
'டூ-வீலர்' இரவல் வாங்குபவரா நீங்க?
தன், 'டூ-வீலரை' சர்வீசுக்கு விட்டிருந்தார், என் நண்பர். அவசரமாக ஆபீஸ் போக வேண்டியிருந்ததால், என் வண்டியை இரவல் வாங்கிச் சென்றார். போகும் வழியில் ஒரு மருத்துவமனையில், 'ப்ளட் டெஸ்ட்' கொடுத்து விட்டு, வண்டியை திரும்ப எடுக்கும் போது, சாவியால் வண்டியைத் திறக்க முடியவில்லை.
ஆபீஸ் போகும் அவசரத்தில், உடனே, மெக்கானிக் ஒருவரை வரவழைத்து, பூட்டை கழற்றி, வேறு பூட்டை மாற்றியுள்ளார். வண்டியை ஆபீசுக்கும் எடுத்து சென்று விட்டார்.
மாலை 4:00 மணிக்கு, மெக்கானிக் போன் செய்து, அவர் மீது பூட்டை உடைத்து வண்டியை திருடியதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ள தகவலை தெரிவித்துள்ளார்.
பிறகு தான் விபரம் தெரிந்தது. என் வண்டிக்குப் பதிலாக, அதே போலுள்ள வேறு வண்டியை திறக்கப் பார்த்து முடியாமல், பூட்டை உடைத்து, வண்டியை எடுத்துச் சென்றுள்ளார், நண்பர். இதை வண்டிக்கு சொந்தக்காரர், மருத்துவமனை, 'சிசிடிவி'யில் கண்டுபிடித்து, போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இது, பெரிய பிரச்னையாகி விட்டது. போலீஸ் மூலம் சமரசம் பேசி, வழக்கில்லாமல் முடிப்பதற்குள் பெரும் பாடாகி விட்டது.
ஆகையால், யாரும் தயவு செய்து இரவல் வண்டி வாங்காதீர். அப்படி வாங்கி சென்றாலும், வண்டி நம்பரை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள் அல்லது மொபைல் போனில் போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
— ஆ.நல்லமுத்து, கோவில்பட்டி.
தையல் கடைக்கார நண்பரின் மனித நேயம்!
எங்கள் பகுதியில், பல ஆண்டுகளாக தையல் கடை நடத்தி வருகிறார், நண்பர் ஒருவர்.
அவரிடம், 10ம் வகுப்பு முடித்து விட்டு, வேலைக்கு சேர்ந்தார், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன்.
அவனுடைய பெற்றோர் இருவருமே கூலி வேலை செய்பவர்கள் என்பதால், அவனை, தன் வீட்டிலேயே தங்க வைத்து, உணவு கொடுத்து, தையல் வேலையைக் கற்றுக் கொடுத்தார், நண்பர்.
கிட்டத்தட்ட, 12 ஆண்டுகளாக, நண்பரின் தையல் கடையில் வேலை செய்தான், அந்த இளைஞன்.
அவனுக்கு திருமணம் முடிந்ததும், சொந்தமாக தையல் கடை துவங்குமாறு கூறிய நண்பர், சில லட்ச ரூபாயை வழங்கி, 'இது உன் எதிர்காலத்துக்காக, உன் மாத ஊதியத்தில், நான் பிடித்தம் செய்து சேமித்த பணம். இதை வைத்து, உண்மையாக உழைத்து, வாழ்க்கையில் முன்னேறு...' என, வாழ்த்தினார்.
அவரின் செயலைப் பார்த்து நெகிழ்ந்து போன இளைஞன், குடும்பத்தோடு நண்பருக்கு நன்றி கூறி, அவரின் வழிகாட்டுதலுடன், வேறு இடத்தில் தனியாக தையல் கடையை திறந்தான்.
தன்னிடம் பணியாற்றியவரின் எதிர்காலத்திற்காக, முன்கூட்டியே திட்டமிட்டு, பணத்தை சேமித்து, சரியான நேரத்தில் வழங்கிய நண்பரை அனைவருமே பாராட்டினர்.
— பொ.தினேஷ்குமார், செங்கல்பட்டு.
தனிமையில் இருக்கிறீர்களா?
சமீபகாலமாக ஊருக்கு வெளியே தங்கியிருக்கும் தம்பதியரை தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கும் செயல் அதிகரித்து வருகிறது.
ஊருக்கு வெளியே இருக்கும் நில புலன்களை பார்த்துக்கொள்ள தனியாக தங்கியிருக்கும் தம்பதியர் தான், இத்தகைய கயவர்களின் குறி. எனவே, அவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்வது அவசியம்.
* கட்டாயம் 'சிசிடிவி' கேமராக்களை பொருத்துங்கள். 'சிசிடிவி' கேமராக்கள் இல்லாத வீடுகள் தான் திருடர்களின் இலக்கு
* நாய் வளர்க்கலாம். ஆக்ரோஷமான நாய்கள் இருந்தால், திருடர்கள் உள்ளே வர யோசிப்பர்
* முன் பின் தெரியாதவர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம். 'உங்களுக்கு கல்யாண வயதில் பெண் அல்லது ஆண் உண்டா?' என, நைசாக பேச்சு கொடுத்து, வீட்டில் இருப்பவர்களின் விபரங்களை இவர்கள் திரட்டுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது
* ஓரளவு வசதி இருந்தால், காவலாளியை நியமித்து கொள்ளலாம். அப்படி இல்லையெனில், உறவுக்கார இளைஞர்கள் யாரையாவது, வாரம் ஒரு முறை இரவு நேரங்களில் வந்து தங்க சொல்லலாம்
* திருடர்கள் எளிதில் நுழையாதவாறு, வலுவான இரும்பு கதவுகளை அமைக்கலாம்
* கதவுகளில் அலாரம் பொருத்தலாம். அலாரம் சத்தம் ஒலிக்க ஆரம்பித்தால், திருடர்கள் பயந்து ஓடி விடுவர்.
ஒரு சவரன் தங்கம் விலை, ஒரு லட்ச ரூபாயை நெருங்கி கொண்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் காரணமாக, பண தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊருக்கு வெளியே இருப்பவர்களை தாக்கி கொள்ளையடித்தால், அக்கம்பக்கம் யாரும் இருக்க மாட்டார்கள், எளிதில் தப்பி விடலாம் என்பது, திருடர்களின் எண்ணம். அதற்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள்!
— ஜெ.கண்ணன், சென்னை.