/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: பிடிவாதமும் தேவைதான்
/
விசேஷம் இது வித்தியாசம்: பிடிவாதமும் தேவைதான்
PUBLISHED ON : ஜன 05, 2025

ஜன., 10 - வைகுண்ட ஏகாதசி
மோட்சம், பரமபதம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் திருமாலின் உலகத்திற்கு செல்லவே, ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர், பக்தர்கள். பட்டினி கிடக்கின்றனர்; துாக்கத்தை தொலைக்கின்றனர்; பெருமாளைப் பற்றி மனமுருகி பாடுகின்றனர். ஆனாலும், அது அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை.
அதேசமயம், எந்த விரதமும் அனுஷ்டிக் காதவர்களுக்கு அது வாய்த்து விடுகிறது. ஒரு பானை - உயிரற்ற ஜடம், அதற்குக் கூட திருமால், மோட்சம் அளித்திருக்கிறார். நமக்கு அளிக்க மாட்டாரா என்ன! அதற்கு, நாம் அவரை பல வகையிலும் நிர்ப்பந்தம் செய்ய வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி என்றாலே, ஸ்ரீரங்கம் தான். அங்கே ரங்கநாதப் பெருமாளுக்கு பூஜை செய்து, அவருடைய தாசராகவே வாழ்ந்தவர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். அவர், ஒருமுறை கிருஷ்ண அவதாரத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்...
கிருஷ்ணனின் தாய் யசோதை, தயிர் கடைந்து கொண்டிருந்த போது, சேஷ்டை செய்த கிருஷ்ணன், பானையை எட்டி உதைத்து, உடைத்து விட்டான். யசோதை துரத்த, ததிபாண்டன் என்ற நண்பனின் வீட்டுக்குள் சென்று, காலியாக இருந்த ஒரு பானைக்குள் ஒளிந்து கொண்டான், கிருஷ்ணன்.
ததிபாண்டனிடம், 'என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே, அம்மா அடிப்பாள்...' என்றான். யசோதை அங்கு வர, அந்தப் பானை மீது அமர்ந்து கொண்ட ததிபாண்டன், 'இங்கு யாரும் வரவில்லையே...' என்று சொல்லி அனுப்பி விட்டான்.
தாய் சென்றதும், 'டேய் இறங்கு! உள்ளே மூச்சு முட்டுது. வெளியே வரணும்...' என்றான்.
'கிருஷ்ணா! நீ எல்லாருக்கும் மோட்சம் தரவல்லவன். எனக்கு மோட்சம் கொடுப்பதாய் உறுதியளித்தால், நான் இறங்குகிறேன்...' என்று பிடிவாதம் பிடித்தான், ததிபாண்டன்.
வேறு வழியே இல்லாமல், 'உனக்கு மட்டுமல்ல, இந்தப் பானைக்கும் சேர்த்து மோட்சமளிக்கிறேன், முதலில் கீழே இறங்கு...' என்றான், கிருஷ்ணன். ததிபாண்டனுக்கும், பானைக்கும் மோட்சம் கிடைத்தது.
இதை சிந்தித்தபடியே, பூஜை நடத்திக் கொண்டிருந்த ஐயங்கார், 'ரங்கநாதா! எனக்கும் மோட்சம் கொடேன்...' என்றார்.
உடனே பகவான், 'கர்மயோகம், ஞானயோகம், சரணாகதி என்றெல்லாம் பக்தியில் இருக்கிறது. இதில் ஏதாவது செய்திருக்கிறீரா?' எனக் கேட்க, 'இல்லை சுவாமி...' என்றார், ஐயங்கார்.
'போகட்டும், ஒருவனுக்காவது அன்னதானம் செய்திருக்கிறீரா? என் பக்தன், யாருக்காவது இந்த ஊரில் தங்க இடம் கொடுத்து உதவியிருக்கிறீரா?' என்ற பகவானிடம், உதட்டைப் பிதுக்கினார், ஐயங்கார்.
'எதுவுமே செய்யாமல், மோட்சத்தை எப்படி எதிர்பார்க்கிறீர்?' என்று சற்றே கோபத்துடன் கேட்டார், பகவான்.
உடனே கோபம் கொண்ட ஐயங்கார், 'இதையெல்லாம், நீ ஒளிந்து கொண்டிருந்தாயே பானை, அது செய்ததா? உன்னை வணங்க கை கூட இல்லாத பானைக்கு ஏன் மோட்சம் கொடுத்தாய்?' என்றார்.
பகவானுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. இப்படி, மோட்சத்துக்காக எப்படி வேண்டுமானாலும், பகவானை நிர்ப்பந்தம் செய்யலாம், பிடிவாதம் பிடிக்கலாம். விரதமெல்லாம், இரண்டாம் பட்சம் தான். பகவானிடம் எந்த அளவுக்கு ஒன்றுகிறோமோ, அந்த அளவுக்கு பரமபதமும் நம்மை நோக்கி விரைந்து வரும்.
தி. செல்லப்பா

