
ஒரு ஊரில், சாமியார் ஒருவர் இருந்தார்.
ஒருநாள், மடத்து சமையல் அறையில், பாத்திரங்களை துலக்கி சுத்தப்படுத்தி கொண்டிருந்தார், அவர்.
அச்சமயம், யம துாதர் ஒருவர், அவர் முன் வந்து, 'கடவுள் என்னை உன்கிட்டே அனுப்பி இருக்கார். தேவலோகத்தில் வாசம் செய்வதற்கு உங்களுக்கு நேரம் வந்துவிட்டது...' என்றார்.
'கடவுளுக்கு என் ஞாபகம் வந்ததுக்கு நன்றி. ஆனாலும், இப்ப இங்கே பாரு, எவ்வளவு -பாத்திரங்கள் சுத்தப்படுத்த வேண்டியிருக்கு. நான், நன்றி கெட்டவனா இருக்க விரும்பலை. இந்தப் பணியை முடிக்கிற வரைக்கும், என் தேவலோக வாழ்வை தள்ளி வைக்க முடியுமா?' என்றார்.
'சரி...' என்று திரும்பினார், யம துாதர்.
மற்றொரு நாள், மடத்தின் தோட்டத்தில் களைகளை பறித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார், சாமியார். அந்த சமயத்தில் அவர் முன் வந்து நின்றார், யம துாதர்.
'இதோ பாரு, இந்த தோட்டம் முழுவதும் எவ்வளவு களைகள் மண்டி கிடக்கு. தேவலோகம் கொஞ்ச காலம் எனக்காக பொறுத்திருக்கலாம்ன்னு நினைக்கிறேன்...' என்றார்.
சிரிச்சிக்கிட்டே, மறைஞ்சுட்டார், யம துாதர்.
களையெடுப்பது, தானியக் களஞ்சியத்துக்கு வர்ணம் பூசுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டார், சாமியார்.
இன்னொரு நாள், மருத்துவமனையில் நோயாளிகளை கவனிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார், அந்த சாமியார். ஒரு நோயாளியின் தாகத்துக்கு தண்ணீர் கொடுத்து விட்டு நிமிர்ந்து பார்த்தபோது, மறுபடியும் அவர் முன் தோன்றினார், யம துாதர்.
இந்த முறை, சாமியார் தன்னலமற்றவராக, பேரன்பை காட்டக் கூடிய வகையில், தன்னுடைய இரு கைகளையும் உயர்த்தி, பிணியால் வாடிய நோயாளிகளின் பக்கம் திருப்பி காட்டினார்.
எதுவும் சொல்லாமல் மறைஞ்சுட்டார், யம துாதர்.
அன்று மாலை, மடத்தில் உள்ள தன் அறைக்கு போய் இளைப்பாறினார். யம துாதர் வந்ததும், கடவுள் விருப்பத்தை பல நாள் தள்ளிப் போட்டு வந்ததையும் நினைத்துப் பார்த்தார். திடீர்ன்னு தான் முதுமை மற்றும் சோர்வடைவதை உணர்ந்தார்.
'கடவுளே, யம துாதனை மறுபடியும் என்னிடம் அனுப்பினால், நான் சந்திக்கிறதுக்கு ஆவலாக இருக்கேன்...' என, நினைக்கும் போதே, வந்து நின்றார், யம துாதர்.
நிமிர்ந்து பார்த்தார், சாமியார்.
'நீ, இப்பவே என்னை தேவலோகத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போக விரும்பினால், நான் வர தயாராக இருக்கிறேன்...' என்றார்.
'நீங்க இதுவரைக்கும் வேற எங்கே இருந்ததா நினைக்கறீங்க?' என்று கூறி, மறைந்தார்.
தேவலோகம் என்றால் என்னவென புரிந்து கொள்வதற்காக, இந்த சம்பவம் நமக்கு உதவும். தொண்டு செய்வதை விட, பெரிய செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அது, நம் மனதுக்கு கொடுக்கிற சுகத்தை, வேறு எதுவும் கொடுக்க முடியாது.
பி. என். பி.,