PUBLISHED ON : ஜூன் 30, 2024

விதை போட்டவன் உறங்கினாலும், விதை உறங்காது; மரம் சும்மா இருந்தாலும், காற்று அதை சும்மா விடாது என்பர். அதுபோல, வாசன், 'தில்லானா மோகனாம்பாள்' கதையை, படமாக்குவதை மறந்து விட்டாலும், அந்த கதையை திரைப்படம் ஆக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார், நாகராஜன்.
'தில்லானா மோகனாம்பாள்' கதையின் உரிமையை விலைக்கு வாங்கும் பொருட்டு வாசனை மீண்டும் அணுகினார், ஏ.பி.என்.,
'தாங்கள், 'தில்லானா மோகனாம்பாள்' கதையை, இதுவரை திரைப்படமாக எடுக்கவில்லை. எனவே, தாங்கள் மனது வைத்து, அக்கதையின் உரிமையை எனக்குத் தந்தால், அதை நான் திரைப்படமாக தயாரிக்கலாம் என்று நினைக்கிறேன்...' என்றார், ஏ.பி.என்.,
'அக்கதையின் உரிமையை நான் உங்களுக்கு மனப்பூர்வமாக அளிக்கிறேன். அத்துடன் இந்தக் கதையை எடுக்கும் முழுத் தகுதியும், திறமையும் உங்கள் ஒருவருக்கே இருக்கிறது என்பதை நான் உணர்ந்துவிட்டேன்...' என்றார், வாசன்.
கதையை தர சம்மதித்ததால், 'கதையின் உரிமையைப் பெற எவ்வளவு தொகை வேண்டும்...' என்று கேட்டார், நாகராஜன். 25 ஆயிரம் ரூபாய் தான் கேட்டார், வாசன். அதை கொடுத்து கதையின் உரிமையை வாங்கி விட்டார், நாகராஜன்.
வாசன், 50 ஆயிரம் ரூபாயாவது கேட்பார் என்று நினைத்து, பணத்தை எடுத்துச் சென்றிருந்தார், ஏ.பி.என்., மீதிப் பணத்தை அப்போது, மருத்துவமனையில் உடல் நலம் இல்லாமல் படுத்திருந்த அக்கதையின் ஆசிரியர், கொத்தமங்கலம் சுப்புவுக்கு கொடுக்க நினைத்தார். அவரை சந்தித்து, கையிலிருந்த மீதி பணத்தை அவரிடம் கொடுத்தார்.
'இப்போது தான், வாசன், 25 ஆயிரம் ரூபாய் பணத்தை, நீங்கள், 'தில்லானா மோகனாம்பாள்' கதை உரிமைக்காக கொடுத்ததாகச் சொல்லி, என்னிடம் கொடுத்து சென்றார். அதுவே எனக்கு போதும். நீங்கள் வேறு ஏன் அனாவசியமாக மேலும் பணம் கொடுக்கிறீர்கள்...' என்றார், கொத்தமங்கலம் சுப்பு.
'அதுவேறு இதுவேறு. இது, நான் உங்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பது...' என்று சொல்லி கொடுத்தார், நாகராஜன்.
தில்லானா மோகனாம்பாள் படத்துக்கான இசை அமைப்பு வேலையை, கே.வி.மகாதேவனிடம் கொடுத்தார். பாடல்கள் எழுதும் வேலையை வழக்கம் போல, கண்ணதாசனிடம் ஒப்படைத்தார்.
தில்லானா மோகனாம்பாள் படத்தை, அமெரிக்காவில் ஒரு பல்கலைக் கழகத்தில் நடனத்தையும், நாதஸ்வரத்தையும் கற்றுக் கொடுப்பதற்கு தேவையான பாடமாக வைத்துள்ளனர். இதிலிருந்தே, அதன் நேர்த்தியான படைப்புத்திறன் தெரிகிறது.
இப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்தவர், நாகேஷ். திருவிளையாடல் தருமி பாத்திரத்தைப் போல தில்லானா மோகனாம்பாள் படத்தில், வைத்தி பாத்திரமும் மிகவும் பேசப்பட்டது. அத்துடன், நாகேஷின் திரைப்பட பயணத்தில் முக்கிய மைல்கல் எனலாம்.
