பழைய ரயில் பெட்டிகள், இன்ஜின்களைப் பார்க்கவேண்டுமா?
பழைய ரயில் பெட்டிகள், இன்ஜின்களைப் பார்க்கவேண்டுமா?
PUBLISHED ON : மார் 13, 2011

ரயில் பயணம் என்றாலே சுகமான அனுபவம் தான். நெருக்கடி இல்லாமல், மிக நீண்ட தூரம், அதிக நேரம் ரயிலில் பயணம் செய்தால் அந்த சுகமே தனி.
இப்போது சூப்பர் பாஸ்ட் ரயில்கள், குளு குளு, 'ஏசி' ரயில்கள் எல்லாம் வந்து விட் டன. ஆனால், ஆரம்ப காலத்தில் ரயில் பயணம் எப்படி இருந்திருக்கும்? அதுவும் இப்போதைய தலைமுறையினருக்கு நீராவி ரயில் இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. கரும் புகையை கக்கியபடி, பயங்கர சப்தத்துடன் அந்த ரயில்கள் ஓடுவதே தனி அழகுதான்.
இப்போது அந்த இன்ஜின்கள், அந்த கால ரயில் பெட்டிகள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டுமா? தலைநகர் டில்லியில் உள்ள ரயில் மியூசியத்திற்கு சென்றால், அவற்றைப் பார்க்கலாம்.
'தேசிய ரயில் மியூசியம்' என அழைக்கப்படும் இந்த ரயில் மியூசியத்தில், ஆரம்ப கால ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகள், ரயில் ஓடத் தேவையான இயந்திரங்கள் ஆகியவை உள்ளன. இந்தியா வில் முதலில் ரயில் ஓடத் துவங்கிய காலத்தில் இருந்து இப்போது வரை உள்ள ரயில் தொடர்பான எல்லாவற்றையும் இங்கே பார்க்கலாம்.
கடந்த 1977ல் துவங்கப்பட்ட இந்த மியூசியத்திற்கு, தினமும் ஏராளமானோர் வருகின்றனர். அந்த கால ரயில்களில் பயணம் செய்த முதியவர்கள் முதல், இப்போது வியப்பாக பார்க்கும் குழந்தைகள் வரை பல தரப்பட்டவர்களையும் இந்த மியூசியம் கவர்ந்து இழுக்கிறது.
இந்த மியூசியத்தில், 47 இன்ஜின்கள் உள்ளன. 20 பழமையான பெட்டிகள் உள்ளன. மூன்று சரக்கு பெட்டிகள் உள்ளன.
இந்தியாவில் மீட்டர் கேஜ், பிராட்கேஜ், நேரோ கேஜ், மோனோ ரயில் என பல வகை ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த மியூசியத்தில் நேரோ கேஜ் எனப்படும் மிக குறுகிய ரயில் பாதையில் இன்னமும் ரயில் இயக்கப் படுகிறது. இந்த ரயிலில் குழந்தைகள் உற்சாகமாக பயணம் செய்கின்றனர். 1862ம் ஆண்டு முதல், 1962ம் ஆண்டு வரை உபயோகத்தில் இருந்த மிகப் பழமையான ரயில் இன்ஜின், இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டு, அனைவரையும் கவர்ந்து வருகிறது.
கடந்த 1876ல் இந்தியாவுக்கு வந்த பிரிட்டனின் ஏழாம் எட்வர்ட் மன்னர் பயன் படுத்துவதற்கு என்றே தனியாக ஒரு ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டது. அதில், சொகுசு அறை ஒன்றும், நான்கு பாதுகாவலர்கள் இருப்பதற்கான பகுதியும் உண்டு. அந்த பெட்டியையும் இந்த கண்காட்சியில் பார்க்கலாம்.
மைசூர் மன்னர் கிருஷ்ணராவ் உடையார் பயன்படுத்திய அரண்மனை போன்ற தோற்றம் கொண்ட இன்னொரு பெட்டி, பார்வையாளர்களை பிரமிக்கச் செய்கிறது. ரயிலில் அடிபட்டு இறந்த யானை ஒன்றின் மண்டை ஓடு, பழங்கால ரயில் களில் உள்ள இருக் கைகள், சாப்பாட்டு அறை போன்றவையும் ரசிக்கத்தக்கவை.
ரயில்கள் புறப்பட அனுமதிக்கும் கைகாட்டி மரம், கெரசின் நிரப்பப்பட்ட பச்சை, சிவப்பு விளக்கு, ரயில்களை டிராக் மாற்றும் கருவி போன்றவை, இந்திய ரயில்வேயின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.
ஒரு முறை இந்த மியூசியத்திற்கு சென்று வந்தால், இந்திய ரயில்வேயின் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
***
-சுனில் சர்மா
