/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: அசாத்திய பெண்மணி!
/
விசேஷம் இது வித்தியாசம்: அசாத்திய பெண்மணி!
PUBLISHED ON : மார் 08, 2026

மார்ச் 14 - காரடையான் நோன்பு
இ றந்தவர்களை எழுப்ப மனித சக்தியால் முடியுமா என்றால், முடியாது என்றே பதிலளிப்போம். ஆனால், இறந்த தன் கணவன் சத்தியவானை மீட்டெழ வைக்க, சாவித்திரியால் முடிந்தது. இன்று வரை இவர்கள் சரித்திரத்தில் வாழ்கின்றனர் என்றால், அதற்கு சாவித்திரியின் அசாத்திய துணிச்சலே காரணம்.
சத்தியவானும், சாவித்திரியும் காட்டுக்குப் போயினர். விதிப்படி, மரணிக்கிறான், சத்தியவான். எமனுடன் சாதுரியமாக வாதாடி, தன் கணவனின் உயிரை மீட்டாள், சாவித்திரி. இது, பலரும் அறிந்த கதை. ஆனால், இப்படி வாதிடும் அசாத்திய திறமை, சாவித்திரிக்கு எப்படி வந்தது என்பது தெரியாத தகவல்.
ஒருவருக்கு நல்ல பிள்ளை அமைய வேண்டுமானால், பெற்றோர் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
மத்ர தேசத்து மன்னன், அஸ்வபதி நற்குணங்கள் மிக்கவன். நாட்டு மக்களின் நலன் கருதி, யாகங்களை நடத்துவான். வாக்கு கொடுத்தால் அதைக் காப்பாற்றாமல் விடமாட்டான். மக்கள் மட்டுமல்ல, தன் நாட்டில் வாழும் பிற உயிர்களின் நலத்திலும் அக்கறை கொண்டிருந்தான், அஸ்வபதி.
இந்த நல்லவனுக்கு குழந்தை இல்லை. இதனால், சாவித்திரி தேவியை நினைத்து கடும் விரதம் அனுஷ்டித்தான், அஸ்வபதி. அது, சாதாரண விரதமல்ல. 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக, நள்ளிரவு வேளையில் மட்டும் உயிரைத் தக்க வைப்பதற்காக சிறிதளவு உணவு உண்டு கடும் தவம் புரிந்தான். சாவித்திரி தேவியை வரவழைக்க, பத்தாயிரம் வகை ஆஹுதிகளை கொடுத்தான். ஆஹுதி என்பது, யாக குண்டத்தில் இடப்படும் பொருள்.
இந்த கடும் விரதத்துக்கு பிறகே, சாவித்திரி அவன் முன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' என்றாள்.
'என் குலத்திற்கு பெருமை சேர்க்கும் பிள்ளைகள் ஏராளமாக பிறக்க வேண்டும்...' என்று சாமர்த்தியமாக கேட்டான், மன்னன். வெறுமனே பிள்ளை வேண்டும் என, கேட்கவில்லை.
அவனிடம், 'பிரம்மா எனக்கு சொன்னதை உனக்கு சொல்கிறேன். உன் பெயரை இந்தப்பூவுலகம் உள்ள வரை வாழ வைக்கும் அறிவார்ந்த பெண் குழந்தை பிறக்கும். மேற்கொண்டு வரம் எதையும் கேட்கக்கூடாது...' என்று கூறி, மறைந்து விட்டாள், சாவித்திரி.
இப்படி கடும் தவமிருந்து, பிறந்த மகள் தான், சாவித்திரி. சாவித்திரி தேவியின் அருளால் பிறந்ததால் அவளுக்கு, சாவித்திரி என, பெயர் சூட்டினார், அரசர்.
சாவித்திரி என்றால், சரஸ்வதியை குறிக்கும். சரஸ்வதியின் அருளால் ஒரு குழந்தை பிறந்தால், அதுவும், சரஸ்வதி போல அறிவு சார்ந்ததாகத் தானே இருக்கும்!
இதனால் தான் அவளுக்கு வாக்கு சாதுர்யமே வந்தது. உயிரை பறிக்கும், எமனிடமே தத்துவ முத்துக்களை உதிர்த்தாள். அவளது பேச்சில் மயங்கிப் போன, எமன், அவளுக்கு ஐந்து வரங்களைக் கொடுத்தான். அதில் ஒன்று தான், சாமர்த்தியமாக தன் கணவன் உயிர் பிழைப்பதற்காக கேட்கப்பட்ட வரம்.
மற்றவர் நலன் நாடும் பெற்றோர்களுக்கு மட்டுமே நல்ல பிள்ளைகள் பிறப்பர் என்பது, சாவித்திரியின் பிறப்பு கற்றுத்தந்த பாடம்.
தி.செல்லப்பா

