PUBLISHED ON : ஜூலை 23, 2023

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது, புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில்.
உலகத்திலேயே அதிக வருமானம் வரக்கூடிய கோவில்களில் இதுவும் ஒன்று. பக்தர்களாலும், சுற்றுலா பயணிகளாலும் இக்கோவில் எப்போதுமே பரபரப்பாக இருக்கும். பக்தர்களின் வசதிக்காக ஏராளமான தங்கும் விடுதிகள் இங்குள்ளன.
கோவில் எந்த அளவுக்கு புகழ் பெற்றதோ, அந்த அளவுக்கு, இங்கு தற்கொலைகளும் அதிகம் நடக்கிறதாம்.
கோவிலின் புனிதத்தை காக்கும்பொருட்டு, இங்கு வரும் பக்தர்களையும், சுற்றுலா பயணியரையும் பல கட்ட சோதனைகளுக்கு பிறகே, கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர். அதேபோல், தங்கும் விடுதிகளில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் வருபவர்கள், கோவிலில் சாமி கும்பிட்டு தற்கொலை செய்து கொண்டால், நேரடியாக சொர்க்கத்துக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில், விபரீத முடிவு எடுக்கின்றனராம்.
தற்போது, அதிக கெடுபிடி காரணமாக, இங்கு வந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது, கோவில் நிர்வாகம்.
—ஜோல்னாபையன்
