PUBLISHED ON : செப் 18, 2016

மூங்கில்பட்டி கிராமத்திலிருந்து, இரண்டு, மூன்று பேருந்துகள் மாறி, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து குமரேசன் இறங்கிய போது, விடிந்திருந்தது. இரவு முழுதும் தூக்கம் இல்லை. காரணம், மூன்று பேர் அமரும் சீட்டில், துவாரபாலகர்கள் போன்று அவன் இருபுறமும் அமர்ந்திருந்த இருவர், 'தோள் கண்டார் தோளே கொண்டார்' என்று, இவன் தோளில் தலையை உரிமையுடன் சாய்த்து தூங்கி வந்ததால், இவன் தூக்கம் தொலைந்து போனது.
சென்னையில் நல்ல வேலை கிடைத்து, குடும்பத்துக்கு மாதந்தோறும், குறைந்த பட்சம், 3,000 ரூபாயாவது அனுப்ப வேண்டுமே என்ற கவலை, மனதை ஆக்கிரமித்திருந்ததால், இந்த உபத்திரவம் அப்போது பெரிதாக தெரியவில்லை என்றாலும், இப்போது, அசதியாகவே இருந்தது.
பேருந்து நிலையத்திலேயே, பல் தேய்த்து, இலவச குளியலறையில் குளித்து, உடை மாற்றி, சூடாக டீ குடித்து வெளியே வந்த போது, சென்னை நகர், அவனுள் கொஞ்சம் மிரட்சியை தந்தது.
மாம்பலம் போகும் பேருந்து எது என்று விசாரித்து, தி.நகர் பேருந்து நிலையத்தில் இறங்கி, 'சப் வே'யில் நடந்து, முருகேசன் வீட்டை தேடிக் கண்டுபிடித்து, கதவை தட்டிய போது, நெற்றியில் குங்குமப் பொட்டும், வெள்ளையும் சொள்ளையுமான உடையுடன், முருகேசனே கதவை திறந்தார்.
குமரேசனின் அம்மாவுக்கு தூரத்து உறவினரான முருகேசன், சென்னையில், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து, ஓரளவு வசதியாக இருந்தார். வீடு பார்த்து தரும் புரோக்கராக தொழிலை துவக்கியவர், நாளடைவில் பிளம்பிங், எலக்டிரிகல், சில்லரை சிவில் ஒர்க் என்று கான்டிராக்ட் எடுத்து மெல்ல முன்னேறி, வார்டு கவுன்சிலரின் ஆசியுடன், புறநகரில் வீட்டு மனைகள் போட்டு விற்க ஆரம்பித்தவுடன், அதிர்ஷ்ட தேவதை அவருக்கு அபரிமிதமாக அருள்பாலிக்க, இப்போது, தனி வீடு, கார் என்று நல்ல வசதியுடன் இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் கிராமத்திற்கு சென்றிருந்த முருகேசன், குமரேசன் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது, குமரேசன் பிளஸ் 2வில் பார்டர் மார்க் எடுத்து பாஸ் செய்திருந்ததைக் கேள்விப்பட்டு, அவனை கடிந்து கொண்ட போது, குமரேசனின் அம்மா தான், 'என்ன செய்றது முருகு... இவனுக்கு படிப்பு ஏறல; பொண்ணு எட்டாவது படிக்கிறா... அவளுக்கு கல்யாணம், காட்சின்னு வரும் போது, பணத்துக்கு என்ன செய்றதுன்னு தெரியல. இவரு வேலை பாத்த மில்ல மூடி, ஒரு தொகைய மொத்தமா கொடுத்து அனுப்பிட்டாங்க. இப்ப ஒரு கம்பெனியில செக்யூரிடியா இருக்காரு... இதெல்லாம் எத்தனை நாளைக்கு வரும்... நீ தான் இவனுக்கு ஒரு வழி செய்யணும்...' என்றாள்.
'அது ஒண்ணும் பெரிய விஷயமில்ல... அடுத்த வாரம், குடும்பத்தோட பழனிக்கு போறேன்; அதுக்கப்புறம், சென்னைக்கு வந்து என்னை பாக்க சொல்லு; என்னால முடிஞ்சத செய்றேன்...' என்றார்.
கதவை திறந்த முருகேசன், ''ஓ நீயா... வா வா... ஊர்ல எல்லாரும் சவுக்கியமா...'' என்று கேட்டவர் ஊர் நிலவரம் விசாரித்த பின், மனைவியை அழைத்து, இருவருக்கும் சிற்றுண்டி கொண்டு வரச் சொன்னார்.
