/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: வீரலட்சுமி கோவில்!
/
விசேஷம் இது வித்தியாசம்: வீரலட்சுமி கோவில்!
PUBLISHED ON : ஏப் 27, 2025

ஏப்., 30 - அட்சய திரிதியை
அட்சய திரிதியை அன்று, மகாலட்சுமியை வணங்குகின்றனர், பக்தர்கள். ஒரு காலத்தில், இது தர்ம திருநாளாக இருந்தது.
கோடை காலத்தில், இந்த விழா வருகிறது. இந்த வெப்பத்தை தணிக்க, தயிர் சாதம் தானம் செய்தனர். இதனால், பசித்தோர் வயிறும், மனமும் குளிர்ந்தது. இவ்வாறு அவர்கள் மகிழ்ந்தால், மகாலட்சுமியும் மகிழ்ந்து, தானம் செய்தோருக்கு செல்வத்தை வாரி வழங்குவாள்.
ஒரு ஏழை மூதாட்டி, தான் உண்ண வைத்திருந்த, காய்ந்த நெல்லிக்கனியை தானமாக வழங்கியதால் மகிழ்ந்தார், ஆதிசங்கரர். கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்து, அவளை பெரும் செல்வந்தராக்கிய நிகழ்வு, அட்சய திரிதியை அன்று நடந்தது.
சிலருக்கு நல்ல மனம் இருக்கும்; கொடுக்க பணம் இருக்காது. இப்படிப்பட்டவர், எதற்கும் கவலைப்பட தேவையில்லை. இவர்கள், தங்கள் உடலால் பிறருக்கு சேவை செய்யலாம். செல்வத்தை வழங்கும் சாந்த சொரூபிணியான மகாலட்சுமியும், தன் சேவையால் இதை நிரூபித்தாள்.
மகாராஷ்டிராவில்உள்ள கரம்வீர் நகரில், கோலாசுரன் என்ற கொடுங்கோலன் வசித்தான். தன் தவ பலத்தால், தேவலோகத்தினரையும், மக்களையும் வாட்டி வதைத்தான். சாந்த மயமான மகாலட்சுமிக்கே, இது கண்டு கோபம் வந்து விட்டது.
சாந்தலட்சுமி என்ற பெயருடைய இவள், கோபம் கொண்டது குறித்து, சக்தியின் வடிவங்களான நவதுர்க்கைகள், தங்கள் ஆயுதங்களை லட்சுமியிடம் அளித்தனர். அந்த ஆயுதங்களுடன் தைரிய லட்சுமி, வீர லட்சுமி என்ற பெயர் தாங்கிய இவள், கோலாசுரனை வதைத்தாள்.
மரணத்தருவாயில், லட்சுமியிடம், 'அம்மா, என்னை மன்னித்து விடு! பொறுமையில் சிறந்த உன்னையே என் செயல்கள் வருத்தி இருக்கிறது என்றால், நான் எந்தளவு கொடுமைக்காரன் என்பதைப் புரிந்து கொள்கிறேன்.
'உன் கை பட்டு மரணிப்பதால், நான் பிறப்பற்ற நிலையை அடைவேன். கொடுமைக் காரர்களுக்கு என் சரித்திரம் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதால், இந்த ஊருக்கு என் பெயர் விளங்க அருள்புரிய வேண்டும்...' என்றான், கோலாசுரன்.
அவனது கோரிக்கையை ஏற்றாள், வீரலட்சுமி. அதன் பின், அவ்வூர் கோலாப்பூர் ஆக மாறியது.
கோலாப்பூரில், மகாலட்சுமிக்கு கோவில் உள்ளது. அம்பாள், ஆயுதங்களுடன் காட்சி தருவது விசேஷம். இங்கு, ஜனவரி 31, பிப்., 1, 2 மற்றும் நவ., 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடக்கும், 'கிரண் உற்சவ்' எனப்படும், சூரிய ஒளித்திருநாள் புகழ்மிக்கது. மூன்று நாட்களிலும் அம்பாளின் பாதம், இடை, முகத்தில் சூரியக்கதிர்கள் படுவதை காண, ஏராளமான பக்தர்கள் கூடுவர்.
சென்னையிலிருந்து, 925 கி.மீ., துாரத்திலுள்ள இவ்வூருக்கு, விமான வசதி உள்ளது. ரயிலில் செல்வோர், பிற ஸ்டேஷன்களில் இறங்கி, மற்றொரு ரயிலில் செல்லலாம். ஆம்னி பஸ்களும் செல்கின்றன.
தி. செல்லப்பா