
யாரோ தன் பெயரைச் சொல்லி அழைப்பது கேட்டு, திரும்பி அந்த கூட்டத்தை கண்களால் துழாவினாள், காயத்ரி.
'யாராக இருக்கும்?' என, ஷண நேரம் கூட யோசிக்காமல், கண்களால் ஜானை தேடினாள்.
''மாமி, நெல்லிக்காய் ஊறுகாய் போட்டுடுங்க, அப்படியே பச்சடி செய்ய தெரிஞ்சாலும் செஞ்சிடுங்க, மாமி...''
இது எதுவுமே காயத்ரி காதில் விழவில்லை. தன்னை அழைத்தது போல் கேட்டது, ஒருவேளை பிரம்மையோ என நினைத்து, அடுக்களை போய் சமையலை ஆரம்பித்தாள்.
அம்மா இறந்து போனதிலிருந்து சமையல் வேலை தான். அதற்கு முன்னால் பத்தாவது படிக்கும் போதே 'என்ன படிப்பு? வேலைக்கு போய் உங்கம்மா மருந்து செலவை கவனிச்சுக்கோ...' என, அப்பா நச்சரித்ததால் படிப்பை பாதியில் விட்டு, பிரைவேட் கம்பெனியில் வேலைக்கு சேரும்போது 18 வயதிருக்கும் காயத்ரிக்கு.
ஆண்டவன் அழகை, அறிவை, நல்ல குணத்தை கொட்டிக் கொடுத்தவன், வறுமையையும் கூட சேர்த்து போனஸாக கொடுத்துட்டான்.
அம்மா, காசநோயால் அவதிப்பட, அப்பா எப்போதும், காயத்ரியிடமும், அம்மாவிடமும் சிடு சிடுப்பார். ஒரு வேலையும் செய்யாமல் ஊரைச் சுற்றி கடன். இந்த வயதிலும் மைனர் கணக்காக உடை அணிந்து கொள்வார். அம்மா பாவம், இதைப் பார்த்து நம்பி வந்து ஏமாந்தவள்.
அண்ணாவுக்கு இதெல்லாம் பார்க்க பிடிக்காமல், வீட்டை விட்டு ஓடிப்போய், ஏதோ ஹோட்டலில் சர்வராக சேர்ந்து, வீட்டுக்கே வருவதில்லை.
ஏதேதோ நினைவுகள் காயத்ரிக்கு.
''மாமி நெல்லிக்காய் ஊறுகாய் போட, ஒரு வேக்காடு கொடுக்கணுமே... மறந்துட்டேளோ? கார்த்தாலேந்து நீங்க எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கேளே. உடம்புக்கு முடியலையா?''
''அதெல்லாம் ஒண்ணுமில்ல, தோ புளியஞ்சாதம் பிசைஞ்சுடறேன். இலை போட்டுடலாம்.''
அம்புஜம் மாமி வீட்டில், அவர் பேத்திக்கு முதல் ஆண்டு நிறைவு. வீடு நிறைய கூட்டம். காயத்ரிக்கு கொசுவத்தி சுருள் போல நினைவுகள் பின்னோக்கி சென்றாலும், அடிக்கடி கூட்டத்தை துழாவியது, கண்கள்.
ஜான் குரல் கேட்டதிலிருந்து, அவனை பார்க்கத் துடித்தது மனம்.
அப்பாவுக்கு இந்த வயதிலும் துணை வேண்டும் என, யாரோ ஒருத்தியை வீட்டுக்கே கூட்டி வந்து குடித்தனம் நடத்த, காயத்ரி, சனியன் ஆயிட்டாள்.
'ஏய் சனியனே...' என, அப்பா அவளை கூப்பிட்டு வேலை வாங்க, அம்மா பொங்கி அழுவாள். மருந்தும், மாத்திரையும் அவள் உடம்பை தின்றது.
அம்மா, வீட்டு வேலை செய்த வீட்டில், கடன் வாங்கி மருந்து, பழங்கள், கஞ்சி, இட்லி என, அம்மாவை பார்த்து பார்த்து தான் கவனித்தாள், காயத்ரி.
