
பேச்சும் ஒரு கலைதான்!
நண்பர் ஒருவர், ஒருநாள் மதியம் வீட்டுக்கு வந்திருந்தார். சாப்பிடும் நேரமாகியதால், 'வாங்க சாப்பிடலாம்...' என்றேன். 'நான் வெளி இடங்களில் சாப்பிடறதில்லை...' என்றார்.
'சரி மோராவது குடியுங்கள்...' என்றேன்.
'யார் வீட்டிலும் பச்சை தண்ணீர் கூட குடிக்க மாட்டேன்...' என்றார், கறாராக.
அவர் பேச்சு எனக்கு மட்டுமல்ல, வீட்டில் இருந்தவர்களுக்கும் சங்கடத்தை கொடுத்தது. அவர் வந்த விஷயத்தை கேட்டு, பேசிவிட்டு, 'இதோ பாருங்கள். வெளி இடங்களில் சாப்பிடுவதில்லை என்பது உங்கள் கொள்கையாக இருக்கலாம். உபசரிப்பவர் மனம் நோகும்படி அதை சொல்வது சரியல்ல. 'இப்பதான் சாப்பிட்டேன் அல்லது 'டயட்'டில் இருக்கிறேன் என்று, இங்கிதமாக சொல்லி, மறுத்து விடுங்களேன்...' என்று அறிவுரை சொன்னேன்.
'எப்போதோ, யாரோ ஒருவர் வீட்டில் சாப்பிட்டு, உடம்புக்கு வந்து, நாலு நாள் மருத்துவமனையில் இருந்ததாகவும், அன்றிலிருந்து வெளியில் சாப்பிடுவதில்லை...' என்று காரணம் சொன்னார்.
'எதுவாயிருந்தாலும், சொல்கிற முறை ஒன்று இருக்கிறதே...' என்றேன்.
புரிந்து கொண்டு, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
என்னதான் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், உரிமையிருக்கிறதே என்று எடுத்தெறிந்து பேசுவதை தவிர்த்தால், நட்பு நீடிக்கும்.
- என்.ராதாகிருஷ்ணன், கோவை.
புரிந்து கொள்ளுங்கள், ஆண்களே!
என் வீட்டருகில் இருக்கும், தோழி ஒருத்தி, தீபாவளிக்கு முதல் நாள் இரவு, மூன்று நாள் பிரச்னையில் சிக்கிக் கொண்டாள். 'நல்ல நாளும் அதுவுமாக, சாமி கும்பிட முடியாமல் ஆகிவிட்டதே...' என்று தோழி வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், விஷயம் அறிந்த தோழியின் கணவர் கொதித்தெழுந்து விட்டார்.
'சனியன் பிடித்தவளே...' என்று ஆரம்பித்து, காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு அசிங்கமாக பேசி சண்டை போட, அது, அக்கம் பக்கத்தாருக்கு தெரிந்து, 'மூன்று நாள் விஷயம்' தெரு முழுக்கத் தெரிந்து விட்டது.
தோழியின் மாமியார், நாத்தனார் உட்பட பெண்களும் ஒன்று சேர்ந்து, 'நல்ல நாளும், பொழுதுமா ஒருத்தி தலைக்கு குளிக்கலைன்னா, அவ தரித்திரம் பிடிச்சவ தானே!' என, கடுமையாக விமர்சித்து பேசியது தான் கொடுமை.
தீட்டு, துக்கம் போன்றவை இயற்கை நிகழ்வுகள் தானே! படிக்காதவர்களுக்கு தான் இது புரியவில்லை என்றால், கல்லுாரி பேராசிரியரான தோழியின் கணவருக்கும், இது புரியவில்லையென்றால் என்னவென்பது.
ஏழேழு ஜென்மத்துக்கும், இந்த ஆண்கள் திருந்தவே மாட்டார்களா?
- தவமணி தியாகு, திண்டுக்கல்.
மாவுக்காரரின் வியாபார யுக்தியை பாருங்களேன்!
இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என, யோசித்து கொண்டிருந்த வேளையில், வெளியே இட்லி, தோசை என, ஒலிபெருக்கி சத்தம் கேட்க எட்டிப் பார்த்தேன்.
தினமும் காலையிலும், மாலையிலும் இட்லி மாவு விற்பவரின் இரு சக்கர வாகனத்தின் பின்புறம், பெரிய 'ஹாட் பாக்' மற்றும் முன்புறம், பெரிய துாக்கு வாளியும் இருந்தது.
'என்னண்ணே, மாவு விற்பீங்க, இப்ப இட்லி, தோசை விற்கறீங்க?' எனக் கேட்டேன்.
'மாவு அரைத்து இட்லி, தோசை சுட்டு சாப்பிட முதலில் சங்கடப்பட்டாங்க, வாடிக்கையாளர்கள். அதனால், மாவு விற்கிற தொழிலில் இறங்கினேன். என்னை போல் பல பேர், இந்த தொழிலில் இறங்கிட்டாங்க. இதனால், வியாபாரமும் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு.
'ஒரு ஏரியாவில், 'இப்படி மாவு கொண்டு வந்து விற்கிறதுக்கு பதிலாக, இட்லி, தோசை, சாம்பார்ன்னு கொண்டு வந்தீங்கன்னா, எங்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்'ன்னு சொன்னாங்க. எனக்கும் அது நல்ல யோசனையாக இருந்தது. அதான், இட்லி, தோசை தயார் செய்து விற்பதில் இறங்கிட்டேன்.
'காலை, இரவு ரெண்டு நேரமும் கொண்டு வருவேன். அதுபோக, உங்க வீட்டு விசேஷத்திற்கும் இட்லி, தோசை வேணும்ன்னா சொல்லுங்க, அதையும் செஞ்சு தர்றேன்.
'மாவு விற்கறதை காட்டிலும், இதில் வருமானம் அதிகமாக கிடைக்கிறது. மாவு கேட்கிறவங்களுக்கு மாவும் கொடுக்கறேன்...' என்றார்.
செய்யும் தொழிலிலேயே மாற்றத்தை கொண்டு வந்து, தன் வியாபார யுக்தியால் முன்னேற துடிக்கும் இவரை போல மற்ற வியாபாரிகளும் முயற்சிக்கலாமே!
- ஜெ.ரவிக்குமார், காங்கயம்.

