தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 18, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இப்படி பிரித்தாளுகின்றனரே...

முன்பெல்லாம், மாப்பிள்ளை வீட்டார் கேள்வி மேல் கேள்வி கேட்டு, பெண் வீட்டாரை பாடாய் படுத்துவர்; இப்போதோ, நிலைமை தலைகீழ்.

மணப்பெண் கிடைப்பது அரிதாகி விட்ட நிலையில், பெண் வீட்டார் செய்யும் சில அலம்பல்கள், மிகவும் வேதனை தருவதாய் உள்ளது.

சமீபத்தில், உறவினர் மகனுக்கு பெண் பார்க்கும் படலத்தில் கலந்து கொண்டேன். அப்போது, பெண்ணின் பெற்றோர், மாப்பிள்ளையின் பெற்றோரிடம் கேட்ட ஒரு கேள்வி, சபையையே ஒரு வினாடி ஸ்தம்பிக்க வைத்தது.

'கல்யாணத்துக்கு பின், எங்க பொண்ணு, உங்க வீட்டுக்கு வந்தப்புறம் நீங்க ரெண்டு பேரும் எங்க தங்குவீங்க... ஏன்னா, எங்க பொண்ணுக்கு கூட்டமே பிடிக்காது. அதில்லாமல், தனியா அவங்க, 'லைப்'பை அவங்க பார்த்துக்கிடட்டும். அப்ப தானே அதுங்களுக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியும். அதனால் தான் கேட்கிறோம்...' என்று, பெண்ணின் அம்மா சொல்ல, மாப்பிள்ளையின் அம்மா, 'எங்களை ஏதாவது பாழும் கிணத்துல தள்ளி விட்டுட்டு, அப்புறமாய் உங்க பெண்ணை எங்க வீட்டுக்கு வாழ வரச் சொல்லுங்க...' என, வேதனையை மறைத்து, சிரித்தபடி கூறினார்.

பிள்ளைகளுக்கு உறவு முறை வாழ்க்கையை சொல்லித் தர வேண்டிய பெரியவர்களே, இப்படி பிரித்தாளும் முறையை சொல்லிக் கொடுத்து, தங்கள்

பிள்ளைகளின் வாழ்க்கையை சூனியமாக்கி விடுவதை நினைத்தால், பயமாக உள்ளது.

—ம.ரேவதி, சென்னை.

நண்பரின் உயர்ந்த சிந்தனை!

மும்பையில் பணிபுரிந்த என் நண்பர், பணி நிறைவு பெற்றதும், சொந்த ஊருக்கு திரும்பி, புது வீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்தார்.

தவிர்க்க முடியாத காரணத்தால், என்னால், அந்நிகழ்ச்சிக்கு செல்ல இயலவில்லை. பின், ஒரு மாதம் கழித்து, அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.

கிரகப்பிரவேசம் அன்று எடுத்த வீடியோவை, எனக்கு காண்பித்தார், நண்பர்.

அவர்களது சம்பிரதாயப்படி சடங்குகள் நடக்க, அப்போது, ஐந்து முக குத்து விளக்கை, திருநங்கைகள் சிலர் ஏற்றி வைத்தனர். பின், திருநங்கைகளை, நண்பர், தன் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதை கண்ட நான், 'என்ன அவங்களுக்கு இவ்வளவு மரியாதை...' என்றேன்.

அதற்கு, நண்பர், 'நான், மும்பையில் குடியிருந்த போது, பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டேன்;

அப்போது, நான் வசிக்கும் பகுதியில் இருந்த இந்த திருநங்கைகள் தான் எனக்கு உதவி புரிந்து, காப்பாற்றினர். அவர்கள் இல்லாவிட்டால், நான்,

இன்று உயிரோடு இருந்திருக்க முடியாது. அதற்கு நன்றி பாராட்டவே, குத்து விளக்கை, அவர்கள் கையால் ஏற்றினேன்...' என்றார்.

சமூகத்தால் ஒதுக்கப்பட வேண்டியவர்கள், திருநங்கைகள் அல்ல என்பதை, அவரது பேச்சு உணர்த்தியது. நண்பரின் உயர்ந்த சிந்தனையை பாராட்டினேன்.

— ஜெ.யாஸ், திண்டிவனம்.

தொலை தூர கல்வி!

சமீபத்தில், என் சகோதரியின் குழந்தையை, பள்ளியில் விட சென்றிருந்தேன். அங்கு, அவளின் தோழி, ஆசிரியராக இருப்பதை பார்த்ததும், ஆச்சரியமாக இருந்தது. காரணம், கல்லுாரி முதலாம் ஆண்டிலேயே, குடும்ப சூழ்நிலை காரணமாக, படிப்பை பாதியிலேயே நிறுத்தி, திருமணம் செய்தவர்.

அதுகுறித்து பேசிய போது, தனக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால், கணவர் அனுமதியுடன், தொலை தூர கல்வியில், முதுநிலை வரை படித்து, தற்போது, பள்ளியில் ஆசிரியராக இருப்பதாக கூறினார்.

ஆர்வம் இருந்தால், படிப்பதற்கு வயதோ, சூழல்களோ தடையாக நிற்க முடியாது. திருமணம் ஆகி விட்டது; குடும்ப சூழ்நிலை என்று, படிப்பை தொடர யோசிப்பவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். அரசும், தற்போது, தொலை தூர கல்விக்கு, வேலையுரிமையை ஒதுக்கியுள்ளது, கூடுதல் சந்தோஷம்.

நாகராணி கதிர், உடுமலை பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us