/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம் - முந்தானை முடிச்சு!
/
விசேஷம் இது வித்தியாசம் - முந்தானை முடிச்சு!
PUBLISHED ON : டிச 15, 2024

தாலி கட்டும் போது, மூன்று முடிச்சு போடுவது உலக இயல்பு. கணவனை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் பெண்ணைப் பார்த்து, 'இவ, புருஷனை முந்தானையில் முடிஞ்சு வச்சிருக்கா...' என்று உலகத்தார் பேசுவது இயல்பு.
இதேபோன்று, பூமாதேவி, தன் புடவை முந்தானையில், மூன்று முடிச்சு போட்டாள். அவள் பூமியில், ஆண்டாளாக பிறந்து, அந்த முடிச்சை ஒவ்வொன்றாய் அவிழ்த்தாள். தான் மட்டுமல்ல, இந்த உலகத்தாருக்கும், 'மூன்று முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள்; பின், ஒவ்வொன்றாய் அவிழ்த்தால், அந்த பரந்தாமனை நிரந்தரமாக அடையலாம்...' என்று, உலகுக்கு உணர்த்தினாள்.
ஆண்டாள் குறித்த இந்த வித்தியாசமான வரலாறு என்ன என்று பார்ப்போம்...
பூமாதேவியை, அசுரன் ஒருவன் கடத்திச் சென்று, பாதாளத்தில் வைத்து விட்டான். வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டி உள்ளே சென்றார், பெருமாள். அவளை மீட்டு, பந்து போல் ஆக்கி, தன் மூக்கு கொம்பில் சுமந்து மேலே வந்தார்.
அப்போது பெருமாளிடம், 'பரந்தாமா... இப்படி நித்தமும் கஷ்டப்படுவதை விட, உங்களை நிரந்தரமாக அடைய, எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்...' என்று கேட்டாள், பூமாதேவி.
தேவிக்கு, மூன்று கட்டளைகளை பிறப்பித்தார், பெருமாள்.
* தினம் ஒரு மலரால், என் திருவடியில் அர்ச்சனை செய்; வாங்க வசதியில்லா விட்டால், உளமுருகி கண்ணீர் பூக்களை என் முன் சிந்து
* என் திருநாமத்தை உரக்கச் சொல்
* உன் செயல்களின் பலனை என் திருவடிகளில், ஆத்மார்த்தமாக சமர்ப்பித்து விடு.
கட்டளைக்கு ஒன்று வீதம், மூன்று முடிச்சுகளைப் போட்டு வைத்துக் கொண்டாள், பூமாதேவி.
இந்த முடிச்சை, அவள் கலியுகத்தில் தான் அவிழ்த்தாள்.
ஒருமுறை, லட்சுமி தாயாரை அழைத்து, 'வா பூலோகம் போகலாம்...' என்றார், பெருமாள். பதறி விட்டார், தாயார்.
'சுவாமி! ஏற்கனவே, உங்களுடன் சீதையாக வந்து, பட்டது போதும். என் மீதே சந்தேகப்பட்டீர்கள்; கர்ப்பவதியான என்னை காட்டில் விட்டீர்கள். கிருஷ்ணாவதாரத்தில், உங்களுடன் ருக்மணியாக வந்தேன்; நீங்களோ சத்யபாமாவுடன் மகிழ்ந்திருந்தீர்கள். அதனால், நான் வரமாட்டேன்...' என்றதும், பூமாதேவியை உற்று பார்த்தார், பெருமாள். உடனே, தலையாட்டி விட்டாள்.
பூமியில், பெரியாழ்வார் மகளாய், வில்லிபுத்துாரில் அவதரித்தாள். அன்று போட்ட, மூன்று முடிச்சை, ஒவ்வொன்றாய் அவிழ்த்தாள்.
விஷ்ணுவுக்கு கட்டிய மாலையை, தன் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து, அதன் பின், இறைவனுக்கு அனுப்பி, மலர் கைங்கர்யம் செய்தாள். அந்த பரந்தாமனின் திருநாமங்களைக் கோர்த்து, திருப்பாவை பாடினாள். அவரே கதியென வாழ்ந்ததால், ரங்கநாதருடன் அவளது ஆத்மா கலந்தது.
நல்ல விஷயங்களில், வைராக்கியம் அவசியம் என, பெண்களுக்கு உணர்த்திய அந்த தாயாரை, மார்கழியில், பாவை பாடி வணங்குவோம்!
தி. செல்லப்பா