
ஆயிரத்திலொரு ஆசிரியை!
அரசுப் பள்ளி ஒன்றில் என் மகளை, ஆறாம் வகுப்பில் சேர்த்திருக்கிறேன். கடந்த வாரம், மதிய உணவு கொடுப்பதற்காக பள்ளிக்கு சென்றிருந்தேன். எனக்காக காத்திருந்த மகள், என் கையில் இருந்த சாப்பாடு கூடையை பிடுங்கி, வகுப்பிற்குள் ஓடினாள். அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை, மரத்தடியில் காத்திருந்தேன்.
சாப்பிட்டு முடித்து வந்தவளிடம், 'என்னம்மா... சாப்பாடு எடுத்து வர, 'லேட்' ஆனதுனால பசி எடுத்துருச்சா... அதனால தான் சாப்பாட்டு கூடையை பிடுங்கிக்கிட்டு ஓடினாயா...' என்று கேட்டேன்.
அதற்கு, 'இல்லம்மா... எங்க வகுப்புக்கு புதுசா ஒரு டீச்சர் வந்திருக்காங்க. அவங்க, மதியம் எங்ககூட தான் உட்கார்ந்து சாப்பிடுவாங்க. அதோட எப்படி சாப்பிடணும், எது சத்தான உணவு, எதெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு எல்லாம் சொல்லுவாங்க. சாப்பிட்டு முடிச்சதும், ஏதாவது விளையாட்டு சொல்லிக் கொடுப்பாங்க...' என்று கூறி, மீண்டும் வகுப்பறைக்கு ஓடினாள்.
அரசு பள்ளி ஆசிரியர் என்றாலே பொறுப்பில்லாதவர்களாக, தன்னிடம் படிக்கிற பிள்ளைகளை மட்டமா, அடிமையா பார்க்கிறவங்கள பத்தி தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த ஆசிரியையின் தோழமை உணர்வு, உண்மையிலேயே ஆச்சரியமாகவும், பாராட்டும்படியும் இருந்தது.
— ஏ.சுந்தரி, மதுரை.
வாரிசுதாரரை நியமிக்க மறக்காதீர்!
வங்கியில், சேமிப்பு கணக்கு மற்றும் வைப்புநிதி கணக்கு வைத்திருந்தார் என் பெரியம்மா. அவருக்கு குழந்தைகள் இல்லை என்பதால், இரு கணக்குகளுக்கும், தன் கணவரையே, வாரிசுதாரராக நியமித்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், பெரியப்பா இறந்து விட்டார். ஆனால், வாரிசுதாரர் பெயரை மாற்ற மறந்து விட்டார் பெரியம்மா.
இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன் பெரியம்மாவும் இறந்து விட்டார். தற்போது பெரியம்மா மற்றும் பெரியப்பாவின் உறவினர்கள், வாரிசு சான்றிதழ் வாங்க அலைந்து கொண்டிருக்கின்றனர். சட்ட சிக்கல்கள் இருப்பதால், அப்பணம், யாருக்கும் பயன்படாமல் வங்கியிலேயே இருக்கிறது.
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் குழந்தை இல்லாத தம்பதியர், ஆண்டுக்கொரு முறை யாரை வாரிசுதாரராக நியமித்திருக்கிறோம் என்று சரி பார்ப்பது நல்லது. இல்லையேல், அப்பணம் யாருக்கும் பயன்படாமல் போய்விடும்.
— ஜெ.கண்ணன், சென்னை.
மனைவி கையில் சம்பளம்!
என் தோழியின் கணவர், தனியார் கம்பெனியில் டிரைவராக பணிபுரிகிறார். அவரது கம்பெனியில், அவருடைய சம்பளத் தொகையை, தோழியை வரவழைத்து, அவளிடமே கொடுக்கின்றனர். அங்கு வேலை செய்வோர் அனைவரின் சம்பளமும், அவர்களுடைய மனைவியரிடமே வழங்குகின்றனர்.
ஆண்களில் நிறையப் பேர், சம்பளம் வாங்கியவுடன் தன் விருப்பத்திற்கு செலவு செய்து, குடும்பத்தை கண்டு கொள்ளாமல் இருப்பதால், மாற்று வழியாக மனைவி கையில் சம்பளத்தை கொடுப்பதை வழக்கமாக்கி விட்டனர் அந்நிறுவனத்தார். இதன்மூலம், கணவரின் சம்பளப் பணத்தை குடும்ப செலவுகளுக்கு முழுமையாக பயன்படுத்துகின்றனர் மனைவியர்.
அனைத்து தனியார் நிறுவனங்களும், இதுபோல் மனைவி அல்லது தாயிடம் சம்பளத்தை ஒப்படைத்தால், மனைவி மற்றும் பெற்றோர் குடும்பத்தை நடத்த ஏதுவாக இருக்கும். அத்துடன், ஆண்களும் செலவை கட்டுப்படுத்த பழகிக் கொள்வர்.
- பி.வாசுகி, திருக்கோவிலூர்.