சாப்பிட்டு முடித்ததும், ''அண்ணே... வேலை விஷயமா வந்திருக்கேன்; நீங்க தான்...'' என்று இழுத்தான்.
''ஓ அதுவா தம்பி...'' என்று யோசித்தவர், ''சரி... இப்போதைக்கு ஒரு அபார்ட்மென்டில வாட்ச்மேன் வேலை காலியா இருக்கு... கொஞ்ச நாள் கஷ்டப்பட்டேன்னு வையி, அப்புறம் நல்ல வேலையா பாத்துக்கலாம்; என்ன சொல்ற...'' என்றார்.
''வ... வாட்ச்மேன் வேலையா...'' என்று இழுத்தான் குமரேசன்.
சட்டென்று முகம் மாறி, ''பிளஸ் 2வுல பார்டர்ல பாஸ் பண்ணியிருக்கிற உனக்கு என்ன வேலை கிடைக்கும்ன்னு எதிர்பாக்கிறே... கலெக்டர் வேலையா...பெட்ரோல் பங்குல, எடுபிடி வேலை பாத்தவரு தான் அம்பானி; ஆனா, அவர் சாகும் முன், உலக பணக்காரர்கள்ல ஒருத்தரா உயர்ந்தாரு; எல்லாம் உழைப்பு. சரி, வாட்ச்மேன் வேலை கவுரவமா இருக்காதுன்னா, ஜெராக்ஸ் கடையிலயோ, ஜவுளிக்கடையிலயோ வேலை வாங்கித் தர்றேன்; ஆனா, பம்பரமா சுத்தி வேலை செய்யணும்; ரொம்ப கஷ்டம். வாட்ச்மேன் வேலை அம்புட்டு கஷ்டமில்லை; சுளுவு தான். கொஞ்சம் சுதந்திரமா இருந்துக்கலாம், என்ன சொல்றே...'' என்றார்.
''சரி அண்ணே,'' என்றான் அரை மனதுடன்!
சிறிது நேரத்தில், அவனை அழைத்துப் போய், தனக்கு தெரிந்த அபார்ட்மென்ட் காம்ப்ளக்ஸ் செக்ரடரியிடம், ''சார்... இவன் பேரு குமரேசன்; நம்மூரு பையன். பிளஸ்2 படிச்சிருக்கான்; வீட்டுல பணக் கஷ்டம்; வாட்ச்மேன் வேலை இருக்கிறதா சொன்னீங்களே... இவனை கொஞ்ச நாள் வச்சுப் பாருங்க...'' என்றார்.
''சரி சரி... நாளைக்கு வாப்பா... வேலை ஒண்ணும் கம்பசூத்திரமில்ல; சம்ப் நிரம்பியதும், மோட்டர் போட்டு, டாங்குல தண்ணி ஏத்தணும்; தண்ணி லெவல் பார்க்கணும்; போற, வர்ற வெளி ஆட்களை கண்காணிக்கணும்; உஷாரா இருக்கணும். தப்பு தண்டா நடந்தா, நீ தான் பொறுப்பு. புகார் எதுவும் வராம பாத்துக்கணும் புரிஞ்சதா... சம்பளம், 5,000 ரூவா. இன்னொரு வாட்ச்மேன் இருக்கான்; அவன் ஊருக்கு போயிருக்கான். அவன் வந்ததும், ரெண்டு பேரும் மாறி மாறி டூட்டி பாக்கணும்... சரியா...''
''சரி சார்,'' என்றான்.
சரியாக ஒரே வாரம் தான்; வேலை பிடிக்கவில்லை என்பதுடன், சம்பளம் தனக்கே பத்தாததால், அசோசியேஷன் செக்ரடரியிடம், 'அம்மாவுக்கு உடம்பு முடியல; பாத்துட்டு வந்துடுறேன்...' என்று சொல்லி, ஊருக்கு பஸ் ஏறி விட்டான் குமரேசன். முதலில் முருகேசனிடம் சொல்லி விட்டு செல்லத்தான் நினைத்தான். ஆனால், அவர் திட்டுவார் என்பதால், சொல்லாமலேயே கிளம்பி விட்டான்.
அவனைப் பார்த்ததும், ''என்னடா ஆச்சு...'' என்றாள் அம்மா. முகத்தில் ஆச்சரியமும், அதிர்ச்சியும், வருத்தமும் தென்பட்டன.
