sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நல்லிணக்கம்!

/

நல்லிணக்கம்!

நல்லிணக்கம்!

நல்லிணக்கம்!


PUBLISHED ON : ஜூன் 30, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 30, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒற்றை இரவில் இந்த முடிவுக்கு வந்திருக்கவில்லை, கணேசன். ஆற அமர யோசித்து வேறு வழியற்று, இதைவிட சிறந்த இன்னொரு முடிவில்லை என்ற பிறகு தான், மேகலாவிடமே சொன்னார்.

''இதைத் தவிர வேற யோசனையே இல்லீங்களா? வீட்டை குடுத்துட்டா மறுபடி மீட்கவே முடியாமப் போயிடுமே,'' கண்களில் நீர் திரண்டது, மேகலாவிற்கு.

''அதுக்காக வாங்கின கடன் ஜீரணமாகிடுமா, மேகலா. இந்தக் காலத்துல பழகின பழக்கத்தை நம்பி, ஒரு ரூபாய் வட்டி இல்லாம யார் பணம் கொடுப்பா... மரைக்காயர் நமக்காக தந்தார்.

''அதுக்கு நாம விசுவாசமா இருக்க வேண்டாமா? எல்லாம் எங்கப்பன் முருகன் பார்த்துக்குவான். நீ மனசைப் போட்டு அலட்டிக்காம துாங்கு,'' என்றார், கணேசன்.

என்னவோ நான்கு முறை புரண்டு படுத்து, உறக்கத்திற்கு போய் விட்டார், கணேசன். ஆனால், மேகலாவிற்கு தான், துாக்கம் வருவேனா என்றது.

கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், கணேசனுக்கும், மேகலாவிற்கும் திருமணம் நடந்தது. அப்போது, மரைக்காயர் டிம்பர் கடையில் தான், கணக்கு வேலை செய்து கொண்டிருந்தார், கணேசன்.

மரைக்காயர் கொஞ்சம் அதீத மதப்பற்றாளர். பேச்சிலும், செயலிலும் இஸ்லாம் மீதான பற்றும் செயலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

'எப்படித்தான் அந்தாளு கடையில் இத்தனை காலமா வேலையில் இருக்கியோ, கணேசா. அவர் 'மீட்டிங்'கில் பேசறப்பவே எனக்கெல்லாம் பத்திக்கிட்டு வரும். எல்லாருக்கும் அவங்கவங்க சாமியும், நம்பிக்கையும் உசத்தி தான். என்னவோ, இவர் மட்டும் தான் இறைவன்கிட்ட நித்தமும் நேரடியா பேசற மாதிரி நினைப்பு...' கணேசனின் நண்பன் பால்ராஜ் கூட அடிக்கடி இதையே சொல்வான்.

ஆனால், கணேசனுக்கு என்றைக்குமே அப்படி தோன்றியதில்லை. மரைக்காயர் கடையில், தன்னை வேற்றாளாய் உணர்ந்ததே இல்லை.

திருச்செந்துாருக்கு மாலை போட்ட போதும் சரி, திருத்தணிக்கு வேண்டுதல் நிறைவேற்ற சென்றபோதும் சரி, மறு பேச்சு பேசாமல் விடுப்பு தந்து அனுப்பி வைத்தார், மரைக்காயர்.

தீபாவளிக்கு ஒரு மாத போனசும், ரம்ஜானுக்கு, குடும்பத்திற்கே உடை எடுத்து தரும்போதும், அவர் எந்த பாகுபாடும் காட்டியதில்லை.

சிறுக சிறுக வாங்கிய கடனோடு சேர்த்து, மகள் கல்யாணத்துக்கு, வங்கியில் வீட்டை அடமானம் வைத்து, பணம் வாங்கப் போவதை அறிந்தார், மரைக்காயர். கணேசனை அழைத்து அவன் கையில் திணித்த வட்டியில்லாத கடனையும் சேர்த்து, அவருக்கு தரவேண்டிய தொகை, 8 லட்சம் ரூபாயை தாண்டி விட்டது.

வெளிநாட்டில் இருந்த மருமகன் மூலமாக, கணேசனுக்கு அங்கே டிரைவர் வேலையும், மேகலாவிற்கு சமையல் வேலையும் கிடைத்தது. சேர்ந்து பாடுபட்டால் இரண்டே ஆண்டில் கடனை அடைத்து, நிம்மதியாகி விடலாம் என்று முடிவெடுத்தார், கணேசன்.

ஆனால், மரைக்காயரிடம் வாங்கிய கடனுக்கு எதை அடமானமாக தந்துவிட்டுப் போவது? வீட்டை, 'லீசு'க்கு விட ஆட்களைத் தேடினர். இரண்டு லட்சத்துக்கு அதிகமாய் ஒரு ரூபாய் கொடுக்க கூட ஆட்கள் இல்லை. வேறு வழியே இல்லாமல் தான், மரைக்காயர் முன் நின்றார்.

'நீ, போயிட்டு வந்து காசு கொடு, கணேசா. நான் உன்னை நம்பறேன்...' என சொல்வார் என்று தான் எதிர்பார்த்தார்.

