/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: படுத்திருக்கும் பைரவர்!
/
விசேஷம் இது வித்தியாசம்: படுத்திருக்கும் பைரவர்!
PUBLISHED ON : நவ 09, 2025

நவ., 12 - பைரவாஷ்டமி
பெ ருமாளை பல கோவில்களில், சயன நிலையில் தரிசித்திருப்பீர்கள். சிவனை, ஆந்திராவிலுள்ள சுருட்டப்பள்ளியில் சயன நிலையில் பார்க்கலாம். பைரவரை, மத்தியபிரதேச மாநிலம் கம்திஹ் கிராமத்தில் மட்டுமே சயன நிலையில் தரிசிக்க முடியும்.
சிவனின் அம்சமான, பைரவருக்கு, கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி அவதார நாளாகும். இவ்வாண்டு, ஐப்பசி மாதக் கடைசியிலேயே, இந்நன்னாள் வருகிறது.
தாருகாசுரன் என்பவன் சிவனை நோக்கி கடும் தவமிருந்து, அழியா வரம் வேண்டினான். உலகத்தில் பிறந்தவர்கள் இறந்தாக வேண்டும் என்ற சிவன், ஏதேனும் ஒரு பொருளால் அழிவை வேண்டும்படி தாருகனிடம் சொன்னார், அகங்காரம் கொண்ட தாருகன், 'தன்னை ஒரு பெண்ணால் என்ன செய்து விட முடியும்...' என்ற தைரியத்தில், ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு வரலாம் என, வரம் பெற்றான்.
வரத்தைப் பயன்படுத்தி தேவர்களைத் துன்புறுத்தினான், தாருகாசுரன். பயந்து போன தேவர்கள், சிவனின் மனைவி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். அவள், சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில், ஒரு உருண்டையை எடுத்து, ஒரு பெண்ணைப் படைத்தாள். விஷத்தை, 'காளம்' என்பர். காளத்தில் இருந்து தோன்றிய பெண், 'காளி' எனப்பட்டாள். அவள் கோபத்துடன், தாருகன் இருக்கும் திசை நோக்கி திரும்பினாள்.
அந்தக் கோபம், அனலாக மாறி தாருகாசுரனை சுட்டெரித்தது. பின் அந்தக் கனலை, பயங்கர வடிவுள்ள குழந்தையாக மாற்றினாள், காளி. அந்தக் குழந்தையையும், காளியையும் தன்னுள் அடக்கி, எட்டுக் குழந்தைகளை உருவாக்கி, அவற்றை ஒருங்கிணைத்தார், சிவன். அதற்கு, 'பைரவர்' என பெயர் சூட்டினார். இதன் அடிப்படையிலேயே, அஷ்ட பைரவர் (அஷ்டம் என்றால், -எட்டு) சன்னிதி கோவில்களில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதத்தின் ஆன்மிகத் தலைநகரான காசியின் காவல் தெய்வம், பைரவர் தான். பைரவரின் வித்தியாசமான சிலையை தரிசிக்க வேண்டுமானால், மத்திய பிரதேச மாநிலம், ரிவா மாவட்டம், குர்ஹ் என்ற ஊரில் இருந்து 6 கி.மீ., துாரத்திலுள்ள கம்திஹ் கிராமத்திற்கு செல்ல வேண்டும். இங்குள்ள பைரவ்நாத் கோவிலில், 27 அடி உயரம், 12 அடி அகலமுள்ள சயன நிலையில் உள்ள பைரவரைத் தரிசிக்கலாம்.
இந்த சிலை, 10ம் நுாற்றாண்டில் வடிக்கப்பட்டதாம். இந்த சிலை இருந்த கோவில் அழிந்து விட்டது. புதிய கோவில் அமைக்கப்பட்ட பின், மத்திய பிரதேச அரசு இதன் முக்கியத்துவம் கருதி, 1.67 கோடி ரூபாய் செலவில், வளர்ச்சிப்பணியை மேற்கொண்டது. இந்த சிலை நின்ற நிலையில் இருந்திருக்கலாம் என கருதி, இதைத் துாக்கி நிறுத்த, அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளபட்டது. ஆனால், நவீன உபகரணங்களை பயன்படுத்தியும், அச்சிலையை அசைக்கக் கூட முடியவில்லை. இதன் எடையும் என்னவென்று இதுவரை தெரியாது. இதனால், படுத்த நிலையிலேயே, பக்தர்களுக்கு காட்சி தருகிறார், பைரவர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து, ம.பி.யிலுள்ள சத்னாவுக்கு ரயில் உள்ளது. அங்கிருந்து டாக்சியில் 53 கி.மீ., கடந்தால் ரிவாவை அடையலாம். ரிவாவில் இருந்து கம்திஹ் கிராமத்துக்கு, 33 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டும். விமானத்தில், அலகா பாத் சென்று, அங்கிருந்து பிரயாக்ராஜ் வழியாக 140 கி.மீ., துாரம் டாக்சியில் செல்லலாம்.
தி. செல்லப்பா

