
புதிய நகர அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள ஜப்பான், மலேஷியா மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று வர வேண்டும் என்ற திட்டத்தை தயாரித்தார், பொதுப் பணித்துறை காரியதரிசி. ஒப்புதல் பெற, அந்த கோப்பை, முதல்வர் காமராஜருக்கு அனுப்பி வைத்தார்.
அவர் ஒப்புதல் அளித்து விடுவார் என நம்பி, வெளிநாடு செல்வதற்காக தங்களை தயார்படுத்திக் கொண்டனர், சில அதிகாரிகள்.
ஆனால், காமராஜரிடமிருந்து கோப்பு திரும்பி வந்தது. அதிலிருந்த கடிதத்தில், 'நகர அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள, மக்கள் வரிப் பணத்தை செலவு செய்து, வெளிநாடு எதுவும் செல்ல வேண்டாம்.
'அருகிலிருக்கும் நம் மதுரைக்கு போய் பார்த்துவிட்டு வந்தால் போதும். அதற்கு மேல், அழகான அமைப்புள்ள நகரம் வேறு எங்கும் இல்லை...' என, எழுதப்பட்டிருந்தது.
வெளிநாட்டு கனவில் மிதந்தவர்கள், அந்த கடிதத்தை கண்டு அசந்து போய் விட்டனர்.
********
சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பின் இடையே, சற்று ஓய்வெடுக்க வெளியே வந்தார், எம்.ஜி.ஆர்., அப்போது, லேசான துாறல் விழுந்து கொண்டிருந்தது.
'துாறலாக இருக்கிறதே. நீங்கள் உள்ளேயே அமர்ந்து ஓய்வெடுக்கலாமே...' என்றார், உதவி இயக்குனர் ஒருவர்.
'வெளியே குளிர்கிறது என்றால், உள்ளேயும் பனி இருக்கிறதே...' என்றார், எம்.ஜி.ஆர்.,
அவர் சொன்னது உதவி இயக்குனருக்கு புரியவில்லை.
புன்சிரிப்புடன், 'உள்ளே இருக்கும் பனி வேறு யாருமல்ல. ப.நீலகண்டன் இயக்குனர் தான்...' என்றார்,எம்.ஜி.ஆர்.,
அவரைத் தான் சுருக்கமாக, ப.நீ - பனி என, எம்.ஜி.ஆர்., நகைச்சுவையாக குறிப்பிட்டிருக்கிறார் என்பதை அறிந்த அங்கிருந்த அனைவரும், சிரித்து விட்டனர்.
*************
மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர், கே.ஏ.அப்பாஸ்.
இந்திய விடுதலை போராட்ட காலத்தில் ஒருநாள், பொது நல நிறுவனத்துக்காக, பலரிடம் சென்று நிதி திரட்டிக் கொண்டிருந்தார், அப்பாஸ். தன் குழுவினருடன், பம்பாய் நகரின் கவர்னராக இருந்த, மால்கம் ஹெய்லி என்ற வெள்ளையரை சந்தித்தார்.
நிதி கேட்ட, கே.ஏ.அப்பாஸை கேலியாக பார்த்தார்.
'உங்களுக்கு தான் வெள்ளைக்காரர்களை கண்டாலே பிடிக்காதே. மேலும், எங்களை விரட்டியடிக்க பார்க்கிறீர்கள். அப்படியிருக்க, என்னிடமே நிதி கேட்டு வந்திருக்கிறீர்களே...' எனச் சொல்லி சிரித்தார், கவர்னர் மால்கம் ஹெய்லி.
அதற்கு, 'நாங்கள் உங்களிடம் கையேந்தி பிச்சை கேட்கவில்லை. ஏறத்தாழ, 100 ஆண்டுகளாக எங்கள் இந்திய மக்களின் செல்வங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறீர்களே... அதிலிருந்து சிறிது தான் கேட்கிறோம்...' என்றார், அப்பாஸ்.
அதைக்கேட்டு வெட்கப்பட்டு, கே.ஏ.அப்பாஸிடம் நிதி வழங்கினார், கவர்னர் மால்கம் ஹெய்லி.
************
தமிழிசை சங்க விழா ஒன்றில், கிருபானந்த வாரியார் பேசும்போது, 'அப்பனும் நீ, அம்மையும் நீ, மாமனும் நீ...' என வரும், திருமுறைப் பாடல் ஒன்றை பாடினார்.
உடனே, சபையிலிருந்த ஒருவர், 'ஐயா, அப்பன் சரி. அம்மன் சரி. கடவுள் எப்படி மாமன் ஆக முடியும்?' என்றார்.
அதற்கு, 'மாமன் என்பவன் யார்? தான் பெற்ற பெண், பொன், பொருள் அனைத்தையும் வேறொருவனுக்கு கொடுத்து, அவன் அவற்றை அனுபவித்து மகிழ, அதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறானே, அவன் தான் மாமன்.
'இந்த வையகம், இதில் உள்ள நீர்வளம், நிலவளம், இயற்கை செல்வங்கள் எல்லாம், நம் அப்பன் சொத்தா அல்லது பாட்டன் சொத்தா? இறைவனின் சொத்து. அவன் சொத்தை நாம் அனுபவித்து மகிழ்கிறோம். அதைக்கண்டு இறைவன், தானும் மகிழ்கிறான். எனவே, அவன் நமக்கு மாமன்...' என்றார், வாரியார்.
- நடுத்தெரு நாராயணன்