sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நப்பின்னை!

/

நப்பின்னை!

நப்பின்னை!

நப்பின்னை!


PUBLISHED ON : ஏப் 20, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 20, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''என்னங்க... பணத்துக்கு ஏற்பாடு பண்ணினீங்களா?'' என, களைப்பாக வந்து அமர்ந்த, கோவிந்தனின் கைகளில் தண்ணீர் சொம்பை கொடுத்தவாறே கேட்டாள், சாவித்திரி.

தண்ணீரை வேக வேகமாக குடித்து முடித்த கோவிந்தனின் தாகமே, அவன் எவ்வளவு அலைந்து திரிந்து வந்திருப்பான் என்பதை உணர்த்தியது.

தண்ணீர் சொம்பை சாவித்திரியிடம் கொடுத்த, கோவிந்தன், இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, பெருமூச்சு விட்டான். சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன், சோர்வாய் சொன்னான்...

''ப்ச்! நானும் எல்லார்க்கிட்டயும் கேட்டுட்டேன். ஆனா, கிடைக்கலை. என்ன பண்றதுன்னே தெரியலை. கல்லுாரி அட்மிஷனுக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு. கட்ட முடியலைன்னா, நம் மகன் வாசுவை படிக்க வைக்க முடியாம போயிடும்.''

கோவிந்தனின் முகத்தில் பெரும் வருத்தமும், வேதனையும் உண்டானது.

தரையில் அமர்ந்து, சுவரில் சாய்ந்துக் கொண்டாள், சாவித்திரி.

''நானும் எங்க வீட்டுல எல்லார்க்கிட்டயும் கேட்டுப் பார்த்துட்டேன். யாரும் தரலை.''

சில நிமிட அமைதிக்குப் பின், ''என்னங்க, நான் ஒண்ணு சொல்லட்டுமா?'' என்றாள்.

'என்ன?' என்பதைப் போல், அவளைப் பார்த்தான், கோவிந்தன்.

''உங்க அக்காக்கிட்ட கேளுங்களேன்.''

இந்த வார்த்தைகள் சுளீரென சாட்டையால் அடித்ததைப் போல் இருந்தது.

''அக்காக்கிட்டயா?''

''வேற வழியில்லை,'' என, தலைக் கவிழ்ந்தாள், சாவித்திரி.

இருவருக்கும் இடையில், பெரும் அமைதி நிலவியது. அந்த அமைதியில், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்தது ஞாபகத்துக்கு வந்தது. அதன் தாக்கம், இருவருடைய முகத்தையும் மாற்றிக் கொண்டிருந்தது.

''பத்து வருஷமா பேச்சுவார்த்தை இல்லை. ஒரு போன் கூட பண்றதில்லை. அவதான் பேசலைன்னாலும், என்னையும் நீ பேச விடலை. 'ஈகோ'வை பெரிசாக்கிக்கிட்டு இருந்தாச்சு. 'கொரோனா' சமயத்துல கூட அவளை எப்படியிருக்கேன்னு ஒரு வார்த்தை கேட்கலை. இப்ப போயி, பணம் கொடுன்னு கேட்டா தருவாளா?''

''தருவாங்க. கண்டிப்பா தருவாங்க. படிப்புக்குன்னு கேட்டா தராமலா இருப்பாங்க. படிச்சவங்க. படிப்போட அருமை தெரிஞ்சவங்க. செய்யாம போயிடுவாங்களா? நமக்கு பல உதவிகள் செய்துக்கிட்டு இருந்தவங்க தானே...''

''அதெல்லாம் உனக்கு இப்பத்தான் ஞாபகம் வருதா? வயசுல பெரியவ. நல்லது தானே சொன்னாள்ன்னு எடுத்துக்காம நீ அவளோட உறவையே முறிச்சுட்டே. 10 வருஷமா அவளும் வர்றதில்லை, நானும் போறதில்லை.''

''பழசையெல்லாம் எதுக்கு பேசறீங்க? 10 வருஷமா பேசலைன்னா, உறவு அத்துப் போகுமா? நீரடிச்சு நீர் விலகுமா?'' என்ற, சாவித்திரியை கோபமாக பார்த்தான், கோவிந்தன்.

'உறவு விட்டுப் போகுமா? நீரடிச்சு நீர் விலகுமான்னு, தத்துவமெல்லாம் பேசும் இவள் தானே, பொண்ணு வயசுக்கு வந்தப்ப கூட, சொல்ல வேணாம்ன்னு சொன்னது. இப்ப பணம் வேணும், யாரும் உதவ முன் வரலை என்றதும், அக்கா ஞாபம் வந்துட்டதோ?

