/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஒலிம்பிக்கில் சுவாரஸ்யமான தகவல்கள்!
/
ஒலிம்பிக்கில் சுவாரஸ்யமான தகவல்கள்!
PUBLISHED ON : ஜூன் 30, 2024

கிரீஸ் நாடு, உலகிற்கு வழங்கியது தான், ஒலிம்பிக்ஸ். இதில், அனைத்து நாடுகளை ஒன்றிணைப்பதன் மூலம் சகோதரத்துவம் வளர வழி வகுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஒலிம்பிக் போட்டி, கிரேக்க நாட்டில் நடத்தப்பட்டது. இங்கு நடந்த போட்டிகளுக்கு கிரீஸின் புண்ணியத் தலங்களில் ஒன்றான, ஒலிம்பியா என்ற பெயரே சூட்டப்பட்டது.
இதன் சின்னம், ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட ஐந்து வளையங்கள். நீலம், சிகப்பு, கருப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய வண்ணங்களில், இந்த வளையங்கள் இருக்கும். இந்த வளையங்கள், ஐந்து கண்டங்களை குறிக்க அமைக்கப்பட்டது. இந்த ஐந்து வண்ணங்களில், குறைந்தது ஒரு வண்ணமாவது, ஒவ்வொரு நாட்டின் தேசிய கொடியில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.
கடந்த, 1896ல் நவீன ஒலிம்பிக் போட்டிகள், கிரேக்க நாட்டின், ஏதென்ஸ் நகரில் நடந்தது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய வளர்ச்சி, 20ம் நுாற்றாண்டில் தான் நடந்தது. பல்வேறு விளையாட்டுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. அட்லாண்டாவில், 1996ல், நவீன ஒலிம்பிக் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
ஒலிம்பியாவில், சூரிய ஒளிக்கதிர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, பந்தயம் நடைபெறும் நாட்டிற்கு, தொடர் ஓட்டக்காரர்களால் எடுத்து வரப்படுகிறது. தரை, வான் மற்றும் கடல் வழியாக ஒலிம்பிக் ஜோதி வரும். முதல் முறையாக, 2000ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு, தண்ணீருக்கு அடியிலும் ஒலிம்பிக் ஜோதி எடுத்து வரப்பட்டது.
வெள்ளைப் பின்னணியில் அமைந்திருக்கும் ஐந்து வளையங்களை கொண்டது, ஒலிம்பிக் கொடி. 1920ல், பெல்ஜியம், ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக்கில் தான், முதல் ஒலிம்பிக் கொடி பறந்தது. அதே ஆண்டில் அது காணாமல் போய், 80 ஆண்டுகளுக்கு பின், 2000ம் ஆண்டு, சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது திரும்ப கிடைத்தது.
சமாதானச் சின்னமாக புறாக்களை பறக்க விடும் பழக்கம், 1920ல், பெல்ஜியம் ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவின் போது ஆரம்பித்தது. அப்போது, முதல் உலகப் போரில் ஈடுபட்ட அனைத்து நாடுகளும் சமாதானமாக செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டன. அது முதல் அனைத்து ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவிலும், சமாதானப் புறாக்கள் பறக்க விடப்படுகின்றன.
உலக அமைதியை வலியுறுத்தும் விதமாக, புறாக்களை, ஒலிம்பிக் நிறைவு விழாவிலும் பறக்க விடுவது மரபு. போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை அடிப்படையில், புறாக்களை பறக்க விடுவர்.
ஆசியாவில், முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியை, ஜப்பான் நாடு, 1964ல் நடத்தியது. இதற்காக, மூன்று பில்லியன் (௧ பில்லியன் - ௧௦௦ கோடி ரூபாய்) டாலர்கள் செலவழித்தது. இதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு, அமெரிக்க அணுகுண்டு தாக்குதலுக்கு இலக்கான நாகசாகி, ஹீரோஷிமா நகரை புதுப்பித்துக் கொண்டது.
கடந்த, 1968ல் மெக்சிகோவில் ஒலிம்பிக் போட்டி நடந்த போது, போட்டிகள் அனைத்தும் மிக உயரமான இடத்தில் நடந்தது. கடல் மட்டத்திலிருந்து, 2,300 மீ., உயரத்தில், மெக்சிகோ சிட்டி மைதானம் இருந்தது. அதுவே ஜம்பிங், வட்டு எறிதல், எடை துாக்குதல் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு எளிதாக இருந்தது. இது, அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் தான், பல உலக சாதனைகள் ஏற்படுத்தப்பட்டன.
கடந்த, 2004ல், கிரேக்க நாட்டில் நடந்த, ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு, ஒரு லட்சம் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக, கிரீஸ் அரசு, 7,000 கோடி ரூபாய் செலவு செய்தது. இது, ஒரு ஒலிம்பிக் சாதனை. இந்தளவுக்கு வேறு எந்த ஒலிம்பிக்கிலும் பாதுகாப்பிற்கு செலவு செய்யப்படவில்லை.
கடந்த, 2008ல், சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு, ஆசிய செல்வந்தர்களில் முதலிடத்தில் இருந்தவரும், ஹாங்காங் நாட்டின் பிரபல தொழிலதிபருமான, லிகா சிங், 65 கோடி ரூபாய், நன்கொடையாக வழங்கினார். ஒலிம்பிக் போட்டிக்கு இந்தளவுக்கு வேறு யாரும் நன்கொடை தந்ததில்லை.
இந்த ஒலிம்பிக், சீனாவின் அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படும், எட்டு என்ற எண்ணை மையப்படுத்தி நடந்தது. 2008ல், 8வது மாதமான ஆகஸ்ட், 8ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, ஒலிம்பிக் போட்டி துவங்கியது.
கடந்த, 2000ல், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கங்கள், அந்நாட்டின் செல்லாத, இரண்டு சென்ட் நாணயங்களை உருக்கி உருவாக்கப்பட்டது.
கடந்த, 2020ல், ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதற்காக, 5,000 மெடல்கள் தேவைப்பட்டன. இதற்கு தேவையான தங்கம், வெள்ளியை பழைய மொபைல்போன்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை பொது மக்களிடமிருந்து சேகரித்து அதிலிருந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை செய்தது.
இதுவரை, 32 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 33வது ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் நாட்டு தலைநகர், பாரீஸில், 2024, ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடைபெற உள்ளது. இது, பிரான்ஸ் நடத்தப் போகும் மூன்றாவது ஒலிம்பிக் போட்டி. இதற்கு முன், மூன்று ஒலிம்பிக் போட்டியை நடத்தியது, இங்கிலாந்து.
கோவீ. ராஜேந்திரன்