/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: மரத்துக்கு ஒரு விரதம்!
/
விசேஷம் இது வித்தியாசம்: மரத்துக்கு ஒரு விரதம்!
PUBLISHED ON : மே 25, 2025

மே. 27 - கரவீர விரதம்
தைப்பூச விரதம், சிவராத்திரி விரதம், நவராத்திரி விரதம், ஏகாதசி விரதம் என்றெல்லாம் அனுஷ்டித்திருப்பீர்கள். அந்த வகையில், மரங்களை வணங்கும் விரதத்தை, கரவீர விரதம் என்பர்.
கரவீரம் என்றால் அரளிப்பூ. பொன் அலரி என்றும் சொல்வர். நாம் வில்வத்தை, சிவனுக்கு அணிவிப்பது போல, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ளோர், அரளி மலர் மாலையை சிவனுக்கும், சூரியனுக்கும் சமர்ப்பிக்கின்றனர்.
தமிழகத்தில் அரளி மரத்தை, ஒரு மாமுனிவராகக் கருதி, பெண்கள் வழிபாடு செய்வது விசேஷ தகவல்.
வடமாநிலங்களில், வைகாசி மாத அமாவாசைக்கு மறுநாள், கரவீர விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தை சரஸ்வதி, சத்யபாமா, சத்தியவான் மனைவி சாவித்திரி, நளன் மனைவி தமயந்தி ஆகியோர் அனுஷ்டித்துள்ளனர்.
இந்நாளில் சூரியனை, அரளிப்பூக்கள் துாவி அர்ச்சிக்க வேண்டும். இந்த பூஜையை, தங்க மலர்களால் தன்னை அர்ச்சித்ததாக, எடுத்துக் கொள்வார், சூரியன்.
சூரிய உதய வேளையில் எதுவும் சாப்பிடாமல், இந்த பூஜையை செய்வர், பெண்கள். அப்போது, 'தங்க ரதத்தில் அமர்ந்து உலகத்தைப் பவனி வரும் சூரிய பகவானே... நீங்கள் எங்களுக்கு அமிர்தமும், பொருளும் தந்து பாதுகாக்க வேண்டும்...' என, ஏழு முறை சொல்லி வணங்க வேண்டும்.
வீட்டிலோ, தோட்டத்திலோ, கோவிலிலோ அரளி மரம் இருந்தால், அதன் அடிப்பகுதியில் சிவப்பு நிற துணி போர்த்தி, நீல நிற நுால் கயிறால் கட்ட வேண்டும். அந்த மரத்தை அகல்யையின் கணவர், கவுதம முனிவராக கருதி வழிபட வேண்டும்.
சுமங்கலிகள், நித்ய சுமங்கலி பாக்கியம் பெறவும், கன்னிகள், நல்ல வாழ்க்கைத் துணை அமையவும் இந்த பூஜையைச் செய்வர்.
தமிழகத்தில், இந்த வழிபாடு, ஒரே ஒரு கோவிலில் நடக்கிறது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், 8 கி.மீ., துாரத்தில், வடகண்டம் எனும் ஊரில், கரவீரம் என்ற பகுதி உள்ளது.
பஸ் ஸ்டாப்பில் இருந்து பிரியும் சாலையில், 0.5 கி.மீ., சென்றாலே கரவீரத்தை அடையலாம். இங்கு கரவீர நாதர் கோவில் உள்ளது. இவரை பிரம்மபுரீஸ்வரர் என்றும் சொல்வர். இவரை வழிபட வந்தார், கவுதம முனிவர். தேவகன்னியர் சிலர், தங்களுக்கு திருமண பாக்கியம் வேண்டி, சிவனை அணுகினர்.
ஓரிடத்தில், லிங்கத்தை அமைத்துக் கொடுத்த சிவன், அதைப் பாதுகாக்க, கவுதம முனிவரை நியமித்தார்.
சிவனிடம், 'தங்களுக்கு சேவை செய்த நான், அரளி மரமாக மாறி, இத்தலத்தில் வசிக்கிறேன். என்னை தலமரமாக மக்கள் கருதட்டும்...' என வேண்டினார், முனிவர்; சிவனும் சம்மதித்தார்.
அந்த கன்னியரை இத்தலத்துக்கு அமாவாசையன்று சென்று, அங்குள்ள அரளி மரத்துக்கு தண்ணீர் ஊற்றி வணங்கும்படி கூறினார், சிவன். அதன்படி செய்து திருமண பாக்கியம் பெற்றனர், அந்தக் கன்னியர்.
இப்போதும் அமாவாசையன்று, இங்குள்ள அரளிக்கு தண்ணீர் விட்டு, நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டுகின்றனர், பெண்கள்.
மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அறிவியல் காரணம், இந்த விரதத்தில் புதைந்து கிடப்பது தான் விசேஷம். கரவீர விரதத்தை நாடெங்கும், மரங்கள் பாதுகாப்பு நாளாக அனுஷ்டிப்போம். அனைத்து மரங்களையும் பாதுகாக்க உறுதியெடுப்போம்.
தி. செல்லப்பா