தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தண்ணீர்! - சில மருத்துவ உண்மைகள்!

தண்ணீர்! - சில மருத்துவ உண்மைகள்!

தண்ணீர்! - சில மருத்துவ உண்மைகள்!


PUBLISHED ON : மார் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்ச் 22 - சர்வதேச தண்ணீர் தினம்

நம் உடல், 60 முதல் 70 சதவீதம் நீரால் ஆனது. எலும்பு உட்பட அனைத்து பாகங்களும், நீர் சத்தை கொண்டுள்ளன. மனிதன் உணவின்றி, பல நாட்கள் வாழ இயலும். ஆனால், நீரின்றி வாழ இயலாது. அதனால் தான், தண்ணீரை, மனித வாழ்க்கையில் அமிர்தத்திற்கு ஒப்பானது என்பர்.

பொதுவாக, பெரும்பாலானோர், தாகம் ஏற்படும்போது மட்டும் தண்ணீர் அருந்தினால் போதும் என்று நினைப்பர். ஆனால், ஆரோக்கியமான வாழ்விற்கு, தினசரி, ஆறு முதல் எட்டு டம்ளர் தண்ணீர் அவசியம் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

சாப்பாட்டிற்கு முன் ஒரு டம்ளர், சாப்பாட்டிற்கு இடையே ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். அதிகம் உணவை உள்ளே தள்ளுவது, இதனால் கட்டுப்படுத்தப்படுகிறது.

டீ, காபி, சோடா, பீர் மற்றும் குளிர் பானங்கள் இதையெல்லாம் கணக்கில் சேர்க்கக் கூடாது. தண்ணீர் என்றால், அது, சுத்தமான தண்ணீர் மட்டும் தான்.

உங்களின் உடல் தேவையில், இரண்டு பங்கு தண்ணீர் அளவு குறைந்தால், தோல் சுருக்கம், தசை பலவீனம், களைப்பு, எரிச்சல், கிறுகிறுப்பு மற்றும் தலைவலி போன்றவை ஏற்படும் அபாயம் உண்டு.

'வேலை நடுவே அலுப்பு, மன இறுக்கம் ஏற்படும் போது, காபி, தேநீர், குளிர்பானம் அருந்துவதற்கு பதிலாக, மூன்று டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. மன இறுக்கம் உடனே அகன்று விடும்...' என்கின்றனர், அமெரிக்காவின், 'ஹாரீஸ்' ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள்.

இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கும், குடிக்கும் தண்ணீரின் அளவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். 'குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால், அவை ரத்தத்தின் அடர்த்தியை அதிகப்படுத்துகிறது. இதுவே, 'ஹார்ட் அட்டாக்' போன்ற இதய கோளாறுகளை உருவாக்குகிறது...' என்கின்றனர்.

தண்ணீர் தவிர, காபி, டீ, ஜூஸ், பால் மற்றும் மது ஆகியவற்றை அதிகமாக அருந்துவோரிடமும், இதய நோய் பாதிப்பு அதிகம் இருப்பதும், ஆய்வில் தெரிய வந்தது.

உடலை குளிர்ச்சியாக வைக்க, களைப்பை தவிர்க்க, உடலின் தசைகள் நன்கு இயங்க, சுலபமான ரத்த ஓட்டத்திற்கு மற்றும் மூளை துடிப்புடன் செயல்பட, போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

தலைவலி, மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் பை புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல், நாம் அருந்தும் தண்ணீருக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான தண்ணீரை அருந்தி வந்தால், உடல் எடை, ஒரே அளவாக கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

உடலுக்கு தேவையான நீர் கிடைக்கும் போது, கல்லீரல், தன் பணியை செவ்வனே செய்து, நம் உடலில் சேரும் தேவையில்லாத கொழுப்பை கரைத்து விடும். இதனால், சிறுநீரகங்கள் நன்றாக செயல்படும்.

சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு போதுமான தண்ணீர் கிடைக்காத போது, கல்லீரலும் பாதிப்படைகிறது. இதனால், உடலில் கொழுப்பு தேங்கி, உடல் எடை கூடுகிறது.

முதியவர்கள், இரவில், துாங்குவதற்கு முன், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால், ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படுவதையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்.

எல்லாரும், எட்டு முதல் 10 டம்ளர் தண்ணீரை பருக வேண்டுமா என்றால், இல்லை என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். இதய நோய் உள்ளோர், கல்லீரல் பாதிப்பு உள்ளோர் மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளோர், தண்ணீரை அளவாக தான் குடிக்க வேண்டும். இதய நோயாளிகள், அதிக நீர் குடிப்பது ஆபத்தானது. அதிக அளவில் குடிக்கும் நீர், இதயத்திற்கு திடீர் பளுவை தந்து, ரத்த பம்பிங் ஆற்றலை பாதிக்கிறது, என்கின்றனர்.

உலகிலேயே மிக விலை உயர்ந்தது, 'கோல்டன் சி' எனும் தண்ணீர் தான்.

ஒரு அவுன்ஸ் நீரின் விலை, 5,000 ரூபாய். அமெரிக்காவின், சாண்டியாகோ மாநிலத்தில் உள்ள சுரங்க பகுதிகளிலிருந்து, அரிய மருத்துவ குணம் உடைய, படிக கல்லுடன் கிடைக்கும் நீரை சுத்திகரித்து விற்கின்றனர். மருத்துவ குணம் உடைய இந்நீர், எடை மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்க பயன்படுவதாக கூறுகின்றனர்.

- கோவீ.ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us