
ம.சுபாஷினி எழுதிய, 'தமிழரும் தொழில்நுட்பமும்' நுாலிலிருந்து:
கப்பல் கட்டுவது, பராமரிப்பது, நீர்வழிச் செலுத்துவது என, பழங்காலந்தொட்டு கப்பல் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர், தமிழர்கள். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடல், கலம் போன்ற சொற்களும், அவை தொடர்பான செய்திகளும் மிக அதிகமாய் விரவி காணப்படுகின்றன.
மார்க்கோபோலோ என்ற வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கடல் பயணி, இந்திய கப்பல் கட்டும் திறமைக்கு சான்றிதழ் அளித்துள்ளார். 300 பேரைக் கொண்டு கடலில் செல்லும்படி அமைக்கப்பட்ட கப்பல்களை தமிழகத்தில் பார்த்து, வியந்துள்ளார்.
மொரிஷியசில் நடந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், ஆராய்ச்சி கட்டுரை படித்த, பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஒருவர், 'மாலுமி கணக்கன் என்னும் தமிழன் துணையால், வாஸ்கோடகாமா, சேர நாட்டு துறைமுகத்துக்கு வந்தான். பல மேற்காசிய துறைமுகங்களில் தமிழ்நாட்டு கப்பலோட்டிகளும், கப்பல்களை பழுது பார்ப்பவர்களாக தமிழர்கள் இருந்தனர்...' என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
கப்பலை செய்ய பயன்படுத்தப்படும் மரத்தை, நிறங்களை பார்த்து தேர்ந்தெடுத்துள்ளனர். கப்பல் செய்ய மரம் வெட்டும் போது, கறுப்பாக இருந்தால், பாம்பு வாழ்வதாகவும், தைலம் போல் இருந்தால், தேள் வாழ்வதாகவும், பல நிறங்கள் காணப்பட்டால், தவளை வாழ்வதாகவும், அதிக சிவப்பாக காணப்பட்டால், பல்லி வாழ்வதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
கறுப்பு நிறம் கொண்ட மரக்கலம், தீமை ஏற்படுத்தும் என்றும், வெள்ளை நிறம் கொண்டது, நன்மை விளைவிக்கும் என்றும், ஓட்டை மரம் இருந்தால், துன்பம் ஏற்படும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
புதுமனை புகு விழா, திருமண நாள் போன்றவற்றிற்கு நல்ல நாள் பார்ப்பது போல, கப்பல் கட்டுவதற்கும் கால நேரம் பார்ப்பது உண்டு. 27 நட்சத்திரங்களில் கடைசி ஏழு நட்சத்திரங்கள் தவிர்த்து, கப்பலை கட்டத் துவங்குவர். மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய நான்கு ராசிகளிலும் கப்பல் கட்ட துவங்கக் கூடாது.
கப்பலின் இதயப் பகுதியாக கருதப்படும் அடிப்பகுதிக்கும், சாஸ்திரங்கள் வைத்துள்ளனர். அடி மரத்தின் நீளத்தை அளந்து, ஒரு முழத்துக்கு, 24 அங்குலமாகப் பெருக்கி வந்த தொகையை, 27ல் கழித்து மீதியை வைத்து, அசுவினி நாளில் கப்பல் கட்ட ஆரம்பிப்பர்.
இவ்வாறு கப்பல் கட்டி முடித்த பின், கடலில் கொந்தளிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு மஞ்சள், சந்தனம், தேன், வில்வம் மற்றும் சூடம் போன்ற பொருட்களை கொண்டு, எட்டு திசைகளில் உள்ள தெய்வங்களுக்கும் பூஜைகள் செய்த பிறகு, பயணம் மேற்கொண்டுள்ளனர்.
காற்றின் திசையை அறிந்து கப்பல்களை திறம்பட செலுத்தும் முறையையும், தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
கடல் ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக தான் பிறந்த இடம் தேடி, நீண்ட துாரம் பயணம் செய்கின்றன. அவை செல்லும் வழியை செயற்கைக்கோள்கள் மூலம் தற்போது ஆராய்ந்துள்ளனர். ஆனால், அக்காலத்திலேயே ஆமை செல்லும் வழியில் உள்ள நாடுகளுடன், தமிழர்கள் வணிக தொடர்பு கொண்டிருந்ததை அறிய முடிகிறது.
எனவே, பழந்தமிழர்கள், ஆமைகளை வழிகாட்டிகளாக பயன்படுத்தி, கடல் பயணம் செய்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
- நடுத்தெரு நாராயணன்