தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மற்றவர் கஷ்டத்தை ஏற்போம்!

மற்றவர் கஷ்டத்தை ஏற்போம்!

மற்றவர் கஷ்டத்தை ஏற்போம்!


PUBLISHED ON : ஜன 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்., 3 - ரதசப்தமி

சூரியனுக்குரிய திதி, சப்தமி. சப்தம் என்றால், ஏழு. பிரதமை துவங்கி வரும் திதிகளில் ஏழாவதாக வருவது சப்தமி. கிழமைகளில் சூரியனுக்குரியது ஞாயிறு. அதுபோல் திதிகளில், சப்தமி உகந்தது. இதில், தை மாதம் வரும் சப்தமி, மிகவும் உயர்வானது.

உத்ராயணம் எனப்படும் சூரியனின் வடக்கு திசை நோக்கிய பயணம், தை முதல் தேதியில் ஆரம்பிக்கும். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில், சூரியன் பவனி வருகிறார். அத்தேரை, அருணன் என்ற சாரதி ஓட்டுகிறார். அவர், அதை வடக்கு நோக்கி நகர்த்தி, பாதையில் நிலைநிறுத்துவது ரதசப்தமியன்று தான். இதனால், இந்நாள், பக்தர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுகிறது.

ரதசப்தமியன்று, காலையில், ஏழு எருக்க இலைகளில், சிறிதளவு மஞ்சள் கலந்த அரிசியை (அட்சதை) வைத்து, அதை தலை மீது வைத்து நீராட வேண்டும். இதை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும்; ஆண்கள் சிறிது அட்சதையை மட்டும் தலையில் வைத்து குளிக்க வேண்டும். சூரிய உதயத்துக்கு சற்று முன் குளியலை முடித்து, சூரியன் உதயமானதும், அவரை வணங்கி, ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரத்தை சொல்வதன் மூலம், ஆண்டு முழுவதும் நடக்கும் செயல்கள் வெற்றி பெறும்; மன தைரியம் கிடைக்கும்.

எந்தப் பொருள், மக்களுக்கு அதிகம் பயன்படுவதில்லையோ, அதை தெய்வங்கள் தன்னுடையதாக ஏற்றுக்கொள்ளும். சிவனுக்கு, வில்வமும், விநாயகருக்கு அருகம்புல்லையும் போல, சூரியனுக்கு எருக்கம் இலை.

காலில் முள் குத்தினால், அதை வெளியேற்ற, எருக்கு இலையை ஒடித்து, அதன் காம்பிலிருந்து வழியும் பாலை தடவுவர். ஒரு காலத்தில், இது தொழுநோய்க்கு மருந்தாக பயன்பட்டது.

எருக்கு இலையையும், சூரியனையும் சம்பந்தப்படுத்தி, புராணக்கதை ஒன்று உண்டு.

தவவலிமை மிக்க காலவ முனிவருக்கு விதிவசத்தால், தொழுநோய் ஏற்பட்டது. இதனால், தனக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்த வேண்டி, நவக்கிரங்களை நினைத்து, தவமிருந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த நவக்கிரகங்கள் காலவ முனிவரின் நோயை நீக்கின. இதனால், கோபமடைந்த பிரம்மா, தான் எழுதிய விதிப்படியே மனிதவாழ்வு நடக்க வேண்டுமென்றும் அதையே கிரகங்கள் செயல்படுத்த வேண்டும் என்றும், அதை மீறிய கிரகங்கள், காலவ முனிவருக்கு வந்த தொழுநோயை அனுபவிக்க வேண்டும் என்றும் சாபமிட்டார்.

அதன்படி, எல்லா கிரகங்களுக்கும் தொழுநோய் வந்து விட்டது. அவர்கள், பிரம்மாவிடம் சாபவிமோசனம் கேட்டனர். பூலோகத்திலுள்ள ஒரு எருக்கம் வனத்திற்கு சென்று, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, 72 நாட்கள் தொடர்ந்து எருக்கிலையில் வைத்து தயிர் சாதம் சாப்பிட்டு, சிவபூஜை செய்து வர, நோய் குணமாகும் என்றார். அதன்படியே, நவக்கிரகங்களும் விரதமிருந்து, நோய் நீங்கப் பெற்றன. அத்தலமே, தற்போதைய, சூரியனார் கோவில்!

கும்பகோணம் அருகிலுள்ள இக்கோவிலில், சூரிய பகவான், தன் தேவியருடன் காட்சியளிக்கிறார். எல்லா கிரகங்களுக்கும் சன்னிதி உள்ளது. ரதசப்தமியன்று இங்கு சென்று சூரியனையும், பிற கிரகங்களையும் வணங்கி வந்தால், நம் பிரச்னைகள் குறைய அவர்கள் அருள் செய்வர்.

காலவ முனிவரின் துன்பத்தை ஏற்ற நவக்கிரகங்களைப் போல, மற்றவர்களின் துன்பத்தை ஏற்கும் மனப்பக்குவத்தை ரதசப்தமி நாளில் பெறுவோம்.

- தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us