையும், தவிர்ப்பது நல்லது!
— ஆ.வீரப்பன், திருச்சி.
கோவிலில் மரக்கன்றுகள்!
எங்கள் ஊரின் வெளிப்பகுதியில் உள்ள மிகப்பழமையான விநாயகர் கோவிலுக்கு சென்றேன்.
சிறிய கோவில் என்றாலும், பசுஞ்சோலையாக காட்சியளித்தது. கோவில் வாசலில், 'காணிக்கையை விட மரக்கன்றுகள் தாருங்கள், இறையருள் கிட்டும்...' என்ற அறிவிப்பு பலகை இருக்க, அது பற்றி, பூசாரியிடம் விசாரித்தேன்.
கோவிலை சுற்றி நட்டு பராமரிக்கப்படும் நாகலிங்கம், வெண் தேக்கு, மயிலை, அகில், சந்தனம், சாம்பிராணி மற்றும் ருத்ராட்சம் என, அரிய வகை மரங்களை காட்டி, என்னை போன்றவர்களை வியக்க வைத்தார்.
'கண்மாய் அருகில், கோவிலுக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலம் உள்ளது. தண்ணீர் வளம் மிக்கதாக இருந்தாலும், சரி வர பராமரிக்காமல் புதர் மண்டிக் கிடந்தது. அன்பர்களின் ஆதரவில், புதர்களை அகற்றி, அரிய வகை மரங்களை நட்டு பராமரிக்கும் யோசனை தோன்றியது.
'பக்தர்களும் சம்மதித்து, மரக்கன்றுகள் வாங்கி வந்து நட்டு, உதவி செய்தனர். சில பக்தர்கள் வந்து செல்லும்போது, அரிய வகை மரங்களான, ருத்ராட்சம், பெருநெல்லி, சாம்பிராணி, சந்தன மரங்களை பார்த்து அறிந்து மகிழ்கின்றனர்.
'எஞ்சியுள்ள நிலத்தில் நடுவதற்கு, மரங்களை கேட்டுள்ளோம்...' என்றார், பூசாரி.
மரங்களுக்காக காத்திருக்கும் இவர் வித்தியாசமானவராக தோன்றியது. மனதார அவரை வாழ்த்திவிட்டு வந்தேன்.
— பி. குமாரவேல், ராஜபாளையம்.