வைத்தி பாத்திரத்துக்கு, நாகேஷை, ஒப்பந்தம் செய்து விட்டார், ஏ.பி.என்., அப்போது, நாகேஷ் மனைவி ரெஜினாவின் தம்பி கொலை வழக்கு நடந்து கொண்டிருந்தது. அவ்வழக்கில் ஒருவேளை நாகேஷ் கைதாகி சிறைக்கு செல்லலாம் என்ற நிலை இருந்தது.
அப்போது, ஏ.பி.நாகராஜனுக்கு நெருக்கமான சிலர், 'அண்ணே, நாகேஷ் மனைவி ரெஜினாவின் தம்பி கொலை வழக்கில், அவர் சிறைக்குப் போயிடுவார்ன்னு பேசிக்கிறாங்க. அதனால், அவரை அப்பாத்திரத்திலிருந்து நீக்கிட்டு வேறு யாரையாவது போடலாம்...' என்றனர்.
'வைத்தி பாத்திரத்தை நாகேஷைத் தவிர, வேறு யாராலும் சிறப்பாக நடிக்க முடியாதுய்யா; அவர், சிறைக்குப் போக மாட்டார். ஒரு வேளை, சிறைக்கு போனால், அவர் வரும் வரை காத்திருந்து, வந்தபின் படப்பிடிப்பை நடத்தி படத்தை வெளியிடுவேன்...' என்றார், ஏ.பி.என்.,
நல்ல வேளை, நாகேஷ் சிறைக்குப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகவில்லை. அதனால், அப்பாத்திரத்தில் நாகராஜன் எதிர்பார்த்தது போல், மிக சிறப்பாக நடித்து, அவரின் நம்பிக்கையை காப்பாற்றினார்.
பொதுவாகவே, ஆசிரியர் சொல்லி கொடுத்ததை அடிப்படையாக வைத்து, மேலும் தன்னை செழுமைப்படுத்தி கொள்பவனே, நல்ல மாணவன். இது, பொதுக்கல்விக்கும் பொருந்தும்; திரைப்படத் தொழிலின் நடிப்புக்கும் பொருந்தும்.
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும். வைத்தி பாத்திரத்தை நாகேஷ், சிறப்பாக செய்வார் என, ஏ.பி.என்., நினைத்ததற்கு காரணம், திருவிளையாடல் படத்தில் தருமி பாத்திரத்துக்கு அவர் சொல்லிக் கொடுத்ததை உள் வாங்கி, அதைத் தன் பாணியில் மிகவும் சிறப்பாக நடித்தார்.
தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு பாட்டு எழுதும்போது அண்ணாதுரை, புற்று நோயால் அவதிப்பட்டு கொண்டிருந்த நேரம். அரசியல் வேறுபாடுகளின் காரணமாக, கண்ணதாசன், அண்ணாதுரையை நேரடியாக சந்திக்க முடியாத சூழ்நிலை. ஆனால், அண்ணாதுரை மீது கண்ணதாசனுக்கு எப்போதும் தனிப்பட்ட அன்பு உண்டு. அதனால், அவரிடம் நலம் விசாரிப்பது போல, ஒருபாடல் எழுத நினைத்தார்.
அப்போது, தில்லானா மோகனாம்பாள் படத்தில், கத்திக் குத்தில் காயம் ஏற்பட்டு கதாநாயகன் கைகளில் கட்டுப் போட்டிருப்பான். அந்த காயத்துடன், கதாநாயகி ஆடும் நடனத்துக்கு நாதஸ்வரம் வாசிப்பான். அதைப் பார்த்த கதாநாயகி, கதாநாயகனை நலம் விசாரிப்பது போல், ஒரு பாடல் எழுத வேண்டும் என்றார், இயக்குனர் ஏ.பி.என்.,
அந்த பாடல்...
— தொடரும்.
நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.- கார்த்திகேயன்