/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (9)
/
அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (9)
PUBLISHED ON : ஜூலை 20, 2025

அமெரிக்காவில் சிவாஜிக்கு கிடைத்த தியேட்டர் அதிர்ச்சி!
அமெரிக்காவில், சினிமா தியேட்டருக்குள் நுழைந்ததும், சிவாஜிக்கு அதிர்ச்சி. அந்த பெரிய தியேட்டருக்குள், 25 பேர் மட்டுமே இருந்தனர்.
'தியேட்டர் இப்படி காலியாக இருந்தால், தியேட்டர்காரன் எப்படி பிழைப்பான்?' என, அதிர்ச்சியும், வருத்தமும் கலந்த குரலில் கேட்டார்.
'இங்கே மக்கள், சினிமா தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதை விட, வீட்டிலேயே குறைந்த செலவில், 'டிவிடி'யில் படம் பார்ப்பதையே விரும்புகின்றனர். வார இறுதி நாட்களில் தியேட்டரில் கொஞ்சம் கூட்டம் இருக்கும். அவ்வளவு தான்...' என்றேன்.
'இப்படியிருந்தா தியேட்டர்காரனுக்கு எப்படி வருமானம்?' என, எதிர் கேள்வி கேட்டார், சிவாஜி.
'அமெரிக்காவில் சினிமா டிக்கெட் விலை ரொம்ப ஜாஸ்தி. ஒரு டிக்கெட், 25 டாலர் அளவுக்கு இருக்கும். டிக்கெட் விலையை வச்சு தான் சமாளிக்கிறாங்க...' என்றேன்.
முதல்முறை அவர், அமெரிக்காவுக்கு வந்து சிகிச்சை பெற்று, சென்னை திரும்பி விட்டார்.
அதற்கு சில மாதங்களுக்கு பிறகு, நான், சென்னை வந்த போது, அவரை சந்தித்தேன்.
கொடுத்த மாத்திரைகளை சரியாக சாப்பிடுகிறாரா, உணவுக் கட்டுப்பாடு இருக்கிறதா என்றெல்லாம் விசாரித்தேன்.
அந்த காலக்கட்டத்தில், இந்தியாவில் ஒரு சிக்கல் இருந்தது. அமெரிக்காவில் பரிந்துரை செய்த மருந்துகள், இந்தியாவில் எளிதாக கிடைக்காது. அமெரிக்காவில் மட்டுமே அதிகம் கிடைக்க கூடியவை.
அதனால், சிவாஜிக்காக பிரத்யேகமாய் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மாத்திரைகளை அனுப்ப ஏற்பாடு செய்திருந்தேன்.
அந்த மாத்திரைகள் அவருக்கு போதுமான அளவில் கிடைத்ததா... அதை அவர் ஒழுங்காய் சாப்பிட்டாரா என்ற சந்தேகங்கள் என்னிடம் இருந்தது.
பிற்காலத்தில் நான், அமெரிக்காவிலிருந்து வரும் போதெல்லாம் அவருக்கு தேவையான மருந்துகளை எடுத்து வந்து விடுவேன்.
மருந்து, மாத்திரை சாப்பிடுவது தவிர, உடற்பயிற்சியும் அவசியம் என்றும், அவரிடம் சொல்லி இருந்தேன். ஆனால், உடற்பயிற்சி என, சிரமப்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் எச்சரித்திருந்தேன்.
தினமும் சிறிது நேரமாவது நீங்கள் நடக்க வேண்டும். நடைபயிற்சியே போதுமானது என்பது தான், அவருக்கு நான் கொடுத்த ஆலோசனை.
அவரும் என்னுடைய ஆலோசனையின் படி, தினமும் வீட்டுக்குள்ளேயே நடப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.
உணவு விஷயத்திலும் அவருக்கு கட்டுப்பாடுகள் தேவையிருந்தது. எதையெல்லாம் தாராளமாக சாப்பிடலாம், எதையெல்லாம் அறவே தவிர்க்க வேண்டும் என, அவருக்கு ஒரு பட்டியல் கொடுத்திருந்தேன். அதையும் கர்ம சிரத்தையாய் அவர் கடைபிடித்தார்.
நான் சொன்னவற்றை எல்லாம் சரியாக கடைபிடிக்கிறார் என்பதை அறிந்து, எனக்கு மகிழ்ச்சி.
