
அடுத்தவர்களுக்கு கிடைக்கும் புகழை நினைத்து, வெறுமனே மனம் புழுங்காமல், அதற்கான காரியத்தில் கவனம் வைத்தால், அதை விட பெரிதான புகழை அடைய முடியும் என்பதற்கான கதை இது:
மலைச்சாரலின் கீழ் இருந்த பூஞ்சோலையில், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து மற்றும் காவிரி எனும் ஏழு நதி தேவதைகள், விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, வான் வழியே சென்ற விஸ்ரவசு என்ற கந்தர்வன், அவர்களைப் பார்த்து, வணக்கம் செலுத்தி சென்றான்.
அதைப் பார்த்த நதி தேவதைகள், 'அந்த கந்தர்வன், நம்மில் யாரை வணங்கினான்...' என குழம்பி, ஒவ்வொருவரும் அவன் தன்னைப் பார்த்து தான் வணங்கினான் என வாதம் செய்தனர். அதனால், பிரம்மாவிடம் சென்று நடந்ததைச் சொல்லி, தீர்ப்பு வழங்கும்படி வேண்டினர்.
'விஸ்ரவசு வணங்கியது கங்கையை தான்; ஏனென்றால், மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, பகவான், வாமன அவதாரம் எடுத்த போது, அவரது திருவடிகளுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டவள் கங்கை. அதன் காரணமாகவே, கங்கையை வணங்கினான்...' என்று தீர்ப்பு கூறினார் பிரம்மா.
அதை ஐவர் ஒப்புக் கொண்டனர்; ஆனால், காவிரி மட்டும் ஒப்புக் கொள்ளாமல் மனதில் பொருமி, 'அது என்ன கங்கை மட்டும் தான் வணக்கத்திற்கு உரியவளா... அவளை விடப் புனிதமானவள் நான் என, பெயரெடுக்க வேண்டும்...' என்று தீர்மானித்து, திருச்சேறை என்ற தலத்தில் சார புஷ்கரணி கரையில் உள்ள அரச மரத்தடியில் அமர்ந்து, தவம் செய்ய துவங்கினாள்.
அவளது கடும் தவம் கண்டு, மனம் இரங்கிய மகாவிஷ்ணு, காவிரியின் மடியில் குழந்தையாக தவழ்ந்தார்.
தன் மடியில் மழலையாக தவழ்வது, மாலவன் என்பதை உணர்ந்து, பரவசமடைந்த காவிரி, அவனை வணங்கி, மூன்று வரங்கள் கேட்டாள். முதலாவதாக, மகாவிஷ்ணு அத்திருத்தலத்திலேயே நிலைபெற வேண்டும்; இரண்டாவது, அத்திருத்தலத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் முக்தி அளிக்க வேண்டும்; மூன்றாவது, கங்கையை விட மேலான பதவியும், புகழும் எனக்கு கிடைக்க வேண்டும் என வேண்டினாள்.
மகா விஷ்ணுவும் அவ்வாறே அருள் புரிந்தார். கங்கையோ, வாசுதேவனின் திருவடிகளை மட்டும் தான் தீண்டினாள். ஆனால், அதே வாசுதேவன் ஒரு குழந்தையாகவே, காவிரியின் மடியில் தவழ்ந்திருக்கிறார் என்றால், காவிரியின் பெருமையை அளவிட முடியுமா?
இந்நிகழ்வை நினைவூட்டும் விதமாக, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள திருச்சேறை தலத்தில், சார புஷ்கரணியின் தென்மேற்கு மூலையில், அரச மரத்தடியில், காவிரி அன்னை, குழந்தை நாராயணனை அணைத்தவாறு உள்ள சிற்பத்தைக் காணலாம்.
கங்கையை போலவே, தானும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என விருப்பப்பட்ட காவிரி, எவ்விதமான முறையற்ற செயலிலும் ஈடுபடாமல், கடும் தவத்தின் மூலமே, தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டாள்.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
— எனும் வள்ளுவர் வாக்கும், இதை மெய்ப்பிக்கும்!
பி.என்.பரசுராமன்
திருவாசகம்!
பக்தி இலனேனும் பணிந்திலனேனும் உன்
உயர்ந்த பைங்கழல் காணப்
பித்து இலனேனும் பிதற்றிலனேனும்
பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே
முத்தனையானே மணியனையானே
முதல்வனே முறையோ என்று
எத்தனையானும் யான் தொடர்ந்து
உன்னை இனிப்பிறந்து ஆற்றேனே!
விளக்கம்: சிவபெருமானே... எனக்கு, உன்னிடம் பக்தி கிடையாது; நான், உன்னை வணங்கவும் இல்லை. உன் திருவடிகளைத் தரிசிக்க பைத்தியம் பிடித்து அலைகிறேனா என்றால், அதுவுமில்லை. அறியாமல் கூட உன் திருநாமத்தை சொன்னதும் இல்லை. இருந்தாலும், அனைத்தும் அறிந்த, எல்லையில்லாத ஆற்றலுடைய முதல்வனே... எவ்விதத்திலாவது நான் உன்னைத் தொடர்ந்து, 'காப்பாற்று...' என்று முறையிடுகிறேன். என் பிறவித்துயரை நீக்கி, எனக்கு அருள் செய்!

