sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூன் 30, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 30, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 36 வயது ஆண். படிப்பு: பி.இ., என், 15 வயதில், அப்பா காலமாகி விட்டார். எனக்கு, இரு தங்கைகள். பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்த அம்மா தான் எங்களை வளர்த்து, ஆளாக்கினார். அம்மா பாட்டியும், தாத்தாவும் எங்களுக்கு துணையாக இருந்தனர்.

நான், கட்டுமான நிறுவனம் ஒன்றில், முதன்மை பொறியாளராக பணிபுரிகிறேன். இரு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்த பின், எனக்கு திருமணமானது.

எனக்கு, 5 வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. மனைவி, இல்லத்தரசி. கொஞ்சம் வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். அதிக கஷ்டம் தெரியாமல் வளர்ந்தவள். தற்சமயம், பணி ஓய்வு பெற்று விட்டார், என் அம்மா.

சீராக போய் கொண்டிருந்த வாழ்க்கையில், புயல் வீச ஆரம்பித்தது. ஒரு ஆண்டுக்கு முன், எனக்கு, கையில் வெண்புள்ளி தோன்ற ஆரம்பித்தது. ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்து விட்டேன். அதன் விளைவு, கொஞ்சம் கொஞ்சமாக கை, கால் என பரவியது.

உடனடியாக மருத்துவரிடம் சென்று காண்பித்ததில், மெலனின் குறைபாட்டால் ஏற்பட்டது தான் என்று கூறி, மாத்திரை, மருந்து எழுதி கொடுத்தார். உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கும்படி கூறினார்.

முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், தொற்று வியாதி அல்ல என்றதால், சற்று ஆறுதல் அடைந்தோம். ஆனால், மனைவியால் இதை ஜீரணிக்க முடியவில்லை. என்னை, தனிமைப்படுத்த ஆரம்பித்தாள். தனி தட்டு, டம்ளர் கொடுத்து, ஹாலின் ஓரம் கட்டிலை போட்டு படுக்க சொல்லி விட்டாள்.

நானும், என் அம்மாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், அவளுக்கு புரியவே இல்லை. இத்தனைக்கும் அவள், பட்டப்படிப்பு படித்தவள். மருத்துவரிடம் அழைத்து சென்று அவளையே பேச செய்தேன். அப்போதும் சமாதானம் ஆகாமல், குழந்தையை கூட என்னுடன் பழக விட மறுக்கிறாள்.

மருத்துவர் என்னை எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்று அறிவுறுத்தினாரோ, அந்த உணவு வகைகளை செய்து வைப்பாள்.

என் அம்மா தான், முடியாமல் எனக்காக தனியாக சமைத்து தருவார். அவள் பெற்றோரை அழைத்து, நிலைமையை விளக்கினோம். இது அவளுக்கு பிடிக்காமல், தற்சமயம் விவாகரத்துக்கு வற்புறுத்துகிறாள்.

பணி இடத்திலும், மற்றவர்களின் கேலிக்கு ஆளானதில், மன உளைச்சல் அதிகமாகி விட்டது. ஆனாலும், நிறுவன முதலாளி எனக்காக பரிதாபப்பட்டு, ஆறு மாதம் விடுப்பு எடுத்து, மனதையும், உடலையும் சரிப்படுத்திக் கொண்டு வர சொல்லி, கணிசமாக பணமும் கொடுத்துள்ளார்.

வீட்டிலேயே அடைந்து கிடப்பதால், 'டென்ஷன்' தான் அதிகமாகிறது. இந்த இறுக்கத்திலிருந்து மீள, நல்ல வழி சொல்லுங்கள், அம்மா!

இப்படிக்கு,உங்கள் மகன்.

அன்பு மகனுக்கு —

உன் பிரச்னையை ஆங்கிலத்தில், 'லுக்கோடெர்மா' அல்லது 'விட்லிகோ' என்பர். இதை தமிழில் தவறாக, 'வெண்குஷ்டம்' என்பர்.

நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதி, உடலுக்கு எதிராக செயல்படுவதால், வெண்புள்ளி ஏற்படுகிறது. எந்த வயதினருக்கும் வெண்புள்ளி ஏற்படலாம். இது, உடல் அமைப்பு சார்ந்த நோய்.

இந்தியாவில், ஆறு கோடி பேரும், தமிழகத்தில், 36 லட்சம் பேரும் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, தொற்றுநோய் அல்ல. பொதுவாக மரபியல் ரீதியாகவும் தொடராது. ஆனால், வெண்புள்ளிகள் உள்ள தம்பதியினருக்கு வெண்புள்ளி உள்ள குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம்.

அதீதமான மன உளைச்சல், அதிர்ச்சி, பயம், பதற்றம், ஆழ்மனத்துயரம் காரணமாக, வெண்புள்ளிகள் வரலாம். அடிக்கடி, ஆங்கில தடுப்பூசி போடுவோருக்கு உயிராற்றல் பாதிக்கப்பட்டு, வெண்புள்ளிகள் ஏற்படும்.

எலும்புருக்கி நோய், நீரழிவு நோய், மஞ்சள் காமாலை பீடித்தவருக்கு வெண்புள்ளி வரும் வாய்ப்பு அதிகம். தீக்காயம், விபத்து காயங்கள், பொருந்தா உணவை நீண்ட காலம் உட்கொள்ளல் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாடு, வெண்புள்ளிகளை பரிசளிக்கும்.

வெண்புள்ளிகள் பற்றிய அறியாமை ஓடோடி விட்டது. உங்கள் மனைவி ஒரு படித்த முட்டாள். அவள் கண்களால் உலகத்தை பார்க்காதீர்கள். பணி இடத்தில் கேலி செய்வதாக நினைப்பது, உங்கள் மனப்பிரமை.

வெண்புள்ளியால் பாதிக்கபட்டுள்ள, பிரபல தமிழ் எழுத்தாளரை எனக்கு தெரியும். அவர் எழுத்திலும், பணியிலும் எவ்வளவு தன்னம்பிக்கையாக செயல்பட்டார் தெரியுமா?

இவரைப் போன்ற பிரபலங்கள் பலர், வெண்புள்ளிகளால் பாதிக்கபட்டவர்களே.

வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம், சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ளது. தொடர்பு எண்கள் 044- - 22265507, 044 -- 65381157. நீயும், மனைவியும் அங்கு ஒருமுறை சென்று வாருங்கள்.

எதையும் காது கொடுத்து கேட்காமல், மனைவி தொடர்ந்து முரண்டு பிடித்தால், சட்டப்படி அவளை விவாகரத்து செய்து விடு. பெண் குழந்தையை கேட்டால் என்றால், தயங்காமல் கொடுத்து விடு. சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொள்.

ஆறு மாத விடுப்பை ரத்து செய்து, வேலைக்கு போ. சக ஊழியர்களிடம் மத்திமமாக பழகு. யாரும் கேலி செய்தால், புன்னகையுடன் கடந்து போ. அம்மாவிடம் தஞ்சமடை. நிறைய புத்தகங்களை படி. இசை கேள். 'டிவி' நிகழ்ச்சிகள் பார்.

வெண்புள்ளிகளை துரிதபடுத்தாத உணவுகளை உண். பருத்தி ஆடைகளை அணி. வெளியில் செல்லும்போது, குளிர் கண்ணாடி மாட்டிக்கொள்.

வாரா வாரம் கோவிலுக்கு போ. மாதம் ஒருமுறை சிற்றுலா செல். தங்கைகள் விரும்பினால் அவர்களது வீட்டுக்கு போய் வா. மொத்தத்தில் வெண்புள்ளி குறைபாட்டுடன் சிறப்பாக வாழக் கற்றுக் கொள்.



என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us