தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/எதையும் தாங்குவோம்!

எதையும் தாங்குவோம்!

எதையும் தாங்குவோம்!


PUBLISHED ON : ஜூன் 18, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும், அதைத் தாங்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான், கூர்ம அவதார தத்துவம். திருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் இது. ஆனி மாதம் தேய்பிறை துவாதசியன்று, கூர்ம ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

கூர்ம அவதார காலமான, கிருதயுகத்தில், தர்மம் தழைத்தோங்கி இருந்தாலும், அசுர குணங்களும் நிறைந்திருந்தன. நற்குணமும், பக்தியும் கொண்ட தேவர்களை, துன்புறுத்தினர், அசுரர்கள். இதிலிருந்து தப்பிக்க, சாகாவரம் வேண்டி, திருமாலையும், சிவனையும் பிரார்த்தித்தனர், தேவர்கள்.

'அமிர்தம் எனும் மருந்தை அருந்தினால், இறப்பின்றி வாழலாம்...' என்று அவர்கள் சொல்லவே, அதைப் பெறுவதற்காக, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்தரம் என்ற மலையை மத்தாகவும் கொண்டு, பாற்கடலை கடைந்தனர், தேவர்கள்.

இதைக் கேள்விப்பட்ட அசுரர்கள், தாங்களும் சாகாவரம் பெற, தேவர்களுடன் இணைந்து, கடலை கடைய முன்வந்தனர். பாம்பின் தலை பகுதியை அசுரர்களும், வால் பகுதியை தேவர்களும் பிடித்துக் கொள்ள, பாற்கடலை கடைந்தனர். அப்போது, வலி தாங்காமல், விஷத்தைக் கக்கியது வாசுகி பாம்பு; அதன் வீரியம் தாங்காமல் சோர்வடைந்தனர், அசுரர்கள்.

'மந்தரமலை சாய்ந்து விட்டால், இதுவரை பட்டபாடெல்லாம் வீணாகி விடும். விஷம் அமிர்தத்தில் கலந்து பாழாகி விடும்...' என்று தேவர்கள் கலங்கிய போது, திருமால், கூர்மமாக (ஆமை) உருமாறி, கடலுக்கடியில் சென்று, மந்தரமலையை தன் முதுகில் தாங்க, சிவபெருமானோ, விஷத்தை விழுங்கி, அனைவரையும் காத்தார்.

அமிர்தகுடம் வெளிப்பட்டதும், மோகினி வடிவம் எடுத்த திருமால், அசுரர்களை மயக்கி, அமிர்தத்தை, தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

சிரமமான சூழலில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, தேவர்களுக்கு உதவியதால் தான், அமிர்தம் கிடைத்தது. நல்லவர்கள் மட்டுமே பூமியில் வாழ்வதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில் அருகிலும், தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகிலுள்ள அகரம் கிராமத்திலும், தசாவதாரக் கோவில்கள் உள்ளன. இங்கும், மதுரை அழகர்கோவில் தசாவதார சன்னிதியிலும், கூர்ம அவதாரத்தை தரிசிக்கலாம்.

ஆமை, அடக்கம் மிக்கது; தன் உறுப்புகள் அனைத்தையும் ஓட்டுக்குள் அடக்கி, பணிவை வெளிப்படுத்தும். ஆமை போல அடங்கி வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் தான், ஆமைப்பலகை மீது அமர்ந்து, பூஜை செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

நாமும் எதையும் தாங்கும் இதயம் பெறவும், ஆமை போல் அடக்கமாக வாழவும், கூர்ம ஜெயந்தி நன்னாளில், திருமாலை வேண்டுவோம்!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us