sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

1


PUBLISHED ON : ஜூலை 20, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 20, 2025

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

அமெரிக்காவில் நடைபெற்ற, பத்திரிகையாளர்களுக்கான, 'செமினார்' ஒன்றில் கலந்து கொள்ள, உலகம் முழுவதிலுமிருந்து, பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து, மூத்த பத்திரிகையாளர் ஒருவரும், செமினாரில் கலந்து கொண்டு, திரும்பியிருந்தார்.

அவரை சந்தித்து, 'செமினார்' பற்றி தெரிந்து கொள்ள லென்ஸ் மாமாவும், நானும் சென்றிருந்தோம்.

அவரிடம் பேசிய போது, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், அச்சு ஊடகங்கள் சந்திக்கும் சவால்களை பற்றி விரிவாக விவாதித்ததாக கூறினார். ஆனாலும், பத்திரிகை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்திருப்பதாக ஆய்வு கட்டுரை ஒன்று தெளிவுப்படுத்தி இருப்பதையும் கூறினார்.

'செமினார்' நடந்து முடிந்த இறுதி நாளன்று, 'நியூசியம்' ஒன்றுக்கு சென்று வந்ததாக கூறினார், மூத்த பத்திரிகையாளர்.

'நியூசியமா? அப்படி என்றால் என்ன?' என்றேன், நான்.

சொல்ல ஆரம்பித்தார்:

மியூசியம்ன்னு கேள்விப் பட்டிருக்கோம். அதுமாதிரி, 'நியூசியம்'ன்னு ஒண்ணு இருக்கு. பழைய பொருட்களை எல்லாம் காட்சிக்காக வைக்கிறதுக்கு பேரு, மியூசியம்ன்னு நமக்கு தெரியும். நியூஸ் அதாவது, செய்திகள்ன்னு சொல்றோமே, இதைப் பற்றிய விபரங்கள் அடங்கிய கண்காட்சி ஒண்ணு அமைத்துள்ளனர். அதுக்குத்தான் நியூசியம்ன்னு பேர்.

பழைய பேப்பர்ன்னா, அதை நாம சர்வ சாதாரணமா நினைக்கிறோம். அதுலேயும், முக்கியமான செய்திகளும், தகவல்களும் இருக்கும். மளிகை கடையிலே இருந்து பொருட்கள் கட்டி வர்ற பொட்டலத்துலே கூட, அபூர்வமான செய்திகள் இருக்கும். அதை அலட்சியப்படுத்தாம பார்த்தோம்ன்னா, அதுல இருந்தும் தகவல்களை சேகரிக்கலாம்.

நியூசியத்தை பற்றி சொல்றதுக்கு முன், இன்னொரு விஷயத்தை பற்றி சொல்லி விடுகிறேன்.

ஒரே நாள்ல தன்னோட மரியாதையை இழக்கிறது செய்தித்தாள்; ஆனால், அதுதான் பிறகு சரித்திரமாகவும் மாறுது. செய்தித்தாள்களை வச்சும் பிரமாண்டமான காரியங்களை செய்ய முடியும்ன்னு, அமெரிக்காவிலே நிரூபிச்சிருக்கார், ஒருத்தர்.

அமெரிக்காவின், மசாசுசெட்ஸ் மாகாணத்திலே, ராக்போர்ட் நகருக்கு போனால், அங்கு பேப்பர் இல்லம்ன்னு, ஒரு மாளிகை இருக்கு. கடந்த 1922ல், எலீஸ் என்பவர், இந்த மாளிகையை அமைச்சிருக்காரு.

பல ஆண்டுகளாக சேகரிச்ச, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செய்தித்தாள்களை வச்சு, மாளிகையை அமைச்சிருக்கார், அவர். பசை போட்டு உருட்டி திரட்டி, அந்த இல்லத்தை அமைச்சிருக்கார். அதைக் கட்டி முடிக்க, அவருக்கு பல ஆண்டுகள் ஆகியிருக்கு.

அதுக்குள்ளே, செய்தி துறை தொடர்பான பல ஆவணங்களை அவர் சேகரிச்சு வச்சிருக்காராம். பல ஆண்டுகளாகியும், அந்த பேப்பர் மாளிகையோட சுவர்களிலே ஒரு சிறு கீறலோ, வெடிப்போ ஏற்படலையாம். அதைப் பார்வையிட, உலகத்தில் பல இடங்களிலே இருந்தும், மக்கள் வர்றாங்களாம்.

