தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து - பனங்கற்கண்டு!

நம்மிடமே இருக்கு மருந்து - பனங்கற்கண்டு!

நம்மிடமே இருக்கு மருந்து - பனங்கற்கண்டு!


PUBLISHED ON : ஏப் 23, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பனை மரத்திலிருந்து பனங்கிழங்கு, நுங்கு, கள் போன்றவை கிடைக்கின்றன. இதுதவிர, பனை நீரிலிருந்து கருப்பட்டி என்ற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை, கருப்பட்டி என்றும், சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை, பனங்கற்கண்டு என்றும் அழைக்கப்படுகிறது.

வைட்டமின், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு, தாமிரம், மாங்கனீசு, சாம்பல் சத்து மற்றும் அமினோ அமிலங்கள் உள்ள பனங்கற்கண்டு, மருத்துவ குணம் வாய்ந்தது.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள், குளிர்ச்சி தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், பனங்கற்கண்டானது, குளிர் காலங்களில் ஜலதோஷத்தால் ஏற்படும் தொண்டை கரகரப்பு, நெஞ்சுச் சளி, இருமல் ஆகியவற்றை போக்குகிறது.வாத பித்தம் நீங்கும், பசியை துாண்டும், புஷ்டி தரும்.

சிறிதளவு பனங்கற்கண்டை வாயில் போட்டு அதன் உமிழ் நீரை விழுங்கலாம்.

பாதாம் பருப்பு - 2, பனங்கற்கண்டு - 1 தேக்கரண்டி, மிளகுத்துாள் பொடி - அரை தேக்கரண்டி சேர்த்து, மிக்சியில் பொடி செய்து, பாலுடன் கலந்து, வாரம் இருமுறை குடித்தால், சளி பிரச்னை காணாமல் போகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மிளகு துாள், நெய் மற்றும் பனங்கற்கண்டு தலா அரை தேக்கரண்டி சேர்த்து சாப்பிட்டால், தொண்டை வலி மற்றும் தொண்டைக் கட்டு குணமாகும்.

சிறிது சீரகம், பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.

பனங்கற்கண்டில் நிறைய இரும்புச் சத்து உள்ளதால், ரத்த சோகை பிரச்னைகள், குறிப்பாக, பெண்களுக்கு மிகவும் நல்லது.

பசு நெய் - அரை தேக்கரண்டி, சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால், உடல் சோர்வை நீக்கி, சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

பாதாம் பருப்பு, சீரகம் மற்றும் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும். கண் பார்வை திறனும் மேம்படும்.

வெங்காய சாறு - 2 தேக்கரண்டி, பனங்கற்கண்டு - ஒரு தேக்கரண்டி சேர்த்து, வாரம் ஒருமுறை சாப்பிட்டால், சிறுநீரகக் கற்கள் பிரச்னை சரியாகும்.

பனங்கற்கண்டில் அதிகளவில் உள்ள சாம்பல் சத்து, உயர் ரத்த அழுத்தம், வழக்கமான இதயத் துடிப்பு போன்ற நரம்பு மண்டல செயல்பாட்டையும் பராமரிக்கிறது.

கர்ப்பிணி மற்றும் மகப்பேறு பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்றுப் புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

இதில் நிறைந்துள்ள கால்சியம், எலும்பு சிதைவு, முழங்கால் வலி மற்றும் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்கிறது.

தொகுப்பு: ப.மோகன்ராம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us