'நான் போயிட்டா பாவம் இந்த சின்னஞ்சிறு பெண், காயத்ரியை யார் காப்பாத்துவா...' என, அம்மாவுக்கு எப்போதும் உள்ளூர பயம் கலந்த வருத்தம்.
அம்மா அந்த நினைப்பில் உடல் இளைத்து, துரும்பாகி, ஒருநாள் போய் சேர்ந்துவிட்டாள்.
தெரிந்த மாமி ஒருவர், பிரைவேட் கம்பெனியில், காயத்ரிக்கு வேலை வாங்கி கொடுத்தார். வேலையில் மட்டும் தான், காயத்ரி என, முழு பெயரை கூப்பிடுவான், சூப்பர்வைசரான ஜான்.
அவனின் அழகு, கம்பீரமோ அல்லது நல்ல குணமோ, அன்போ இல்லை... இதெல்லாம் கலந்த ஏதோ ஒன்று, காயத்ரிக்கு, ஜானை ரொம்ப பிடிக்கும்.
காதல் கொண்ட மனசுக்கு ஜாதி, மதம், பாஷை, படித்தவன், தற்குறி, ஏழை, பணக்காரன் என, எதுவுமே தெரியாது. காதல் ஒரு அப்பாவி. சட்டுன்னு எல்லாத்தையும் நம்பிடும்.
'எந்த டிபன் செய்து காயத்ரி?' என, அவனின் அன்பு கலந்த மலையாள பேச்சை கேட்டு, ரசிக்க தோன்றும்.
தினமும் காலை, 8:00 மணிக்கு வேலைக்கு போகும் சமயம், அவனுக்கு பிடித்த, புளியஞ்சாதம், சர்க்கரைப் பொங்கல் என, தினம் ஒன்றாக சமைத்து, ஒரு குட்டி பாக்ஸில் எடுத்து போய், அவன் டேபிளில் வைப்பதே, காயத்ரி தான்.
என்னமோ தெரியல, ஜானை மிகமிகப் பிடிக்கும். அந்த வேலையும் பிடித்த வேலை தான். கூட வேலை பார்க்கும் தோழிகளின் கண்களுக்கு படாமல் அவள், ஜானுக்கு டிபன் வைத்தாலும் பல தோழிகள் பார்வை, காயத்ரி மேல் தான்.
'ஜானை, 'லவ்' பண்றியாடீ, காயத்ரி?' தோழிகள் கலாய்ப்பர்.
மனதில், ஜான் நிறைந்திருந்ததால், 'ஆமாம், 'லவ்' பண்றேன். ஏன் பண்ண கூடாதா?' மனதில் அவர்களுக்கு பதில் கொடுத்து சந்தோஷப்பட்டு, ஏதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே போய்விடுவாள்.
'காயத்ரி, நீ எந்த சாப்பாடு செய்தாலும் நல்லா, ருசியா தான் செய்வியா?' சாப்பாடு பற்றியே பேசிய ஜான் அன்று... 'இந்த புடவையில் நீ ரொம்ப அழகு, காயத்ரி...' எனும் போது மனசு துள்ளியது. மனதளவில், ஜானை காதலிக்க தொடங்கி விட்டாள், காயத்ரி.
'பார்த்துப் பேசி, சாப்பாடு கொடுத்தவுடன், கல்யாணம் வரைக்கும் போவதா?' என, ஆசைக்கு கடிவாளம் போட்டாலும், முடமானாலும் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது, காயத்ரியின் வயது.
மனதளவில் ஜானை காதலிக்கத் தொடங்கி விட்டாலும், இது ஒருதலைக் காதலோ என, அடிக்கடி குழம்பியது, காயத்ரியின் மனம்.
அன்று காயத்ரிக்கு ஆபீஸில், 'ஓவர் டைம்!' அருகில் வந்து உட்கார்ந்து உரிமையுடன் அவள் குடும்ப நிலமை பற்றி கேட்டான், ஜான். அழுகை, விம்மலுடன் மனதிலுள்ளதை கொட்டி தீர்த்தாள், காயத்ரி.
