PUBLISHED ON : ஜூன் 28, 2026

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன், தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட, அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்: செ ன்னை தொலைக்காட்சி குறும்படத்தில் நடிக்க, ஒப்பந்தமானார், சில்க் ஸ்மிதா. படப்பிடிப்பு, நாள் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றதோடு, மறுநாள் அதிகாலை, 5:00 மணி வரை நடந்தது.
தான் மிகப்பெரிய கதாநாயகியாக வலம்வர வேண்டும் என்று ஆசைப்பட்டார், ஸ்மிதா. அதற்காக, மலையாள படம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். அதற்கான திரைக்கதையை தயார் செய்து, அவரிடம் கொடுத்து, படிக்கச் சொன்னேன். படித்துப் பார்த்துவிட்டு, 'மிகவும் நேர்த்தியாக, அருமையா இருக்கு. எப்ப, 'ஷூட்டிங்' போகலாம் சொல்லுங்க...' என்றார்.
அதற்கான பணிகளை மேற்கொள்ள நான் கேரளா சென்றிருந்த சமயத்தில் தான், அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் எனக்கு ஒரு பேரிடியாக வந்தது.
ஸ்மிதாவுக்கு போட்டி இவர்தான் என, எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தாலும், அவருடன் மிகவும் நெருக்கமாக பழகிய இன்னொரு நடிகை, அனுராதா. அவரை தொலைபேசியில் அழைத்து, 'உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். நீ உடனே கிளம்பி வா...' என்று சொல்லியும், ஏனோ சந்திக்க மறுத்துவிட்டார், அனுராதா.
ஒருவேளை அவர் சந்தித்திருந்தால், நிறைய விஷயங்களை ஸ்மிதா பகிர்ந்து கொண்டிருக்க கூடும்; தற்கொலை எண்ணத்தை தவிர்த்திருக்கக் கூடும் என்று தோன்றியது.
வா ழ்வே மாயம் படத்தில், பேபி மஞ்சுவாக நடித்தவரை நாயகியாக, கொக்கரக்கோ படத்தில், இளவரசி என்று பெயர் சூட்டி அறிமுகப்படுத்தினார், இயக்குனர், கங்கை அமரன். இவர் ஏற்கனவே, கோழி கூவுது வெற்றி படத்தை இயக்கியதால், கொக்கரக்கோ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ஓடவில்லை என்றாலும், இந்த படத்தில் நடித்த இளவரசிக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைத்தன.
சென்னை, திருவல்லிக்கேணியில் தான் அப்போது இளவரசியின் வீடு இருந்தது. முதன் முதலாக அவரைப் பார்க்க போனபோது, நாம் கேட்கிற கேள்விகளுக்கு புன்னகையை மட்டுமே பதிலாக தருவார். பெரும்பாலும் அவரது அப்பா, ஜம்பு தான் அருகில் இருந்து பதில் சொல்வார்.
நடிகரும், தயாரிப்பாளருமான, கே.பாலாஜியின், 'சுஜாதா பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார், ஜம்பு. அப்பா இல்லாதபோது என்னிடம் நிறைய பேசுவார், இளவரசி.
கொக்கரக்கோ படத்திற்கு பிறகு, இயக்குனர், ராமநாராயணன் இயக்கிய, மனைவி சொல்லே மந்திரம் படத்தில் இளவரசி நடித்தார். கதை, வசனகர்த்தா கலைமணியின் தயாரிப்பு இது. சாலிகிராமத்தில் இருந்த அருணாச்சலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது. இதில், குப்பத்து பெண்ணாக நடித்துக் கொண்டிருந்தார், இளவரசி.
அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தவரை பார்த்ததும் எனக்கு பேரதிர்ச்சி. அவர் பெயர், பாண்டி கண்ணன். நான் மதுரை கல்லுாரியில் படித்தபோது, அவர், வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் படித்தார். என்னைவிட, மூன்று வயது மூத்தவர். படப்பிடிப்பில் பாண்டியை பார்த்து பேசிக்கொண்டிருக்கும் போது, இயக்குனர், பாரதிராஜா இயக்கி, விரைவில் வெளிவரவிருக்கும், மண்வாசனை படத்தில் இவர் தான் கதாநாயகன் என்றும், தன் பெயரை பாண்டியன் என மாற்றிக்கொண்டதாகவும் சொன்னார். மண்வாசனை படம் வெளிவருவதற்கு முன்பாகவே, அவர் மனைவி சொல்லே மந்திரம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
'எப்படி வாய்ப்பு வந்தது?' என்று, பாண்டியனிடம் கேட்டேன்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வளையல் கடை வைத்து நடத்தி வந்தபோது, மண்வாசனை படத்தின் தயாரிப்பாளர், சித்ரா லட்சுமணனும், பாரதிராஜாவும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய வந்த போது, இவர்களை எதிர்கொண்டு, வணக்கம் சொல்லியிருக்கிறார், பாண்டியன். இவரை உற்றுப் பார்த்த, பாரதிராஜா உடனே, காரில் ஏறச் சொல்லி, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்று, 'கேமரா - டெஸ்ட்' எடுத்து, திருப்தியடைந்து, மண்வாசனை படத்தின், 'ஹீரோ'வாக, பாண்டியனை ஒப்பந்தம் செய்து விட்டார்.
மண்வாசனை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
கடந்த 1983ல், நடிகை இளவரசியும், நடிகர் பாண்டியனும் ராசியான ஜோடியாக கருதப்பட்டதால், இருவரும் இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்தனர்.
நடிகர் பாண்டியன் நுாற்றுக்கும் மேல் படங்களில் நாயகனாக நடித்தும், மிக குறைந்த சம்பளம் தான் வாங்கியிருந்தார். அவரை பல படங்களில் நடிக்க வைத்து, சம்பள பாக்கி வைத்த தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம். அதற்காக வருத்தப்படமாட்டார். பெரும்பாலும் இயக்குனர்களிடம் அவர் உற்ற நண்பனாகத்தான் பழகுவார்.
இதனால், அவரது வீட்டிற்குள் எப்பொழுதும், இயக்குனர்கள் படை இருக்கும். நிறைய உதவி இயக்குனர்கள் இவரது வீட்டிலேயே தங்கி, சாப்பிட்டு, அவருக்காக எத்தனையோ கதைகளை உருவாக்கியதைப் பார்த்திருக்கிறேன். அவரது வீட்டிற்கு போகிற போதெல்லாம் குறைந்தது, பத்து பேராவது அங்கே சாப்பிட்டு கொண்டிருப்பர். அவர் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தபோது திரையுலகமே அவரை தேடிவந்ததையும், பட வாய்ப்பு குறைந்து, பாண்டியன் கஷ்டப்பட்டபோது யாரும் அவருக்கு உதவாத நிலையையும் கண்கூடாக நான் பார்த்திருக்கிறேன்.
சினிமாவில் எத்தனையோ நடிகையர், அவரை திருமணம் செய்ய விரும்பி இருக்கின்றனர். ஆனால், பாண்டியன் தன் அம்மா சொல்லை தட்டாதவர். அம்மா விருப்பப்படியே உறவுக்கார பெண்ணைத் தான் திருமணம் செய்து கொண்டார். தன் ஒரே மகன், ரகுவை எப்படியும், 'ஹீரோ'வாக ஆக்க வேண்டும் என்று, அவர் நிறைய ஆசைப்பட்டார். அதற்குள் அவர் மறைந்து விட்டார்.
— தொடரும்
ஆர்.பிரபாகரன்