அதன்பின், ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும், டாக்டர் மற்றும் குடும்ப நண்பர் என்ற முறையில், சிவாஜி வீட்டுக்குச் சென்று சந்திப்பது, என் வழக்கமாகி விட்டது.
எப்போதுமே மிக நேர்த்தியாக உடைகள் அணிவார், சிவாஜி.
அமெரிக்காவில் வீட்டில் இருக்கும் போது கூட, வேட்டியோ, இரவு உடைகளோ அணிந்து காட்சி அளிக்கமாட்டார். பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, எப்படி சிறப்பாக உடை அணிந்து செல்வாரோ, அதே போல் தான் இருப்பார்.
காலையிலேயே குளித்து விடுவார். அவர் அறையிலிருந்து வெளியில் வரும்போது பார்த்தால், ஏதோ விழாவுக்கு செல்பவர் போல் இருப்பார். அவரது உடைகள் அத்தனை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். இது, அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவில் அவரை சந்திக்க அவரது வீட்டுக்கு செல்லும் போதும் கவனித்திருக்கிறேன்.
மிகவும் சீரியசான உணர்ச்சிபூர்வ படங்களில், சிவாஜி நடித்திருந்தாலும், இயல்பில் மிகவும் நகைச்சுவையான, மனிதர். அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதை பலமுறை கவனித்து இருக்கிறேன்.
அப்படி ஒரு சம்பவம் சொல்கிறேன்...
முதல்முறை அமெரிக்கா வந்து சென்றபின், நான்கு ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவர் அமெரிக்காவுக்கு வந்திருந்தார்.
என்னுடன் பணியாற்றும் மூத்த மருத்துவர் ஒருவரும், சிவாஜியை பரிசோதனை செய்து, கருத்து சொன்னால் நன்றாக இருக்கும் என, நினைத்தேன்.
அதற்காக, சிவாஜியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்த சமயத்தில், அந்த மருத்துவரையும் வரவழைத்தேன். இது குறித்து ஏற்கனவே, சிவாஜியிடமும் சொல்லி இருந்தேன்.
தான் வருவதற்கு முன்பாக ஒரு நர்ஸை அனுப்பி, சிவாஜிக்கு சில பரிசோதனைகளை செய்யும்படி சொல்லி இருந்தார், அந்த மருத்துவர்.
சிவாஜிக்கு பரிசோதனைகள் செய்ய துவங்கினார், அந்த நர்ஸ். ஒவ்வொரு பரிசோதனையாக முடித்து, அதன் விபரங்களைப் பதிவு செய்து கொண்டிருந்தார். நானும் பக்கத்தில் இருந்தேன். அந்த அமெரிக்க நர்சுக்கு நல்ல வாட்டசாட்டமான உடல்வாகு.
அந்த நர்ஸ் செய்த பரிசோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கொண்டிருந்தார், சிவாஜி.
அப்போது திடீரென்று சிவாஜி, சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு, என்னிடம் தமிழில், 'ஏன் டாக்டர், இந்த நர்ஸ் ஆம்பிளையா, பொம்பிளையா?' என, கேள்வி கேட்க, சட்டென்று எனக்கு சிரிப்பு வந்து விட்டது. ஆனால், அடக்கிக் கொண்டேன்.
இரண்டு ஆண்கள், ஒரு பெண் கூட இருக்கும் போது, அந்த பெண்ணுக்கு புரியாத மொழியில் பேசி சிரிப்பது, நாகரிகமான செயல் இல்லை என, நினைத்தேன். அந்த பெண், அந்த பேச்சையும், அதை அடுத்த சிரிப்பையும் தவறாக எடுத்துக் கொள்ளலாம் என்பதால், கஷ்டப்பட்டு, சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.
ஆனாலும், அந்த நர்ஸ் புத்திசாலி! என்னிடம் திரும்பி, 'பேஷன்ட் என்ன சொல்கிறார், டாக்டர்?' என, ஆங்கிலத்தில் கேட்டார்.
சிவாஜி கேட்ட கேள்வியை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவரிடம் சொல்ல முடியுமா என்ன? ஆனாலும், ஏதோ சொல்லி சமாளித்தேன்.
என்ன சொல்லி இருப்பேன்?
யோசித்து வையுங்கள், அடுத்த வாரம் சந்திப்போம்.
— தொடரும்.எஸ். சந்திரமவுலி