அந்த, செய்தி மாளிகைக்குள், முதலாம் உலகப் போரின் போது, பரபரப்பு செய்திகளோட வெளியான பத்திரிகைகளை மட்டும் வச்சு, ஒரு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

நியூசியம்ன்னு சொன்னேன் இல்லையா... இப்ப அதுக்கு வருவோம். அமெரிக்காவில், வாஷிங்டன் நகரத்தில் இது அமைஞ்சிருக்கு. 'சுதந்திர அரங்கம்' என்ற பத்திரிகையாளர் குழுவால் அமைக்கப்பட்டது, இது. செய்தி என்ற துறை எப்போது துவங்கியது, எப்படி வளர்ந்தது என்பது பற்றி எல்லாம் விபரமா சேகரிச்சு, இங்கே காட்சிக்கு வச்சிருக்காங்க.

இந்த நியூசியத்தோட நுழைவாயிலில், 30 மொழிகளில், 'செய்திகள்' என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் ஹிந்தியும், வங்காளமும் அதில் இடம் பெற்றிருக்கு.

ஒரு குறிப்பிட்ட செய்தி, உலகத்தில் உள்ள 'டிவி'களில் வேறு வேறு கோணங்களில் எப்படி ஒளிபரப்பாகிறது என்பதை, அகன்ற வீடியோ திரையில் இங்கு பார்க்க முடியும்.

இந்த கட்டடத்தின் முதல் மாடியில், ஒரு பூகோள உருண்டை இருக்கிறது. அதில், உலகெங்கும் இருந்து வெளியாகிற, 11 ஆயிரத்து, 700 செய்தித்தாள்களின் தலைப்புகளை அந்தந்த நாடுகளுக்கு மேலேயே பார்க்கலாம். செய்திகளை சேகரிக்க போய், வீரமரணம் அடைந்த பத்திரிகையாளர்களுக்கு என்றே ஒரு தனிப்பகுதி இருக்கு.

அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த, கூட்டன்பர்க் அச்சிட்ட முதல் பைபிள் மற்றும் பழைய காலத்தில், கையெழுத்துப் பிரதியாகவே வெளியிடப்பட்ட, அபூர்வ பத்திரிகைகள் எல்லாம் இங்கு காட்சியில இருக்கு.

இன்னொரு அதிசயம் என்னன்னா, உங்களோட பிறந்தநாள் அன்று வெளியான ஏதாவது ஒரு பத்திரிகை தேவையெனில், அதற்குரிய பணத்தை செலுத்தி, அதை வாங்கிக்கலாம். எதிர்காலத்துலே 'டிவி' பெட்டிகள் எப்படி எல்லாம் வடிவம் எடுக்கும்ங்கிற மாடல்களையும் இங்கே வச்சிருக்காங்க.

நம்மோட சந்தேகங்களை தீர்த்து வைக்கறதுக்காகவே, பல பத்திரிகையாளர்கள் அங்கே இருக்காங்க.

- இப்படி கூறி முடித்தார், மூத்த பத்திரிகையாளர்.

'இந்த நியூசியத்தை பின்பற்றி, எல்லா இடங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுத்தால், வாசகர்கள் பயனடைவரே...' என, நினைத்துக் கொண்டேன், நான்.



காலையில், படுக்கையில் இருந்து எழுவதில் துவங்கி, இரவு படுக்கையை மீண்டும் விரிக்கும் வரை, ஒரு நாளில் நாம் எவ்வளவு தகவல் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பிறருடன் வார்த்தை உரையாடல்கள் மேற்கொள்வது தான், தகவல் தொடர்பு என்பது இல்லை. நம் உடல் மொழி, சைகை, சிரிப்பு என, சின்ன சின்ன விஷயங்களும் நம்மை இந்த உலகத்துடன் எப்போதும் தொடர்பிலேயே வைத்திருக்கும். அந்த சமயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள்.

* எப்போதும் சின்ன புன்னகை ஒன்றை அணிந்திருங்கள்

* பிறர் சொல்வதைக் கவனியுங்கள்; காது கொடுத்து கேளுங்கள்

* பதில் மரியாதை எதிர்பாராமல், பிறருக்கு மரியாதை செலுத்துங்கள்

* அடிக்கடி எதிராளியின் கண்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள தவறாதீர்கள்

* உங்களிடம் கேட்டாலொழிய அறிவுரை வழங்காதீர்கள்

* சபையோர் முன் ஒருவரை பாராட்டுங்கள்; அவரையே கண்டிப்பது என்றால், தனிமையில் கண்டியுங்கள்

* இந்த உலகத்திலேயே சிறந்த இசையாக ஒவ்வொருவருக்கும் தோன்றுவது, அவரவரின் பெயர் ஒலிக்கும் ஓசை தான். வஞ்சனை இல்லாமல் எப்போது எல்லாம் தேவையோ, அப்போதெல்லாம் அடுத்தவரை பெயர் சொல்லி அழையுங்கள்

* எப்போதும் தற்பெருமையையோ, அதீத ஆக்ரோஷத்தையோ வெளிப்படுத்தாதீர்கள்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!






      Dinamalar
      Follow us