PUBLISHED ON : ஏப் 20, 2025

கோடையில் உடல் உஷ்ணத்தை தவிர்க்க, மிக எளிமையான வழி, கீரை வகைகளில், 'சூப்' வைத்து குடிக்கலாம். அவற்றை துவையல், மசியல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
புதினா
நல்ல வாசம் மட்டும் அல்ல, 16 பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்தது. இதில், ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ஸ் உள்ளது. மேலும் பாஸ்பரஸ், கால்ஷியம் உள்ளது. வைட்டமின் சி, டி, இ, ஏ போன்ற நோய் எதிர்ப்பு காரணிகளும் உள்ளன. இது, செரிமானம் மற்றும் வாய் துர்நாற்றம் போக்கும். குளிர்ச்சி தன்மையை கொண்டது, புதினா. இதை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் நீங்கி விடும்.
தினமும் உணவில் புதினாவை சேர்த்து கொள்வதால், கோடையில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
கொத்தமல்லி
கமகமக்கும் நறுமணத்தையும், உணவிற்கு தனித்தன்மையான சுவையையும் தருகிறது. வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட்கள் அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. கண் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
இதில் உள்ள வைட்டமின் கே, எலும்புகளை உறுதிப்படுத்த கூடியது. கால்ஷியம், இரும்புச்சத்து, மெக்னீஷியம் மற்றும் பொட்டாஷியம் போன்ற தாதுக்களும் உள்ளன. கோடை காலத்தில் கொத்தமல்லி இலை, கண்பார்வையை மேம்படுத்துகிறது; கண் கோளாறுகளை தவிர்க்கிறது. செரிமான தன்மையை அதிகரிக்க உதவுகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும், வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கவும் உதவுகிறது. கொத்தமல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது.
வெந்தயக் கீரை
உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கொண்ட வெந்தயக் கீரை, குளுக்கோஸை கட்டுப்படுத்தும், கிளைசெமிக் நிறைந்துள்ளது. இதில் உள்ள கால்ஷியம், எலும்பு பலவீனத்தை தடுக்கிறது.
இதன் குளிர்ச்சி தன்மை, உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால், விரைவாக குணமாகும். வெந்தயக் கீரையை வேக வைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தால் வரும் மயக்கம் சரியாகும்.
லெட்யூஸ் கீரை
நீர்ச்சத்து மற்றும் சத்து நிறைந்தது, லெட்யூஸ் கீரை. கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது. கீரையை வாங்கியவுடன், சமைத்து விடுவது நல்லது. வாடினால் அதன் நீர்ச்சத்து போய்விடும். குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதும் நல்லதல்ல.
உடல் வீக்கத்தையும், இதய நோய்களையும் தடுக்க கூடியது. இதில், வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பொட்டாஷியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும், இந்த கீரையை சாப்பிட்டு வந்தால், நரம்பு மண்டலம் வலுப்பெறும்; நல்ல துாக்கம் வரும்; செரிமான பிரச்னைகளை சரி செய்யும்.
பசலைக் கீரை
செரிமான பிரச்னைகள் முதல், உடல் எடையை குறைக்கும் தன்மை வரை, பசலைக் கீரை சரி செய்கிறது. மேலும், இதில் போலிக் அமிலம், இரும்புச் சத்து, கால்ஷியம் மற்றும் அதிகளவில் நார்ச்சத்து உள்ளது.
கண்பார்வையை மேம்படுத்தும்; எலும்புகளை வலுவாக்கும்; ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன. கோடை காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு, அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு இந்த கீரை உகந்தது.
கறிவேப்பிலை
மணமும், மருத்துவக் குணமும் நிறைந்தது, கறிவேப்பிலை. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், வயிற்று புண் ஆகியவை சரியாகும். எலுமிச்சம் பழச்சாறு மற்றும் கறிவேப்பிலைச் சாற்றை சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கோடை காலத்தில் ஏற்படும் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.
பயணத்தின் போது வாந்தி வருவது போன்ற உணர்வு இருந்தால், எலுமிச்சையோடு சேர்த்து கறிவேப்பிலையையும் முகர்ந்து பாருங்கள். நொடிப்பொழுதில் அந்த உணர்வு மறைந்துவிடும்.
- ஞானம் ராஜேந்திரன்