sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 30, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 30, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா -கே

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று மாலை, 'பீச்'சில் கூடியிருந்தது, நண்பர்கள் குழு.

புதுவரவாக, அரசியல் கட்சியின் நண்பர் ஒருவரும் வந்திருந்தார்.

தேர்தல் முடிவு பற்றி, காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவதை, காதில் வாங்கியபடி, மேகமூட்டத்துடன் ரம்மியமாக இருந்த, 'கிளைமேட்'டை ரசித்துக் கொண்டிருந்தேன், நான்.

'நல்ல வேளை, சோழர் காலத்துல பிறக்காம தப்பிச்சோம். அப்பல்லாம் பிறந்திருந்தா, எங்களை மாதிரி ஆசாமிகள் தேர்தல்லயே நிற்க முடியாது...' என்றார், அரசியல் நண்பர்.

கவனத்தை அவர் பக்கம் திருப்பி, 'ஏன், அப்படியா சொல்றீங்க?' என்றேன்.

'சோழர் கால தேர்தல் விதிமுறைகளை, சமீபத்தில் தான் தெரிஞ்சிக்கிட்டேன். சோழர் வரலாறு சம்பந்தமான புத்தகம் படித்தேன். செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூர் கல்வெட்டுகள்ல, தேர்தல் விதிமுறைகள் பற்றிய விபரம் எல்லாம் இருப்பதாக, அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது॥...'

'அப்படின்னா, விபரமா சொல்லுங்க...' என்றேன்.

கூற ஆரம்பித்தார்:

சோழர் காலத்தில், ஒருத்தர் தேர்தல்ல வேட்பாளரா நிற்கணும்ன்னா, அவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் மற்றும் இருக்கக் கூடாத தகுதிகள் என்னென்ன, என்பதைப் பற்றி அந்தக் கல்வெட்டுல செதுக்கி வைத்திருக்கின்றனராம்.

முதல்ல,தேர்தல்ல நிற்க விரும்புகிறவருக்கு, இருக்க வேண்டிய தகுதிகள் என்னென்ன என்று பார்ப்போம்:

முதல் தகுதி: அவர், வரி செலுத்தக்கூடிய நிலத்தின் சொந்தக்காரரா இருக்கணும்.

இரண்டாவது: அவருக்கு, தன் நிலத்துலேயே, கட்டப்பட்ட சொந்த வீடு இருக்கணும்.

மூன்றாவது: அவருக்கு, வயது 30க்கு மேல், 60க்குள் இருக்கணும்.

நான்காவது: துாய்மையான வாழ்க்கை நெறியும், வாய்மையும் உள்ளவரா இருக்கணும்.

இந்த தகுதிகள் எல்லாம் உள்ள ஒருத்தர்தான், தேர்தல்ல நிற்க முடியும்.

எப்படிப்பட்டவர்கள், தேர்தல்ல நிற்க முடியாதுங்கற விபரமும், அந்த கல்வெட்டுல இருக்கிறது. அது:

*   அவர் எந்த ஒரு வாரியத்துலேயும் கடந்த, மூன்று ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கக் கூடாது.

* ஊழல், வன்முறை, தீயச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடாது.

*    இப்படிப்பட்டவர்களது உறவினர் களாகவும் இருக்கக் கூடாது.

'என் தங்கச்சி பிள்ளைதான் இப்படி பண்ணினான். அதுக்கு நான் என்ன பண்றது?' அப்படின்னு சப்பைக்கட்டு கட்டிட்டு இருக்க முடியாது.

* தங்களுடைய பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்திருந்தாக்கூட அவங்க, வேட்பாளராகவோ, வாக்காளர்களாகவோ இருக்கறதுக்கு அருகதை இல்லை.

* ஒரு தரம் தப்பு பண்ணினா அவ்வளவுதான். அதுக்கப்புறம் அதுக்கு என்னதான் பரிகாரம் பண்ணினாலும், அவரு தேர்தல்லயும் நிற்க முடியாது; ஓட்டும் போட முடியாது.

இந்த விதிமுறைகள்லாம் இப்ப இருந்ததுன்னா, நானோ, என்னுடைய கட்சி நண்பர்களோ, தேர்தல் கிட்டேயே நெருங்க முடியாது. பேசாம ஒதுங்கிப் போய்விட வேண்டியது தான்.

- இவ்வாறு கூறி முடித்தார்.

அப்படிப்பட்டவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்தா எவ்வளவு நல்லா இருக்கும், என்று நினைத்துக் கொண்டேன்.

'சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், திருவள்ளூர் தொகுதியில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் இறங்கி, 'வார் ரூம்' யுக்தியை பயன்படுத்தி, அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்ற, சசிகாந்த் செந்தில், நினைவுக்கு வர்றார்...' என்றேன்.

'யாருப்பா அவர்? 'வார் ரூம்' யுக்தி என்றால் என்ன?' என்று விசாரித்தார், அன்வர் பாய்.

'பொறியியல் பட்டதாரியான அவர், ஐ.ஏ.எஸ்., படித்து சிறிது காலம் கலெக்டராக, கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்தார். பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் என, பன்முக திறமைக் கொண்டவர். அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, கட்சிக்கு வலிமை சேர்க்க வேண்டிய முக்கிய பொறுப்பு வகித்தவர்.

'வார் ரூம் யுக்தி என்றால், மக்களை நேரிடையாக சந்தித்து, அவர்கள் அன்புக்கு பாத்திரமாகி, அவர்கள் குறைகளை கேட்டு, தீர்வு காண்பது, தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை உடனடியாக கொண்டு வருவது, அடிக்கடி தொகுதிக்கு சென்று, மக்கள் மனதில் இடம் பிடிப்பது. இதெல்லாம் கட்சி வெற்றி பெற செய்ய வேண்டிய யுக்திகள்...' என்றார், அரசியல் நண்பர்.

'இனி வரும் தேர்தலிலாவது, வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதிக்கு செல்லாமல், பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அடிக்கடி அங்கு சென்று, மக்களை சந்தித்து, வேண்டிய உதவிகள் செய்து, நல்ல பெயர் எடுத்தால், சுலபமாக வெற்றி கிடைக்கும்.

'அது இல்லாமல், தேர்தல் நேரத்தில், டீ கடைக்கு சென்று, டீ போடுவது, பரோட்டா, தோசை சுடுவது, சாக்கடையை சுத்தம் செய்வது, துணி துவைத்து கொடுப்பது, குழந்தையை குளிப்பாட்டுவது என்று, 'பாவ்லா' காட்டாமல், உண்மையாக உழைத்தால், 'நோட்டா'வுக்கு போகும் ஓட்டுகள் உட்பட மொத்த ஓட்டும், இவர்களுக்கே திரும்பும்.

'காமராஜர் போல, அரசியல் என்றாலே, மக்களுக்காக உழைப்பது என்ற எண்ணம் இருந்தாலே பாதி வெற்றிதான்...' என்றார், லென்ஸ் மாமா.

அரசியல் நண்பர் உட்பட அனைவரும், லென்ஸ் மாமாவின் கூற்றை ஒப்புக்கொண்டதற்கு அடையாளமாக, 'தம்ஸ் அப்' காட்டினோம்.





அலுவலக பணியாளர் ஒருத்தருக்கு, திடீர்னு உடம்பு சுகமில்லாம போச்சு. மெடிக்கல், 'லீவ்' போட்டுட்டு, மருத்துவமனையில் படுத்திருந்தார்.

அலுவலகத்திலிருந்த சக ஊழியர்கள் எல்லாரும் சேர்ந்து போய், அவரை மருத்துவமனையில் பார்த்தாங்க. இவங்களை பார்த்ததும், கண்ணீர் விட்டு அழ ஆரம்பிச்சுட்டார்.

'அழாதீங்க சார், சீக்கிரம் குணமாயிடுவீங்க...' என்று, ஆறுதல் சொன்னாங்க.

'நான் என் உடம்பை பற்றி நினைச்சு அழலேங்க. ஆபீஸ்ல நான் பார்த்துக்கிட்டிருந்த வேலையெல்லாம் அப்படியே கிடக்குமேன்னு நினைச்சு அழறேன்...' என்றார்.

இவர் இப்படி சொன்னவுடனே, வந்த எல்லாரும் அழ ஆரம்பிச்சுட்டாங்க.

'நீங்க, ஏன் அழறீங்க...' என்று கேட்டார், இவர்.

'ஆபீஸ்ல, உங்க வேலை எதுவாயிருந்தாலும், அதையெல்லாம் செஞ்சு முடிக்க, நாங்க தயாரா இருக்கோம். ஆனா, இதுவரைக்கும் ஆபீஸ்ல, நீங்க, என்ன வேலை செய்துக்கிட்டிருந்தீங்கன்னு எங்க யாருக்குமே புரியல. அதனால தான் அழறோம்...' என்றனர்.

- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.






      Dinamalar
      Follow us