PUBLISHED ON : ஜூலை 30, 2023

பொதுவாக கீரைகள் என்றாலே, ஆரோக்கியமான உணவு தான். ஆனால், அதில் சில கீரைகள் அதிகப்படியான பலன் தரும் என, ஆய்வுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட கீரைகளில் ஒன்று தான், பசலைக்கீரை. இதன் பூர்வீகம், ஈரான். அடர்பச்சை நிறத்திலிருக்கும் இதில் சிறிதளவு கசப்பு தன்மையும் இருக்கும். இதை பச்சையாகவோ, சமைத்தோ உண்ணலாம்.
வைட்டமின் ஏ, சி, கே, பி6, பி9, இ, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, நீர்த்த நார்ச்சத்து மற்றும் 30 வகையான பிளேவனாய்டுகள் உள்ளன. இதை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்.
நுாறு கிராம் பசலைக்கீரையில், 15 மில்லி நைட்ரேட் உள்ளது. இது, ஸ்ட்ரோக் அல்லது இதய நோய் தாக்கும் ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது. மேலும், 35 சதவீதம், 50 வயதிற்கு மேல் வரும் மாகுலர் டி ஜெனரேஷன் குறைபாட்டால் வரும், பார்வை இழப்பை தவிர்க்க உதவும் என்கின்றனர், ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
நைட்ரேட் சத்து அதிகமுள்ள பசலைக்கீரையை அதிகம் எடுத்துக் கொள்பவர்கள், மலை ஏற்றம், சைக்கிளிங் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குவர்.
இதிலுள்ள செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஆகியவை, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் பருப்புடன் கடைந்து சாப்பிட, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
பசலைக்கீரையிலுள்ள பிளேவனாய்டு மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நாள்பட்ட நோய்களுக்கு பயனளிக்கும். குறிப்பாக, புரோஸ்டேட் கேன்சர், பெண்களின் மார்பக புற்றுநோய், குடல் மற்றும் சினைப்பை புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.
எலும்பு மெலிவு நோயை தவிர்க்க, பசலைக்கீரை சாப்பிட பரிந்துரைக்கிறது, நேஷனல் ஆஸ்டியோபோரோசிஸ் பவுண்டேஷன். காரணம், அதிலுள்ள அதிகப்படியான கால்சியம், வைட்டமின் கே, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை, எலும்பு தேய்மானத்தை குறைப்பதுடன் கை, கால் மூட்டுகளில் பிரச்னை வராமல் தடுக்கும்.
அதிக நீர்ச்சத்துள்ள கீரை என்பதால், உடலை நீரோட்டத்துடன் வைக்க உதவுகிறது. மேலும், இதிலுள்ள நீர்த்த நார்ச்சத்து, உடல் உஷ்ணத்தால் வரும் மூத்திர கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை ஒழுக்கு மற்றும் மாதவிடாய் கோளாறுகளையும் சரி செய்யும்.
இக்கீரையிலுள்ள அதிகப்படியான பச்சையம், உடலிலுள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. இது, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
வீக்கங்களை குறைக்கும், அழற்சி எதிர்ப்பு பண்புகள், மைக்கிரேன் தலைவலி, ஆஸ்துமா மற்றும் முடக்கு வாதம் போன்றவற்றால் வரும் வேதனைகளை குறைத்து, நோய் தீர உதவுகிறது.
குளிர் காலத்தில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், சருமம் உலர்ந்து போகாமல் இருக்கவும் உதவுகிறது. அதேவேளை, கோடை காலத்தில், அல்ட்ரா வயலட் கதிர்வீச்சு அபாயத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
இக்கீரையை சாறு எடுத்து தவறாமல் குடித்து வர, வயது ஆக ஆக, முகத்தில் ஏற்படும் கிழட்டுத்தனத்தை முன் கூட்டியே தடுத்து விடமுடியும். பசலைக்கீரை சாற்றை முகப்பருக்கள் மீது பூசி வர, அவை மறைந்துவிடும்.
பசலைக்கீரையை பச்சையாக, ஒரு நாளைக்கு, 100 கிராம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், வாயுத்தொல்லை ஏற்படும். வாதநோய், தைராய்டு மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளோர், தவிர்க்கவும்.
தொகுப்பு: கோவீ. ராஜேந்திரன்
