
ராஜஸ்தான் மாநிலம் என்றாலே, பாலைவனத்திற்கு பெயர் பெற்றது. குறைந்த அளவே மழை பெய்யும்; எப்போதும் வறட்சிதான். வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால் கூட, நெடுந்தூரம் செல்ல வேண்டும்.
இத்தகைய வறட்சிமிகுந்த இம்மாநிலத்திற்கே, மரகதப் பதக்கம் வைத்தாற்போல, பசுமையுடன் காணப்படுகிறது நேமி கிராமம். சமீபத்தில், இங்கு சென்று வந்த நண்பர் ஒருவர் கூறியதைக் கேட்ட போது, ஆச்சரியமும், சந்தோஷமும் ஏற்பட்டது.
அவர் சொன்னது:
நேமி கிராமம் மட்டுமல்ல, இதைச் சுற்றியுள்ள கிராமங்களும், தண்ணீர் சேமிப்பு மற்றும் மழைநீர் அறுவடை போன்ற சிறந்த விஷயங்களை அறிந்து, தக்க சமயத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டது தான், இப்பகுதியின் பசுமைக்கு காரணம். இப்போது, இப்பகுதி மக்கள், 'தண்ணீர் கஷ்டமா... அப்படீன்னா என்ன?' எனக் கேட்கின்றனர்.
இப்பகுதிகளில் ஆர்வாரி மற்றும் ரூபரேல் ஆறுகள் ஒரு காலத்தில் ஓடின. தற்போது அவை வற்றி, அவற்றின், தடம் மட்டுமே காணப்படுகிறது. எப்போதோ வெட்டப்பட்ட குளங்களும், கண்மாய்களும் தூர்ந்து போய் குப்பை கொட்டும் இடங்களாகின.
இந்த இடங்களை, பல பொது நல தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், கிராம மக்களே சுத்தம் செய்தனர். மழைநீர் ஓடி வந்து இந்த குளங்களில் தேங்கும் அளவிற்கு கால்வாய்கள் வெட்டப்பட்டன.
இப்பகுதிகளில் பெய்யும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேமிக்க, கிணறுகளும், மழை நீர் சேமிப்பு தொட்டிகளும் அமைக்கப்பட்டன.
அரசின் உதவி இன்றி, 'நமக்கு நாமே' என்று கிராமத்தினர் செயலில் இறங்கினர். இம்முயற்சியால், நேமி கிராமத்தில் நீர்வளம் அதிகரித்தது; காய்ந்து கிடந்த ஆற்றுப் படுகைகளில் நீர் பாய்ந்து, நிலத்தின் அடி வரை சென்றது. இதனால், நிலத்தடி நீர் அளவு உயர்ந்தது.
கிணறுகளில் மிக ஆழத்தில் சிறிதளவு தண்ணீரை கஷ்டப்பட்டு இழுக்கும் நிலை மாறி, கிணற்றின் மேல் மட்டத்திற்கு தண்ணீர் வந்து விட்டது; தண்ணீரும் உப்பு கரிப்பு இல்லாமல் சுவையாக உள்ளது. இதை கண்கூடாக உணர்ந்த மற்ற கிராமத்தினர், தங்கள் கிராமங்களிலும் இதை செயல்படுத்த முன் வந்தனர்.
இதனால், இப்பகுதிகளில் விவசாயம் பெருகுகிறது. கோதுமை வளர்ச்சி அதிகரித்துள்ளது. பறங்கிக்காய், முள்ளங்கி மற்றும் முலாம் பழங்கள் அதிக அளவில் விளைகின்றன. தினமும் இவை லாரிகளில் அரியானாவிற்கும், டில்லிக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கிராமங்களின் பொருளாதார நிலை இதன் காரணமாக உயர்ந்து வருகிறது.
தற்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நீர்வள ஆய்வாளர்கள் இப்பகுதிக்கு வந்து, மழைநீர் அறுவடை மற்றும் நீர் சேமிக்கும் முறைகள் பற்றி தெரிந்து செல்கின்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில், பெரிய கட்டடங்கள் கட்டும் போது, அவற்றை சுற்றிலும் சிமென்ட்டால் பூசி விடுகின்றனர்; இது பெரும் தவறு. இந்த பெரிய பரப்பளவிலான கட்டடங்களில் பெய்யும் மழை நீர், தரையில் வழிந்து, சாக்கடையில் தான் கலக்கிறது.