'இவ பேசுன்னா பேசணும். பேசாதேன்னா பேசக் கூடாது. சொந்த அக்கா கூட பேச, தடை விதித்தவள் தானே, இவள். வீணாக குடும்பத்தில் சண்டை வரக் கூடாது என, நானும் அக்காவிடம் பேசுவதையே விட்டு விட்டேனே... இப்போது பணம் வேண்டும் என்றதும், அக்காவின் ஞாபகமும், அவளுடைய நல்ல குணமும் தெரியுதோ?' என, மனதிற்குள் கறுவினான்.

நடந்தது இதுதான். கோவிந்தனின் அக்கா, நப்பின்னை. அவன் மேல் பாசமும், பரிவும் கொண்டவள்.

கோவிந்தனின் வியாபாரம் நஷ்டத்தில் நகர்ந்த போது, அவன் கேட்ட பண உதவிகளை செய்து வந்தாள். தொடர்ந்து பண உதவி செய்ய முடியாமல் அவளும், ஒரு நேரம் சிரமப்பட்டாள்.

அப்போது, 'சாவித்திரி, அவன் பணத்துக்கு கஷ்டப்படறான். இந்த மாதிரி சமயங்கள்ல ஒரு மனைவி அவனுக்கு கைக் கொடுக்கணும், நம்பிக்கை கொடுக்கணும். பக்கபலமா இருக்கணும்...'

'நான் என்ன பக்கபலமா இல்லாமலா போயிட்டேன். அவருக்கான தேவைகளை செய்துக்கிட்டுத் தானே வர்றேன்...' எடுத்த எடுப்பிலேயே எரிச்சலைக் காட்டினாள், சாவித்திரி.

'நான் சொல்றது சோறாக்கிப் போடறதையோ, துணி துவைச்சுப் போடறதையோ இல்லை. பண விஷயத்துல நீ, அவனுக்கு பக்கபலமா இருக்கணும். உன்னால அவனுக்கு பண உதவி கிடைக்கணும்...'

'ஓ... எங்க அம்மா வீட்ல போய், பணம் கொடுன்னு வாங்கிட்டு வரச் சொல்றீங்களா?' இப்போது சாவித்திரியின் குரல், முன்பை விட உயர்ந்தது.

'நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. அப்படி போய் கேட்கறதும் தப்பு. நீ ஏதாவது ஒரு வேலைக்குப் போ. சம்பாதிச்சு அவனுக்கு கொடு. அவன் என்கிட்ட மட்டும் பணம் கேட்கலை. ஊர் பூரா கடன் வாங்கி வச்சிருக்கான்...'

'வேலைக்குப் போறதுன்னா, நான் என்ன உங்களை மாதிரி படிச்சிருக்கேனா? உங்களை மாதிரி டீச்சர் உத்தியோகம் பார்க்க முடியுமா?'

'இந்த உலகத்துல படிச்சவங்க மட்டும் தான், வேலை பார்த்து சம்பாதிக்கிறாங்களா? படிக்காதவங்க வேலையே பாக்கலையா, சம்பாதிக்கலையா? சொல்லப் போனா படிக்காதவங்க தான் படிச்சவங்களை விட அதிகமா சம்பாதிக்கறாங்க...'

'ஓ... என்னை கூலி வேலைக்குப் போக சொல்றீங்களா? கடை கண்ணியில போய், வேலை செய்ய சொல்றீங்களா? இந்த வீட்ல என்னை கட்டி கொடுத்ததுக்கு எனக்கு இந்த தலையெழுத்து தானா?' என, கண்களை கசக்கினாள், சாவித்திரி.

'இங்க பார், வெளியே போய் வேலை செய்ய பிடிக்கலைன்னா, வீட்ல கொல்லை பக்கம் எவ்வளவு இடம் கிடக்கு. ரெண்டு மாட்டை வாங்கி கட்டினா, பால் கறந்து சம்பாதிக்கலாம்...'

'என்னை கடைசியில, மாடு மேய்க்க வச்சிடுவீங்க போலிருக்கு. உங்கக்கிட்ட அவரு பணம் கேட்டா, இருந்தா கொடுங்க. கொடுக்க மனசு இல்லன்னா, இல்லைன்னு சொல்லிட்டுப் போங்க. அதுக்காக என்னை கூலி வேலைக்கும், மாடு மேய்க்கவும் சொல்ல வேண்டாம்.