அவள் கையை பிடித்து, தன் கையில் வைத்து மெதுவாக தட்டி, 'நோ நோ அழாதே, காயத்ரி கூல்...' என, கூறியவனின் கண்ணிலும் நீர். இதை எதிர்ப்பார்க்காத, காயத்ரியின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.
ஒரு நாள் வேலை செய்யும் இடத்திற்கே வந்து, 'காயத்ரி நாளைக்கு சாயங்காலம் என் வீட்டிற்கு வர்றியா?' என்றான்.
திக்கென்றது. 'நானா? உங்க வீட்டிற்கா? எதற்கு ஜான்?'
'இல்ல, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், காயத்ரி. உன்னை எங்கம்மாவிற்கும் அறிமுகப்படுத்துகிறேன், வர்றியா?'
மனதில் பட்டாம்பூச்சி பறந்தது.
அன்று இரவு முழுக்க மன போராட்டம். மறுநாள் மாலை, ஜான் வீட்டிற்கு போகப் போகிறோம் என்ற படப்படப்பு, சந்தோஷ வானில் பறந்தாள், காயத்ரி.
மறுநாள் வேலைக்கு போனதும். கண்கள், ஜானை பார்க்க துடித்தது. ஆபீஸ் ரூமில் ஜான் சீட் காலியாக இருந்தது. ஓ... இன்று கொஞ்சம், 'லேட்'ஆக வருகிறான் போல் என நினைத்து, அடிக்கடி வாசலை பார்த்தது, கண்கள். மனம், தன் காதல் கை கூடும் நாளை, நினைத்து துள்ளியது.
ஆனால், அன்று முதல், ஏனோ ஒரு வாரம், வேலைக்கு வரவில்லை, ஜான்.
'உடம்பு சரியில்லையோ! என்ன ஆச்சு? ஏன், திடீரென வேலைக்கு விடுப்பு போட்டான்? போனும் வரவில்லையே...' என, மனம் சதா சஞ்சலப்பட்டது.
திடீரென ஒரு நாள், 'ஜான் சாருக்கு கல்யாணமாம்...' என, அரசல் புரசலாக தோழிகள் பேச, 'இருக்காது இருக்கவே இருக்காது...' என, மனம் நம்ப மறுத்தது.
மறுநாள், ஜான் வந்து பத்திரிகை கொடுத்து சொல்லும் போது, ஒடிந்து தான் போனாள், காயத்ரி.
'எனக்கு, உன்னை ரொம்ப பிடிக்கும், காயத்ரி. உன் மேல் எனக்கு ரொம்ப ரொம்ப அன்பு. ஆனா, கல்யாணம் எனும் பந்தத்திற்குள் நான் நுழைய, என் வீட்டில் பல நிபந்தனைகள். பணம், ஜாதி, மதம் என, பல குறுக்கீடுகள்.
'இதனால், வீட்டில் எப்ப பாரு சண்டை. நிறைய போராடினேன். அம்மா தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்த போது, என்ன செய்வதென்றே தெரியாம தவித்து விட்டேன். ஒரு வாரமாக என்னை எங்கு போகவும் விடவில்லை, அம்மா.
'அம்மாவின் அண்ணா பெண், ஒரு கால் சற்றே ஊனமான, ஜூலியை நீ திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் யார் செய்து கொள்வர் என, ஒரே டார்ச்சர்.
'என் மனதை அடகு வைத்து தான், இந்த கல்யாணம். ஊட்டி எஸ்டேட்டில் மாமாவுடன் வேலை என, அவர்களே ஏற்பாடு செய்து விட்டு தான், என்னிடம் சொன்னார்கள். அதனால், இந்த வேலைக்கும் ராஜினாமா கொடுத்துட்டேன். சாரி, காயத்ரி...'
பத்திரிக்கை கொடுக்கும் போது, அதே வாத்சல்யத்துடன் அவள் கை பிடித்து பத்திரிகை கொடுத்தான்.
ஆண்களும் அழுவரா? பாசமும், காதலும் அவர்களுக்கும் இருக்கா? பாவம், ஜான் கண்களில் கரகரவென நீர் வழிய நின்ற காட்சி, இன்றும் கண்முன்னே நின்றது. அவ்வளவுதான்.
