PUBLISHED ON : ஜூன் 28, 2026

அநேக சிவாலயங்களில், ஒரு கணக்குப்பிள்ளை தான் இருப்பார்; அவர் தான், சண்டிகேஸ்வரர். கோவிலின், வரவு-செலவு கணக்கின் பொறுப்பாளர் இவர் தான். எத்தனை பேர் வந்தனர், எத்தனை பேர், சிவ-பார்வதியை மனதார வணங்கினர், பெயரளவுக்கு வணங்கியவர்கள் எத்தனை பேர், கோவிலில் என்னென்ன பொருட்கள் உள்ளன, அவற்றை யாராவது எடுத்துச் சென்றனரா... இப்படி பல கணக்கெடுப்புகள், இவர் வசம் இருக்கும். சிவதியானம் செய்வது போல், கண் மூடி இருந்தாலும், இவர் கண்களில் இருந்து எதுவும் தப்ப முடியாது.
இதனால் தான், சிவன் கோவிலுக்கு சென்றால், சண்டிகேஸ்வரரை வணங்காமல் வரக்கூடாது. அவ்வாறு செய்தால், கோவிலுக்கு சென்ற பலன் கிடைப்பதில்லை என்பர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மதுவனேஸ்வரர் கோவில், சண்டிகேஸ்வரர் சன்னிதிக்குள், எமதர்மனின் கணக்குப்பிள்ளையான, சித்ரகுப்தனும் இருப்பது விசேஷத்திலும் விசேஷம். இவர், உயிர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதுபவர். போதாக்குறைக்கு, சண்டிகேஸ்வரரின் பெண் அவதாரமும், அம்பாள் சன்னிதி கணக்கு வழக்குகளை பராமரிப்பவளுமான, சண்டிகேஸ்வரியும் இதே சன்னிதிக்குள் அருள்பாலிக்கிறாள்.
கோவிலுக்கு வந்தால், அங்குள்ள தெய்வத்தின் சிறப்புகளை மட்டும் பேச வேண்டும். இதை விடுத்து குடும்ப கதை, அரசியல் மற்றும் இதர விஷயங்களை பேசக்கூடாது. அப்படி செய்வது பெரும் பாவம். இந்த பாவக்கணக்குகளை, மேற்பார்வை செய்வார், சித்ரகுப்தர். அதே நேரம் கோவிலுக்குள் தேவாரம் பாடுவோர், ஆத்மார்த்தமாக வணங்குவோர் செயல்பாடுகளும், அவரது கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்படும். அதற்குரிய பலன்கள் கண்டிப்பாக தரப்படும்.
நன்னிலம் மதுவனேஸ்வரர் கோவில், மாடக்கோவில் வகையைச் சேர்ந்தது. இவ்வகை கோவில்களில் சிவ சன்னிதிக்குள் யானை புக முடியாத அளவுக்கு சன்னிதி உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
கோச்செங்கட்சோழன் என்ற மன்னர் இவ்வகை கோவில்களைக் கட்டினார். முற்பிறப்பில், இவர் சிலந்தியாகப் பிறந்தார் என்பது, புராண வரலாறு. சிவலிங்கத்தின் மேல் இலை, தழை, துாசு விழாமல் இருக்க, வலை பின்னி தடுத்தது, சிலந்தி. அதே லிங்கத்தை வணங்க ஒரு யானையும் வரும். லிங்கத்தின் மேல் ஒட்டடையாக இருக்கிறதே என எண்ணி சிலந்தி வலையை அகற்றி விடும். சிலந்தி மிகவும் வருத்தப்படும்.
இந்த முன்ஜென்ம நினைவு காரணமாக, கோச்செங்கட்சோழன், யானை புக முடியாத மாடக்கோவில்கள் பலவற்றைக் கட்டினான். அதில் ஒன்று, நன்னிலம் மதுவனேஸ்வரர் கோவில். இங்கே மதுவனேஸ்வரர் அம்பாள் மதுவன நாயகியுடன் அருள்பாலிக்கிறார்.
- தி. செல்லப்பா