'அவரு பிச்சை எடுத்தாவது எங்களை காப்பாத்துவாரு. நீங்க, ஒண்ணும் அறிவுரை சொல்ல வேண்டாம்...'

'புருசன் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை. உனக்கு வேலை செய்யறது, கவுரவ கொறைச்சலா இருக்கு இல்ல?' என, கேட்டு, கோபத்துடன் கிளம்பி விட்டாள், நப்பின்னை.

'உங்க அக்காவுக்கு எவ்வளவு கேவலமான புத்தி. படிச்ச திமிரு. நாம படிச்சிருக்கறோம். டீச்சர் வேலை பார்க்கறோம். நீ படிக்கலை இல்லடி. அதனால, நீ கூலி வேலை செய்யத்தான் லாயக்கு. மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு சொல்லாம சொல்றாங்க.

'அவங்க கவுரவமா வேலை பார்க்கணும். நான், கூலி வேலை செய்யணுமா? நீங்க அவங்கிட்ட பண உதவி கேட்கறதால தான், இப்படி பேசறாங்க. இனிமே, அவங்க இந்த வீட்டுக்கு வந்தாங்க, நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன். அவங்க கிட்ட பேச்சு வார்த்தை வச்சுக்கிட்டிங்க... அப்பறம் இருக்கு...'

இப்படி உத்தரவு போட்டாள், சாவித்திரி.

அவனால் ஒன்றும் பேச முடியவில்லை.

அதன்பின், அக்கா ஒருமுறை வீட்டிற்கு வந்தபோது, சாவித்திரி வா என, கூப்பிடவில்லை. கண்ணீர் விட்டபடி போனவள் தான், நப்பின்னை. இதோ, 10 ஆண்டுகள் ஆகியும், இந்த வீட்டு வாசலை மிதிக்கவில்லை; அவள் வரவில்லையே என, துளியும் வருத்தப்படவில்லை, சாவித்திரி.

'கொரோனா' தலைவிரித்து ஆடிய போது கூட, அவனை அக்காவிடம் போனில் கூட பேச விடவில்லை. போன் எண்ணையும், 'ப்ளாக்' செய்து விட்டாள்.

கோவிந்தன் பேசியது தெரிந்தால், வீட்டில் ரகளை நடக்கும் என்பதால், அவனும் அப்படியே விட்டுவிட்டான். தவிர, தன் மனைவியை கூலி வேலைக்கு செல்ல சொன்ன அக்காவின் மீதும் அவனுக்கும் கோபம் இருந்தது.

மனைவியை ராணி போல் வாழ வைக்க நினைத்த கோவிந்தனுக்கு, அவளை வேலைக்கு அனுப்புவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இப்போது அவளிடமே போய் நிற்க வேண்டிய சூழ்நிலை உண்டானது.

நப்பின்னையின் மொபைல் போனுக்கு தொடர்பு கொள்ள முயன்றபோது, அது உபயோகத்தில் இல்லை என்றது.

'நம்பரை மாற்றி விட்டாளோ?' என, நினைத்தான்.

''என்னங்க, சென்னையில அவங்க இருந்த வீட்டுக்கு நாம போயிருக்கோமே. நேராவே போய் பார்க்கலாம்,'' என்றாள், சாவித்திரி. எப்படியாவது பணம் வாங்கிவிட வேண்டும் என, ஒரே குறியாக இருந்தாள்.

சென்னைக்கு ரயிலேறினர். அடையாறில் இருந்த நப்பின்னையின், வீட்டை கண்டுபிடிக்க பெரிதாக சிரமப்படவில்லை.

அந்த தெருவுக்குள் நுழைந்த போதே, மனம் திக் திக்கென்றிருந்தது. அக்கா இருந்தது வாடகை வீடு தான். அதே வீட்டில் இத்தனை ஆண்டுகளா இருப்பாள் என்பது என்ன நிச்சயம்? வேறு எங்காவது வீடு மாறிப் போயிருந்தால் என்ன செய்வது என்ற கேள்வியை, ஒருவருக்கொருவர் கேட்டும், மனதைக் குழப்பியும், ஆண்டவனை வேண்டிக் கொண்டும் வந்தனர்.

