PUBLISHED ON : நவ 10, 2024

நவ., 16 - அய்யப்பனுக்கு மாலையணிதல்
சபரிமலை செல்லும் பக்தர்கள், பம்பை நதியில் கால் நனைக்காமல் திரும்பியதில்லை. இந்த நதிக்கு, 'பம்பை' என்ற இசைக்கருவியின் பெயர் சூட்டப்பட்டதற்கு காரணம் தெரியுமா?
சபரிமலை காட்டில் வசித்து வந்தார், மதங்க முனிவர். இவரது சிஷ்யைகளில் ஒருத்தி, நீலி.
ஒருமுறை மதங்க முனிவர் சிவத்தல யாத்திரை சென்று விட்டார். இந்த நேரத்தில், சீதையைத் தேடி ராமனும், லட்சுமணனும் இலங்கைக்கு செல்லும் வழியில், மதங்க முனிவரின் ஆஸ்ரமம் கண்ணில் பட்டது.
முனிவரைத் தரிசிக்க வந்தவர்களை வரவேற்றாள், நீலி. வந்தவர்கள், ராம - லட்சுமணர் என்ற விபரத்தை அறிந்து மகிழ்ந்தாள். அவர்களுக்கு உணவளிக்க எண்ணினாலும், மலைவாழ் பெண்ணான தன் கையால், அந்த ராஜகுமாரர்கள் சாப்பிடுவரா என்ற சந்தேகத்தால் தயங்கினாள்.
ராம - லட்சுமணர், அவளது தயக்கத்துக்கான காரணத்தை கேட்டனர்.
'உங்களுக்கு உணவளிக்க எண்ணுகிறேன். ஆனால், சாதாரண பெண்ணான என் கையால் உணவருந்துவீர்களா என சந்தேகம்...' என்றாள்.
'பெண்ணே! மனிதர்களில் தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற பிரிவுகள் கிடையாது; எல்லாரும் சமமே. உன் கையால் உணவருந்துவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை...' என்றார், ராமன்.
நீலி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவர்கள் சாப்பிட்ட பிறகும், அவர்களிடம் ஏதோ கேட்க எண்ணினாள், நீலி. அதை உணர்ந்த ராமர், 'இன்னும் உன் முகத்தில் தயக்கம் தெரிகிறதே, எதுவாயிருந்தாலும் கேள்...' என்றார்.
'ராமபிரானே! பிறந்து பிறந்து இறக்கும் இந்த நிலையற்ற வாழ்வு எனக்கு வேண்டாம். எனக்கு பிறவா நிலையான முக்தியை அளியுங்கள்...' என்றாள் நீலி.
'பெண்ணே! நீ, இந்த பூலோகத்துக்கு செய்ய வேண்டிய சேவை இன்னும் நிறைய இருக்கிறது. உன்னை ஒரு நீருற்றாக மாற்றுகிறேன். அதில் பொங்கிப் பெருகும் நீர், அருவியாக விழுந்து, நதியாக பெருகி ஓடும்.
'இந்த பூலோகம் உள்ளளவும் நீ, நதியாய் ஓடி, மக்களின் பசியும், தாகமும் போக்குவாய். பூலோகம் என்றைக்கு அழிகிறதோ, அன்று நீ, என் திருவடியை எய்துவாய். நீ, நதியாய் பெருகி ஓடும் போது எழும் ஒலி, இந்தக் காடு முழுவதும், பம்பை இசை போல் கேட்கும். எனவே, மக்கள் உன்னை, 'பம்பை' என செல்லப் பெயரிட்டு அழைப்பர்.
'இங்கிருக்கும் தர்மசாஸ்தாவை காண வரும் எல்லா பக்தர்களும், உன்னிடத்தில் பிதுர்க்கடன் நிறைவேற்றி, தங்கள் முன்னோர்களை மகிழச் செய்வர். உன் ஒரு துளி, அந்த பக்தன் மீது பட்டால் கூட, அவன் நினைத்தது நிறைவேறும்...' என வரமளித்தார்.
இதுகேட்டு மகிழ்ந்தாள், நீலி. தான் உருவாக்கிய புண்ணிய நதியில் நீராடி, பிதுர்க்கடன் செய்தார், ராமன். பிறகு இலங்கை சென்று, சீதாபிராட்டியை மீட்டு வரும் போதும், பம்பையில் பிதுர்க்கடன் செலுத்தினார்.
இத்தகைய புண்ணிய நதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது பக்தர்களின் கடமை.
தி. செல்லப்பா