''அந்த வேலை சரிபடாதும்மா,'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டான்; அதற்கு மேல் அம்மாவும் கேட்கவில்லை.
விஷயம் கேள்விப்பட்டு, அவனைப் பார்க்க வந்தான், நண்பன் சரவணன்.
''என்ன மாப்ளே... போன மச்சான் திரும்பி வந்தான்ங்கிற மாதிரி போன வேகத்துல திரும்பிட்டே...'' என்றான்.
''நீ வேற ஏண்டா கடுப்பை கிளப்புறே... வேலை கூட ஒரு மாதிரி ஒப்பேத்திடலாம்ன்னாலும் சம்பளம், ரொம்ப கம்மிடா... 5,000 ரூபா தான் தர்றான்; நாலைஞ்சு பேரா ரூமை ஷேர் பண்ணி, சீப்பான மெஸ்ல சாப்பிட்டாக் கூட, 4,000 ரூபா ஆயிடுது... அப்புறம், ஊருக்கு என்னத்தை அனுப்புறது... மாங்கு மாங்குன்னு உழைச்சுட்டு, ஒரு காசு கூட சேமிக்கலன்னா, என்னடா பிரயோஜனம்...''
''அப்படின்னா சொல்றே... டேய் குமரேசா... எதுக்கும், நானும் டிரை செய்து பாக்குறேன்டா அந்த முருகேசன் விலாசத்தை கொடு... அவர் கால்ல, கையில விழுந்தாவது வேலை கேக்கறேன்,'' என்றான் சரவணன். அவனும் கிட்டதட்ட குமரேசன் மாதிரி தான்; படிப்பும் சுமார்; குடும்பம் பெரிசு; பணக் கஷ்டம்.
'இவன் என்னத்தை கிழிக்கப் போறான்; அடுத்த வாரமே வந்துடுவான்...' என்று நினைத்து, முருகேசனின் விலாசத்தை தந்தான் குமரேசன்.
''என்னை பத்தி முருகேசு சார் கேட்டா...'' என்று குமரேசன் இழுக்க, ''அதெல்லாம் நான் பாத்துக்கறேன்... காலேஜில் சீட் கிடைச்சுருச்சுன்னு, அவங்கப்பா உடனே சேர சொல்லிட்டாரு... ராவோட ராவா, பஸ் ஏறி போறாப்பல நிலைமையாயிடுச்சுன்னு சமாளிக்கறேன்...'' என்று ஆறுதல் சொல்லி, பஸ் ஏறினான் சரவணன்.
'எத்தனை நாளு தாக்குப் பிடிக்கிறேன்னு பாக்கிறேன்...' என்று மனதுக்குள் நினைத்தான் குமரேசன்.
ஆனால், அன்று போன சரவணன், திரும்பி வரவில்லை.
ஒரு மாதத்திற்கு பின், சரவணனின் அப்பா, குமரேசனை கடைத் தெருவில் பார்த்து, ''குமரேசா... சரவணனுக்கு வாட்ச்மேன் வேலை கிடைச்சிருக்காம்; 3,000 ரூபாய் மணியார்டர் அனுப்பியிருக்கான். அடுத்த மாசத்துலேருந்து என் பேங்க் அக்கவுண்ட்டுக்கு நேரடியா பணம் அனுப்பிடறேன்னு சொன்னான். உங்கிட்டே சொல்லி, ரொம்ப நன்றின்னு சொல்லச் சொன்னான்,'' என்று, உளமார வாழ்த்தினார்.
குமரேசனுக்கு ஆச்சரியமாகவும், கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. வீட்டில் இவ்விஷயம் தெரிந்து, எதுக்கும் லாயக்கில்லை என்று ஜாடை மாடையாக பேச ஆரம்பித்தனர்.
சரவணன் வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், மூன்று நாட்கள் விடுமுறை எடுத்து, குடும்பத்தினருக்கு துணிமணி வாங்கிக் கொண்டு, தீபாவளிக்கு ஊருக்கு வந்திருந்தான். கொஞ்சம் பூசினாப் போல இருந்த அவன் முகத்தில் சந்தோஷம்.
''என்னடா சரவணா... சென்னையிலயே செட்டில் ஆயிட்ட போலிருக்கே... எப்படிடா அந்த வேலை உனக்கு தோதுபடுது... சம்பளம் எப்படி கட்டுபடியாவுது?'' என்று கேட்டான் குமரேசன்.