அக்கா இருந்த வீடு, ஒரு சிறிய தொழிற்கூடம் போல் இருந்தது. பெரிதாக, பெயர் பலகையும் இருந்தது.

''என்னங்க, இங்க உங்க அக்கா இல்ல போலிருக்கு. ஏதோ தொழில் பண்ற இடம் மாதிரி இருக்கு,'' என, சாவித்திரி சொன்ன அதே நிமிடம், பெரிய கம்பி கேட்டுக்கு பின்னிருந்து வந்த ஒரு பெண், ''உங்களுக்கு என்ன வேணும்?'' என்றாள்.

''இங்க, நப்பின்னைன்னு ஒருத்தவங்க குடியிருந்தாங்களே... அவங்க இப்ப எங்க இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?'' என்றான், கோவிந்தன்.

''நப்பின்னையக்காவா? இங்க தான் இருக்காங்க. உள்ள வாங்க,'' என, அழைத்துப் போனாள்.

பெரிய கூடமாக இருந்த இடத்தில், ஒரு பக்கம் பெண்கள் அமர்ந்து, பெரிய பெரிய பாத்திரத்தில் இருந்த முறுக்குகளை கவரில் போட்டுக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம், முறுக்கு பாக்கெட்டுகள் அடுக்கப்பட்டிருந்தன.

அவர்களை அழைத்துக் கொண்டு, சமையலறை மாதிரியிருந்த ஒரு இடத்திற்கு சென்றாள், அந்த பெண்.

அங்கே, பெரிய எண்ணெய் சட்டியின் முன் அமர்ந்து, முறுக்குப் பிழிந்துக் கொண்டிருந்த பெண்மணி, அவனுடைய அக்கா நப்பின்னையே தான்.

ஒரு வித அதிர்ச்சியோடு, ''அக்கா...'' என்ற அவனுடைய கூவலுக்கு திரும்பிய, நப்பின்னை, ஆச்சரியமும், அதிர்ச்சியும் தாளாமல் எழுந்து ஓடி வந்தாள்.

''கோவிந்தா!''

''அக்கா...'' கண்கலங்கி விட்டான்.

''வாப்பா... இப்பத்தான் அக்காவைப் பார்க்க வழி தெரிஞ்சுதா? சாவித்திரி நல்லாயிருக்கியா?'' வாஞ்சையுடன் அவளை அணைத்துக் கொண்டாள்.

முறுக்கு சுடும் பொறுப்பை, ஒரு பெண்ணிடம் ஒப்படைத்து விட்டு, கையைக் கழுவி முந்தானையில் துடைத்தபடியே, அவர்களை உள்ளே ஒரு அறைக்கு அழைத்து சென்று, உட்கார சொன்னாள்.

''அக்கா, என்னக்கா இது. முறுக்கு சுட்டுக்கிட்டிருக்கே?'' என்றான், கோவிந்தன்.

நப்பின்னை சிரித்தாள்.

''அதுவா, 'கொரோனா' நேரத்துல ஆரம்பிச்சது. அப்படியே தொடருது,'' என்றாள்.

''அக்கா நீ டீச்சராத்தானே இருந்தே? நீ... நீ போயி முறுக்கு சுட்டுக்கிட்டு...''

''ஆமாம்ப்பா. டீச்சராத்தான் நானும், உங்க மாமாவும் இருந்தோம். ப்ரைவேட் ஸ்கூல்ல வேலைப் பார்த்ததால, 'கொரோனா' நேரத்துல, ரெண்டு பேருக்குமே வேலைப் போயிட்டு. சாப்பாட்டுக்கே கஷ்டமா இருந்தது.

''அப்பத்தான் வீட்டுலேயே முறுக்கு சுட்டு விக்க ஆரம்பிச்சோம். பசியாற போதுமானதாய் இருந்தது. அப்படியே பிடிச்ச, 'பிசினஸ்' தான், இன்னைக்கு, சின்ன தொழிற்சாலை அளவுக்கு வளர்ந்திட்டு. வாடகை வீடு, சொந்த வீடாகி விட்டது. படிச்சிருக்கோம்ன்னு கவுரவம் பார்த்திருந்தா, இந்த நிலைக்கு வந்திருக்க முடியாதுப்பா.''

நப்பின்னையின் ஒவ்வொரு வார்த்தையும், கவுரவம் பார்த்து சோம்பேறியாக இருந்த, சாவித்திரிக்கு சவுக்கடியாய் விழுந்தது.

ஆர். சுமதி






      Dinamalar
      Follow us