''கணேசா, நமக்கு செங்குன்றம் பக்கத்துல, ஒரு பழைய வீடு இருக்கு இல்லையா... அதை, 'கன்ஸ்ட்ரக் ஷனு'க்கு குடுத்திருக்கேன். அங்கே என் தங்கச்சி குடும்பம் தான் இருக்கு. வீடு கட்டி முடிக்கிற வரைக்கும், அவங்க உன் வீட்டில் வந்து இருந்துக்கட்டும். நீ வர்றதுக்குள்ள எல்லாம் சரியாகிடும்,'' என்றார் இயல்பாக.

தனக்குத் தரவேண்டிய பணத்துக்கு, வீட்டை அடமானமாக கேட்கிறார் என்று கணேசனுக்கு தோன்றியது. நிஜத்தில் அதில் நியாயமும் இருந்தது. இவ்வளவு பணத்தையும் கணேசனுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் விட்டுத்தர முடியாது தான்.

ஆனால், எத்தனை யோசித்தும் கணேசனுக்கு வீட்டை விட்டுத்தர, மனசு ஒப்பவே இல்லை. வீட்டோடு பின்னிப் பிணைந்திருந்த அவரின் கடவுள் நம்பிக்கையும், ஒவ்வொரு இடங்களிலும் ஒட்டிக் கிடந்த பிரத்யேகங்களும் அவரை வெகுவாய் அசைத்தது.

பூஜை அறை, அம்மா பார்த்து பார்த்து நிர்மாணம் செய்தது. அழகான மாடங்கள் கிரானைட் கல்லில் அமைத்து, அங்கே மஞ்சள், குங்குமம் குழைத்து பூசி, கதவிலும், மாடத்திலும், பித்தளை மணிகளைக் கட்டி, அதன் நடுநாக்கில் கூட துளி அழுக்கில்லாமல் பாதுகாத்து வைத்திருப்பார். அதையே இந்த நிமிஷம் வரைக்கும் மேகலாவும் செய்து வருகிறாள்.

பின்பக்கம், துளிசி மாடமும், அதில் தளதளக்கும் துளசியும்; மஞ்சள் பூசி தெய்வமாக வணங்கும் பெண்களும் என்று, அந்த வீட்டின் ஒவ்வொரு இணுக்கிலும், கணேசனும், அவர் குடும்பத்திற்குமான நம்பிக்கையும் ஆழ்ந்து கிடந்தது. ஆனால், வேறு வழியில்லை.

சாவியை மரைக்காயர் கையில் தந்தபோது, தன்னை மீறி கணேசன் கண்கள் கலங்கிப் போனது. உற்றுப் பார்த்தவர், எந்த விளக்கமும் தராமல் கணேசனின் கைகளைப் பற்றி மென்மையாக தட்டித் தந்து விட்டு போய்விட்டார்.

மகனை ஹாஸ்டலில் விட்டு விட்டு, இருவரும் ஊருக்கு கிளம்பிப் போயினர். ஆனால், நினைவும், சிந்தனையும் வீட்டை சுற்றிக் கொண்டே தான் இருந்தது. அதுவும் வேலை இல்லாமல் ஓய்வாக அமர்ந்திருக்கும் நிமிஷமும், கண்களை கவ்விய ஆழ்ந்த உறக்கத்திலும் அவரை அறியாமல் அந்தக்காட்சி மனக்கண்ணில் தோன்றி மறையும்.

அவர்கள் வீட்டு புனிதமான பூஜை அறையில் ஆட்டின் ரத்தமும், கோழியின் தலையும் குவிந்து கிடப்பது போலவும், துளசி மாடத்துச் செடி, துளிர்க்க மறந்து கருகிப் போனது போலவும் காட்சிகள் ஓடும். அதற்குபின் சொட்டுத் துாக்கம் வராது.

ஆரம்பத்தில், ஹாஸ்டலில் இருந்த மகன் வந்து, வெளியிலிருந்து கண்காணித்து விட்டுப் போவான். காலப்போக்கில் அதுகூட இல்லை.

இரண்டு ஆண்டுகள் தத்தளித்து கையில் காசைத் தேற்றி, ஊர் திரும்பினர். அப்போது, மனதில் ஒரு பக்கத்தில் உற்சாகமும், மறு பக்கத்தில் வீட்டை எண்ணிய வேதனையும் சரிசமமாக இருந்தது.

'மரைக்காயர் வீட்டை கொடுக்க மாட்டேன்னு சொல்லப் போறார்; கடனுக்கு வட்டி கேட்பார் பார்; வீட்டை சிதைச்சு வச்சிருப்பார் இந்நேரம்...' பார்த்தவர் எல்லாம் தத்தம் விதவிதமான கற்பனைகளை கணேசனுக்குள் திணித்து, அவரை பயமுறுத்திக் கொண்டிருந்தனர்.