இதனால் என்ன லாபம்! இதுபோன்ற பெரிய கட்டடங்களில் மழைநீர் சேமிப்புத் தொட்டிகளை அமைக்கலாம். இதற்கு மிகவும் குறைந்த செலவே ஆகும். அந்த கட்டடங்களுக்கான கிணறுகளின் நீர் அளவும் அதிகரிக்கும்.
கார் நிறுத்தும் இடங்களில், நிலத்தினுள் நீர் போகாத அளவு சிமென்ட்டால் பூசி மெழுகுவதை தவிர்த்து, சிறிதளவு மண் தெரியும் அளவு கற்களைப் பதிக்கலாம். இதனால், நிலத்தினுள் மழைநீர் செல்ல வாய்ப்பு ஏற்படும்; நிலத்தடி நீர்வளம் அதிகரிக்கும்.
பூமிக்குள் மழைநீர் செல்ல விடாமல், சிமென்ட்டால் பூசி மெழுகுபவர்களது அறியாமை போக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், இந்த உலகமே தண்ணீர் இல்லாத கான்கிரீட் கட்டடங்களால் ஆன பாலைவனமாகி விடும் என்றார்.
'நீங்க சொல்றது முற்றிலும் சரி. அத்தோடு, வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் சென்னையில் வந்து செட்டிலாவதை தடுக்க, அரசு முயல வேண்டும். அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்துமே சென்னையையும், அதைச் சுற்றியுமே அமைவதால், வெளி மாவட்ட, 'மைகிரேஷன்' ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது. இன்னும், 10 ஆண்டுகளில், தமிழகம் தார் பாலைவனமாக மாறுவதை தடுக்க, இப்போதே அரசு முயல வேண்டும்...' என்றேன்.
அவநம்பிக்கையாக உதட்டைப் பிதுக்கி விடைபெற்றார் நண்பர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் சவாபோ நகரில் வசிக்கும் அன்பர் ஒருவரை அறிமுகம் செய்தார் நண்பர் ஒருவர். அவர் தமிழர்தான், இருந்தாலும், தமிழில் சரளமாகப் பேசத் தெரியவில்லை. அவரது மூதாதையர் டிரினிடாட் டுபாக்கோ என்ற நாட்டுக்கு கரும்பு வெட்டும் தொழிலாளியாக தமிழ்நாட்டில் இருந்து வெள்ளையர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களாம்.
தென் அமெரிக்க நாடுகள் பற்றிய சுவையான பல விஷயங்களைக் கூறினார். ஓட்டல்களில், பண்டங்கள் எடைக்கு ஏற்ப தான் விலையாம்! அதாவது, பொங்கல், வடை, நாலு இட்லி, ஒரு மசால் தோசை சாப்பிடுகிறோம் என்றால், அவற்றை ஒரு தட்டில் வைத்து எடை போட வேண்டும். 500 கிராம் இருந்தால் ஒரு விலை, 650 கிராம் இருந்தால் ஒரு விலையாம்... ஆச்சரியமாக இருந்தது!
'தென் அமெரிக்க நாடுகள் சர்வாதிகார ஆட்சிக்குப் பெயர் பெற்றவை. ௧௦ ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி நடத்தி, கோடி, கோடியாய் கொள்ளையடிப்பர்! நாட்டில் எதிர்ப்பு கிளம்பும். உடனே, சேர்த்த பணத்துடன், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து விடுவர். இதுதான் காலம் காலமாக இந்த நாடுகளில் நடந்து வருகிறது...' எனக் கூறியவர், சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்...
'அப்படிப்பட்ட ஒரு சர்வாதிகாரி தான் மார்கோஸ் பெரஸ். தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டை, 10 ஆண்டுகள் சுரண்டிய பின், ஸ்பெயின் நாட்டுக்கு ஓடிப் போனார்.
'மற்றொரு தென் அமெரிக்க நாடு பெரு; அதன் ஜனாதிபதியாக இருந்தவர் புஜிமோரி. இவரது பெற்றோர் ஜப்பானியர்; பெருவில் குடியேறியவர்கள். புஜிமோரி பெருவிலேயே பிறந்து, வளர்ந்து, ஆட்சியை பிடித்தவர், பெருந்தொகையை சுருட்டி ஜப்பானுக்கே ஓடிப் போனார். இருவரும் சுருட்டியது, ௧,௦௦௦ கோடி ரூபாய்...' என்றார்.
'ப்பூ... இதென்ன பிரமாதம்... இங்க, ஆயிரம் கோடியெல்லாம் ஸ்டேட் லெவல்லயே முடிச்சிருவோம்; ஆல் இண்டியா லெவல்ன்னா ஆயிரம் கோடிங்கறது ஆறு மாச வசூல்...' என்றேன்.