ஜான் - ஜூலியட் திருமண, 'ரிசப்ஷனில்' தான், அவனை கடைசியாக பார்த்தாள், காயத்ரி.
வேலையை விட்டு, இந்த மாமி வீட்டில் சமையல் வேலைக்கு சேர்ந்து, 30 ஆண்டுகள் ஆனது. மாமியின் பிள்ளைகளும், பெண்ணும் வெளிநாட்டில் இருக்க, மாமியின் வயதான மாமியார், அவர் அம்மாவுடன், நான்.
''மாமி பரிமாற எல்லாம் ரெடியா?''
''இதோ ஆயிடுத்து, புளியஞ்சாதம் கலந்துட்டேன், இலை போட்டுடறேன்...''
இலை போட்டு, 55 வயதான காயத்ரி அனைவருக்கும் பரிமாற, திரும்பவும், 'காயத்ரி...' என்ற குரல். சட்டென நிமிர்ந்து பார்க்க, அதோ! அதோ! 60 வயது ஜான், பந்தியில். அழகான முன் நரை போட்டு, வயதான ஜானை பார்த்ததில், மனசு ஜில்லென்று துள்ளியது. கூட ஜூலியட்.
ஜான் திகைத்து, காயத்ரியை பார்க்க. ஜுலியட்டும் பார்த்து விட்டாள்.
''ஜான் கண்டோ, இது யாரு அறியோ? இது நம்மட காயத்ரி. பட்டத்தி காயத்ரி.'' ஜானின் மனைவியே, காயத்ரியை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள். இவளைப் பற்றி சொல்லியிருப்பானோ, ஜான்?
காயத்ரியின் கண்கள், ஜானை வெறித்தது.
''காயத்ரி எப்படி இருக்கீங்க? உங்களைப் பற்றி, ஜான் என்னிடம் சொல்லியிருக்கார். உங்க வீடு இங்கு தானா? இது என் பேத்தி, என் பொண்ணு ஜெனிபரோட மகள், காயத்ரி.''
'காயத்ரியா?' சட்டென ஜானை நேருக்கு நேர் பார்த்தாள்.
''ஆமாம் காயத்ரி. என் பொண்ணு, ஜெனிபரின் கணவர், ஹிந்து. காதல் திருமணம். இவள் என் பெண் வயிற்று பேத்தி, காயத்ரி. ஜான் தான், தன் பேத்திக்கு, காயத்ரின்னு பெயர் வைக்கணும் என்றார். எங்க மாப்பிள்ளைக்கும் இதில் சம்மதம்,'' என சொல்லிய, ஜூலியட் கலகலவென சிரித்தாள்.
''மாமி பரிமாறுங்கோ... காத்துண்டிருக்கா பாருங்கோ.''
எல்லாம் முடிந்து அவரவர்கள் ஓய்வெடுக்க. தான் சாப்பிடுவதையும் மறந்தாள், காயத்ரி.
சமையல்கட்டுக்கே வந்து, ''காயத்ரி, காயத்ரி...'' என அழைத்து, மூக்குக் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டான், ஜான்.
இரண்டு குட்டி பாக்ஸில் புளியோதரையும், நெல்லிக்காய் ஊறுகாயும் போட்டு தன்னிச்சையாக ஜானிடம் கொடுத்தாள், காயத்ரி.
''தாத்தா...'' என, குடுகுடுவென, காயத்ரி ஓடிவந்து ஜானை கட்டிக்கொள்ள, வாரி அணைத்து பேத்தியை முத்தமிட்ட ஜானையும், குழந்தையையும் பார்க்க முடியாமல், காயத்ரியின் கண்களில் நீர் திரையிட்டது, மனம் விம்மியது.
ஆண்கள் அழுவதில்லை. ஆனால், மனதில் பதிந்தவளை என்றும் மறப்பதும் இல்லை. பெண்கள் மனதார காதலித்தவனை மறப்பதில்லை. சிலர் காலப்போக்கில் மறந்தது போல் நடிக்கின்றனர்.
'வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்... ஆனாலும் அன்பு மாறாதது...' என்ற, எஸ்.பி.பி.,யின் பாட்டு, எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்தது.
ராதா நரசிம்மன்