''குமரேசா... நாம நினைக்கிற வாழ்க்கை கிடைக்காட்டி, நமக்கு கிடைச்ச வாழ்க்கைய ஏத்துக்கிறது தான் புத்திசாலித்தனம். எனக்கும், அந்த வாட்ச்மேன் வேலை பிடிக்கல தான்; தங்கறதுக்கும், சோத்துக்கும் செலவழிச்சா, ஒண்ணும் மிஞ்சாதுன்னு தெரிஞ்சது; அதுக்காக பொசுக்குன்னு அதை உதறித் தள்ளிட்டு ஓடியாந்துட முடியுமா... இங்கே வந்து என்னத்த பெரிசா கிழிக்கப் போறோம்... பழயதை தின்னுட்டு, அம்மா, அப்பாகிட்டே பாட்டு கேட்டு, வெறுத்து உக்காரப் போறோம். பெத்தவங்க இருக்கறவரை நமக்கு சோறு போடுவாங்க... அதுக்கப்புறம், நம்ம எதிர்காலம் என்ன ஆகும்ன்னு யோசிச்சேன்.
''அதனால, வேலையை விட மனசில்ல; அதுக்குப் பதிலா தண்ணி ஏத்தற மோட்டர் ரூம்லயே தங்கிக்கிட்டேன். எலி குறுக்க, நெடுக்கா ஓடும்; கொசு கடிக்கும்; பொறுத்துக்கிட்டேன். அடுத்தாப்புல சாப்பாடு... கொஞ்ச நாள் வெளியில சாப்பிட்டேன்; அப்புறம், அப்பாட்மென்ட்ல இருக்கிற பேச்சுலர்சே விருப்பப்பட்டு ஏதாவது தருவாங்க. நம்ப மாட்டே... பரோட்டாவிலிருந்து, பாதாம் அல்வா வரைக்கும் எல்லாம் தருவாங்க. அவ்வளவு ஏன்... சரக்கு பாட்டில் கூட தந்தாங்க; நான் வாங்கலை. எதையும் நாம கேட்டாதான்டா பிச்சை; அவங்களா தந்தா, அது கொடை. அதுல கேவலம் இல்லன்னு தோணுச்சு.
''அபார்ட்மென்டுல ரிப்பேர் பண்ண வர்ற பிளம்பர், கார்பென்டர், எலக்டிரிஷியன் எல்லாருக்கும் அசிஸ்டென்டா இருக்க ஆரம்பிச்சேன். சின்னச் சின்ன வேலை, அவங்ககிட்டே கத்துக்கிட்டு நானே செய்தேன். கடை கண்ணின்னு போயி, யாருக்காவது எதுனாச்சும் வேணும்ன்னா வாங்கிட்டு வருவேன். கேன் வாட்டர், பால் பாக்கெட்டு வாங்கி வந்து குடுப்பேன். அயர்ன் பண்ண, எலக்டிரிக் பில் கட்ட, இப்படி நிறைய வேலையை செய்வேன். எல்லாத்துக்கும் காசு... என் சம்பளம் பூரா மிச்சம்...
''வாழ்க்கையில் உயரணும்ன்னா, குறுக்கு வழி தேவையில்லடா... உழைப்பின் மூலமே உயர்ந்த நிலைய அடைய முடியும். அதுக்கு, ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கணும்; சூழ்நிலைக்கேற்ப மாறிக்கணும். கஷ்டம் தான்; ஆனா, முடியாததல்ல... இப்ப, ஓய்வு நேரத்துல கம்ப்யூட்டர் இன்ஸ்டியூட் போயி, டைப்பிங், டி.டி.பி., எல்லாம் கத்துக்கிட்டு இருக்கேன். பிளாட்டுல குடியிருக்கிற வக்கீல் ஒருவர், இன்னும் ஆறு மாசத்துல எனக்கு டைப்பிஸ்ட் வேலை தர்றதா சொல்லியிருக்காரு... அப்புறம் என் வாழ்க்கையில ஏற்றம் தான்,'' என்றான்.
தீபாவளி முடிந்து சரவணன் சென்னை பஸ்சில் அமர்ந்து, ''கோயம்பேடு ஒரு டிக்கெட்,'' என்றான். ''சரவணா... ரெண்டு டிக்கெட்டா வங்கிடு; சம்பளம் வாங்கினதும் தந்துடறேன். இனி, உன் வழி தான் என் வழி,'' என்ற குரல் கேட்டு திரும்பினான்.
சூட்கேசுடன் பின் சீட்டில், புன்முறுவலுடன் அமர்ந்திருந்தான், குமரேசன்.
ஆர்.ரகோத்தமன்
