/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
மனசுக்கு புடிச்ச மாப்பிள்ளை வேணுமா?
/
மனசுக்கு புடிச்ச மாப்பிள்ளை வேணுமா?
PUBLISHED ON : ஜூன் 28, 2015

ஜூலை 4 -திருத்தங்கல் தேர்த்திருவிழா
உலகம் தோன்றிய காலம் முதல், அழியாமல் இருக்கும் சக்தி காதல். ஆனால், அது, பெற்றோரின் சம்மதத்துடன் நிறைவேறுவது என்பது குதிரைக் கொம்பு. திருமால், வாமன அவதாரம் எடுத்து, உலகளந்து ஆட்கொண்டாரே... மகாபலி சக்கரவர்த்தி. அவரது பேத்தியும், தான் விரும்பியவனை கைப்பிடிக்க போராடி தான் ஜெயித்தாள்.
மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரனுக்கு, உஷை என்ற மகள் இருந்தாள். ஒருமுறை, கனவில் அழகிய ராஜகுமாரனைக் கண்டவள், அது குறித்து தன் தோழி சித்ரலேகையிடம் விவரித்து, அவனை ஓவியமாக வரையக் கூறினாள். ஓவியம் வரைந்த பின் தான், அவன், கிருஷ்ணரின் பேரனான அநிருத்தன் என்பது தெரிய வந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டுமென அடம் பிடித்து, சித்ரலேகையின் உதவியை நாடினாள் உஷை. அவள் துவாரகாபுரி சென்று, உறங்கி கொண்டிருந்த அநிருத்தனை கட்டிலுடன்
தூக்கி, வாணனின் மாளிகைக்கு கொண்டு வந்தாள்.
விழித்து பார்த்த அநிருத்தன், தன் அருகே அழகி ஒருத்தி இருப்பதை கண்டான். அவனிடம் தன் காதலை வெளிப்படுத்தினாள் உஷை.
இவ்விஷயம் உஷையின் தந்தை வாணாசுரனுக்கு தெரிந்து, அவர்களைக் கொல்ல முயன்றான். தங்களைக் காக்கும்படி கிருஷ்ணரை வேண்டினாள் உஷை.
அப்போது, 'வாணா... இத்தம்பதியை கொன்றால், நீயும் அழிந்து போவாய்...' என, அசரீரி ஒலித்தது.
இதனால், அநிருத்தனை சிறை வைத்தான் வாணன். விஷயமறிந்த கிருஷ்ணர், வாணாசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். பின், வாணாசுரன் உள்ளிட்ட அனைவர் சம்மதத்துடன், துவாரகையில் திருமணம் நடத்த முடிவு செய்தார் கிருஷ்ணர்.
இச்சமயம், திருத்தங்கல் என்ற இடத்தில், புரூர சக்கரவர்த்தி என்பவர் திருமாலை நோக்கி தவமிருந்தார். அவருக்கு காட்சியளித்த திருமால், 'என்ன வரம் வேண்டும்...' எனக் கேட்க, 'பெருமாளே... தங்கள் பேரனின் திருமணத்தை, இங்கு நடத்த வேண்டும். அத்துடன் இவ்விடத்தில் தங்கி, தாங்கள் அருள வேண்டும்...' என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்றார் திருமால்.
தன் பேரனுக்கும், உஷைக்கும் திருமணம் நடத்தி வைக்க, தன் தேவியரான தேவி, பூதேவி, நீலாதேவி, ஜாம்பவதி ஆகியோருடன் திருத்தங்கல் வந்தார் திருமால். திருமணம் சிறப்பாக நடந்தது. இத்தலத்தில், 'நின்ற நாராயணப்பெருமாள்' என்ற திருப்பெயர் தாங்கி, நான்கு தேவியருடன் அருள்பாலித்து வருகிறார்.
விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் வழியில், 20 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. இத்தலம், 108 திவ்யதேசங்களில் ஒன்று. இங்கு, ஆனி மாதம் பிரம்மோற்சவம் நடக்கும். விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 4ல் நடக்கிறது. பெற்றோர் ஆசிர்வாதம் மற்றும் அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்தால், அவர்களின் மனம் குளிர்ந்த வாழ்த்து கிடைக்கும். இந்த வாழ்த்தைப் பெற்று, மனதுக்கு பிடித்தவரை கைப்பிடிக்க, கன்னியரும், காளையரும் திருத்தங்கல் வாருங்கள். நின்ற நாராயணரையும், அவரது தேவியரையும் வணங்கி, இனிய வாழ்வை துவங்குங்கள்.
தி.செல்லப்பா