/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: பாட்டிக்கு ஒரு கோவில்!
/
விசேஷம் இது வித்தியாசம்: பாட்டிக்கு ஒரு கோவில்!
PUBLISHED ON : ஜூலை 20, 2025

தாங்கள் தெய்வமாய் மதிக்கும் ஒரு வீரப்பெண்மணியை, 'தாதிஜி' என, அழைக்கும் மக்கள், அவளுக்காக பிரமாண்ட கோவில் எழுப்பியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு என்ற ஊரில், இக்கோவில் உள்ளது.
மகாபாரதத்தில், எதிரிகளால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டான், அர்ஜுனன் மகன் அபிமன்யு. அபிமன்யு மீது அன்பு கொண்ட அவனது மனைவி உத்தரை, அவனோடு உடன்கட்டை ஏற விரும்பினாள்.
அவளை தடுத்து, 'நீ கர்ப்பவதியாக இருக்கிறாய். உன் குழந்தையை அழிக்கும் உரிமை உனக்கில்லை...' என்றார், கிருஷ்ணர்.
'அப்படியானால், மறுபிறப்பிலும் நான், அபிமன்யுவின் மனைவியாக வேண்டும். சுமங்கலியாக வாழ வேண்டும் அல்லது அப்போதும் இதே நிலை ஏற்பட்டால், புகழுடன் நான் மரணமடைய வேண்டும்...' என, வரம் கேட்டாள், உத்தரை; கிருஷ்ணரும் தந்து விட்டார்.
மறுபிறப்பில், ஹரியானாவில் உள்ள ஹிசார் என்ற ஊரில், ஜலிராம் ஜலான் என்பவரின் மகனாகப் பிறந்தான், அபிமன்யு. அவனுக்கு, தாந்தன் என பெயரிட்டனர்.
ராஜஸ்தானிலுள்ள டோக்வா கிராமத்தில், குர்சமால் பிர்மேவால் என்பவரின் மகளாகப் பிறந்தாள், உத்தரை. அவளுக்கு, நாராயணி என பெயரிடப்பட்டது.
இருவருக்கும் திருமணம் நடந்தது.
இவர்களிடம் இருந்த அழகிய குதிரையை வாங்க ஆசைப்பட்டான், அவ்வூர் மன்னன் மகன். கொடுக்க மறுத்தான், தாந்தன்; குதிரையைப் பறித்து செல்ல முயற்சித்தான், மன்னன் மகன்.
சண்டை வலுக்கவே, ராஜாவின் மகனை கொன்று விட்டான், தாந்தன். விடுவானா மன்னன்! தாந்தனை கொன்று பழி தீர்த்தான்.
நாராயணி விடவில்லை. மன்னனுடன் போரிட்டு, அவனை கொன்றாள். கிருஷ்ணர் தந்த வரத்தின்படி, புகழ் பெற்ற பெண் ஆனாள்.
கணவனின் மரணத்திற்கு பின் வாழ விரும்பாத அவள், கணவருடன் தன்னையும் எரித்து விடும்படி வேண்டிக் கொண்டாள். அவளது விருப்பம் நிறைவேற்றப்பட்டது.
தங்கள் சாம்பலை குதிரையில் எடுத்துச் செல்லும்படி, தன் பணியாளனுக்கு கட்டளையிட்ட அவள், குதிரை எங்கு நிற்கிறதோ, அங்கே தங்களுக்கு நினைவிடம் எழுப்ப கூறினாள். அதன்படி, சிறு கோவில் எழுந்தது.
கடந்த, 1917ல், அவ்விடத்தில் பளிங்கு கற்களால் பிரமாண்ட கோவில் எழுப்பினர், மார்வாடி சமுதாயத்தினர். 'ராணி சதி மந்திர்' என, கோவிலுக்கு பெயரிடப்பட்டது.
விநாயகர், சிவன், சீதை, ஆஞ்சநேயர் மற்றும் சேக்ஷாடச மாதாக்கள் சன்னிதிகள் அமைக்கப்பட்டன. ராணி சதியை, ஒரு சூலத்தின் வடிவில் வழிபடுகின்றனர்.
இங்குள்ள திருமண மண்டபத்தில், ஏழைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கின்றனர். திருப்பதிக்கு அடுத்த, மிகப்பெரிய செல்வச் செழிப்புள்ள கோவில், இது.
தமிழகத்தில் ஆடி அமாவாசை போல், இங்கு ஆவணியில் வரும், படோ அமாவாசை விசேஷம். தங்கள் வம்ச முன்னோரான பாட்டி நாராயணியை வழிபடுவர், மக்கள். ஆகஸ்ட் 23ல், படோ அமாவாசை வருகிறது.
ஜெய்ப்பூரில் இருந்து 180 கி.மீ., துாரத்திலுள்ள ஜுன்ஜுனுவுக்கு ரயில், பஸ் வசதி உள்ளது.
தி. செல்லப்பா