மரைக்காயருக்கு கொடுக்க வேண்டிய காசை எடுத்துக் கொண்டு, அவரது வீட்டிற்கு போய் சேர்ந்தார். ஆறத் தழுவினார், மரைக்காயர்; அந்த தழுவலில் அன்றிருந்த அதே பாசம் இருந்தது.

நீட்டிய பணத்தை வாங்காமல் கூர்ந்து பார்த்தவர், வீட்டுச் சாவியை எடுத்து, கணேசனை அழைத்துக் கொண்டு நடந்தார்.

''இரண்டு மாசமா வீடு பூட்டித்தான் இருக்கு, கணேசா. செங்குன்றம் வீடு கட்டி, என் தங்கச்சி குடும்பம் அங்கேயே குடி போயிட்டாங்க. அதுக்கப்பறம் வீடு சும்மா தான் இருக்கு.''

நட்டு வைத்த செடி பூத்து நின்றது போல், வீடு அப்படியே இருந்தது. வெள்ளையடித்து வீடு முழுக்க, புதுப்பெண்ணைப் போல் மினுக்கியது. மனம் தவிக்க, வீடு முழுக்க ஒருமுறை கண்களால் கழுவித் துடைத்த கணேசன், வேகமாக பூஜையறைக்கு ஓடினார்.

வைத்தது வைத்தபடி அப்படியே இருந்தது. கதவில் ஊசலாடிய மணிகளும், அழுக்கில்லாத அதன் நடுநாக்கும், பூசிவிட்டுப் போன மஞ்சள் குங்குமத்தில் கூட சேதாரம் இல்லாத நேர்த்தியும், கணேசனை நெகிழ வைத்தது.

எல்லாவற்றுக்கும் மேலாய், மாடத்தில் கண் சிமிட்டி எரிந்து கொண்டிருந்த ஒற்றை அகல், அவரை சிலிர்க்க வைக்க, பின்பக்கம் ஓடினார். தளதளத்த துளசி, காற்றுக்கு தலையாட்டி கணேசனை வரவேற்றது. நெகிழ்ந்து போனவர் ஓடி வந்து மரைக்காயரின் கைகளை பற்றி, கண்ணீர் மல்கினார்.

''உங்களை தப்பா நினைச்சுட்டேன் பாய்,'' என்றார், நெஞ்சம் நெகிழ.

''மத நல்லிணக்கம்ன்னா என்னன்னு நினைச்ச கணேசா... நீயும், நானும் தோள்ல கை போட்டுட்டு போட்டோவுக்கு, 'போஸ்' கொடுக்கிறதா? உன் நம்பிக்கையை நான் மதிக்கணும்; என் நம்பிக்கையை நீ மதிக்கணும். பரஸ்பரம் அதை ஏத்துக்கணும்கிற எந்தக் கட்டாயமுமில்லை.

''கடவுளை அடைய ஆயிரம் வழி. அதுல உன்னுடையது ஒரு வழி, என்னுடையது ஒரு வழிங்கிற தெளிவு இருக்கணும். எனக்கு அது இருக்கு.

''என் தங்கை குடும்பம் இருந்த வரைக்கும், இந்த வீட்டையும், உன் நம்பிக்கையையும் மதிச்சு பாதுகாத்தாங்க. அவங்க இல்லாத இந்த இரண்டு மாசமும், வீட்டைப் பராமரிக்க ஒரு ஆளை வேலைக்கு அமர்த்தி இருந்தேன்.

''நீ தந்த பொருளை, உன்கிட்ட சரியா ஒப்படைக்கணுமில்ல, நாளைக்கு அல்லாஹ் என்னையும்ல கேள்வி கேட்பான்,'' என சொல்லி, வாய்விட்டு சிரித்தார்.

வார்த்தைகளற்று கணேசன் நீட்டிய பணத்திலிருந்து ஒரு தொகையை அவரிடமே திருப்பித் தந்தார்.

புரியாமல் பார்த்தார், கணேசன்.

''கணேசா, காசைக் கொடுத்துட்டு, அதுக்கு ஈடா உன் பொருளை அனுபவிச்சா, அதுவும் ஒரு வகையில் வட்டி கணக்காகிடும் இல்லியா. எனக்கு அது வேண்டாம். நான் உன் வீட்டை ஈடா மட்டும் தான் வாங்கினேன்.

''உன் வீட்டை பயன்படுத்தினதுக்கு இந்த தொகையை வாடகையா வச்சுக்கோ. இதைக் கொண்டு ஏதாவது தொழில் செய்து, உன் வாழ்க்கையை புதுசா ஆரம்பி. எனக்கு அல்லாஹ் இருக்கான், கணேசா. நம்பினவர்களை இறைவன் கை விட்டதே இல்லை,'' என, முதுகில் தட்டினார்.

நல்லிணக்கம் என்பது, மாற்று சமூகத்தை கொண்டாடுவது அல்ல, அவர்களின் நம்பிக்கையை மதிப்பது என்ற பேருண்மை, அந்த நிமிஷம் புரிந்திருந்தது, கணேசனுக்கு.

எஸ். பர்வின் பானு






      Dinamalar
      Follow us