PUBLISHED ON : ஜூன் 28, 2026

முதியவர்கள் தனிமையில் தவிக்காமல் இருக்க...
நண்பர் வசிக்கும் குடியிருப்புக்கு சென்ற போது, மாலை நேரத்தில் சில முதியவர்கள் ஒன்றுகூடி பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.
அதை சாதாரண சந்திப்பு என்று முதலில் நினைத்தேன். அதைப்பற்றி விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்:
அந்த குடியிருப்பில், பல முதியவர்கள் தனியாக வசிப்பவர்கள். அவர்களது வாரிசுகள் வேலை காரணமாக, வெளியூரில் இருப்பதால், சில முதியவர்கள் வாரக்கணக்கில் யாரிடமும் பேசாமல் இருந்ததால், மன அழுத்தம், பயம் போன்ற பிரச்னைகள் உருவாக ஆரம்பித்துள்ளன.
அதை கவனித்த குடியிருப்பு நலவாழ்வு சங்கத்தினர், 'முதியோர் நட்பு வட்டம்' என்ற பெயரில் ஒரு குழுவை துவங்கியுள்ளனர்.
வாரம் ஒருமுறை அனைவரும் ஒன்று கூடி பேசுவது, பழைய பாடல்கள் கேட்பது மற்றும் சிறிய விளையாட்டுகளில் பங்கெடுக்கின்றனர்.
உடல்நிலை சரியில்லாத முதியவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும், மருந்து வாங்கித் தரவும் தன்னார்வலர்கள் உதவுகின்றனர்.
அதோடு, தினம் காலை மற்றும் இரவு ஒரு முறை, தனியாக வசிக்கும் முதியவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நலம் விசாரிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த முயற்சியால், தனியாக இருக்கும் பல முதியவர்களின் மனநிலை உற்சாகமாக மாறியுள்ளதாம்.
வயதானவர்களுக்கு பண உதவியை விட, அன்பான பேச்சும், அக்கறையும் பெரிய மருந்து என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது.
- பி.என்.பத்மநாபன், கோவை.
இப்படியும் பெயர் சூட்டலாமே!
அண்மையில், தொழிலதிபரான என் நண்பரின் குழந்தையின் பெயர் சூட்டு விழா, பெரிய மண்டபம் ஒன்றில், வெகு விமரிசையாக நடைபெற்றது.
அந்த நண்பர், அரசியல் தொடர்பு கொண்டவராக இருந்ததால், தன் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகரை விழாவுக்கு அழைத்திருந்தார். மேலும், அந்த அரசியல் பிரமுகரே குழந்தைக்கு பெயர் சூட்டுவார் என்றும் முன்கூட்டியே அறிவித்திருந்தார்.
நிகழ்ச்சியின் போது, குழந்தையை அரசியல் பிரமுகரிடம் கொடுத்து, பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டார், நண்பர்.
வழக்கமாக இப்படிப்பட்ட சூழலில், அரசியல்வாதிகள், தங்களுக்குப் பிடித்த பெயரையே தேர்ந்தெடுத்து குழந்தைக்கு வைப்பது வழக்கம். ஆனால், அவர் குழந்தையின் பெற்றோரிடமே, அவர்கள் விரும்பும் பெயர்களைக் கூறுமாறு கேட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அறிவித்தார். பின்னர், குழந்தையை வாழ்த்தி; பரிசளித்து விழாவை சிறப்பித்தார்.
பெற்றோரின் விருப்பத்திற்கு மதிப்பளித்த இந்த அணுகுமுறை, அனைவரிடமும் பாராட்டைப் பெற்றதுடன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
இப்படிப்பட்ட சிறப்பான நடைமுறையை, மற்ற அரசியல் பிரமுகர்களும் பின்பற்றினால் நன்றாக இருக்குமே!
- வெ.பாலமுருகன், திருச்சி.
மாற்றி யோசித்தால் மகத்தான வெற்றி!
சில மாதங்களுக்கு முன், என் நண்பர், தையல் கடை ஒன்றை ஆரம்பித்திருந்தார். ஆரம்பித்த நாள் முதல் நான், அவர் கடைக்கு போகும் வாய்ப்பு அமையவில்லை.
ஒரு நாள், புதிதாக வாங்கிய துணிகளை தைப்பதற்கு, அவர் கடைக்கு எடுத்து, சென்றேன். நண்பர், 'இது, புது துணி தைக்கும் கடையல்ல... 'ஒன்லி ஆல்ட்ரேஷன்' மட்டும் தான்...' என்றார்.
'உங்க கடையில் இருக்கும், 'ஆல்ட்ரேஷன்' துணிகளின் வேலைகள் முடிந்த பிறகு, புது துணிகளையும் தைக்கலாமே...' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'நான் புதுசா தையல் கடை ஆரம்பிக்கணும்ன்னு சொன்னப்ப, 'புது துணி தைத்து கொடுப்பதற்கு நிறைய பேர் இருக்காங்க. ஆனா, 'ஆல்ட்ரேஷன்' செய்து தர ஆளில்லாததால், அதற்காகவே நாம் ஏன் ஒரு கடையை ஆரம்பிக்க கூடாது'ன்னு கேட்டாள், என் மனைவி.
'மத்தவங்க செய்ய தயங்குற, செய்ய மறுக்கிற, சோம்பேறித்தனம் படுகிற அந்த பலவீனத்தையே பலமா எடுத்துக்கிட்டு கடையை ஆரம்பிச்சோம். 'கடகட'ன்னு 'கஸ்டமர்'கள் கிடைச்சாங்க. ஏன்னா, அந்த அளவுக்கு தேவை இருக்கு, புது துணிகளை தைக்க நேரம் இல்லை...' என்றார், நண்பர்.
'ஆல்ட்ரேஷனு'க்கு வந்திருந்த, ஏராளமான சுடிதார், பேன்ட் மற்றும் சட்டைகள் கடை முழுக்க நிறைய தொங்கி கொண்டிருந்தன. ஒருவர் உடைகளை பிரிக்க, மற்றவர் பிரித்தவற்றை வெட்ட என, கடை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
சுயதொழில் செய்ய விரும்புபவர்களே... சூழ்நிலைக்கு ஏற்ப, செய்யும் தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்தி, முனைப்புடன் செயல்பட்டால், நிச்சயம் வெற்றி கிடைத்து, வாழ்க்கையில் முன்னேறலாம்!
- ஏ.சையத் நியாமத்துல்லா, திருநெல்வேலி.
