sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

எது தர்மம்?

/

எது தர்மம்?

எது தர்மம்?

எது தர்மம்?


PUBLISHED ON : ஜன 06, 2019

Google News

PUBLISHED ON : ஜன 06, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயற்பியல் துறையில் கல்லுாரி பேராசிரியராக பணியாற்றி, பணி ஓய்வுபெற்ற நாளில், கும்பகோணத்தில் உள்ள பிரபல ஓட்டலில் விருந்து கொடுத்தார், மகாபிரபு.அடுத்த நாள் காலையிலும் வழக்கமான நேரத்திலேயே எழுந்துவிட்ட மகாபிரபுவை பார்த்து, அவர் மனைவி, மகன், மருமகள் மற்றும் பேத்திகள் அனைவருக்குமே வியப்பு.''என்னங்க... நாங்க எல்லாரும் வேலைக்கும், பள்ளிக்கும் போற அவசரத்துல இருக்குறதால, இனிமேலாச்சும் வீட்டு வேலைகள்ல உதவி செய்யலாம்ன்னு எப்போதும் போலவே எழுந்துட்டீங்களா,'' என்று சிரித்தாள், மனைவி புஷ்பலதா.''அது தான், உன் புத்திரன் எனக்கும் சேர்த்து, பேத்திங்க ரெண்டு பேரையும் பள்ளிக்கு கிளம்ப தயார் செஞ்சு, உங்களுக்கு உதவி செய்யுறானே... அப்புறம் ஏன் என்கிட்ட இன்னும் எதிர்பார்க்குறீங்க... இது, ஓய்வெடுக்காத சிங்கம்... தனியார் கல்லுாரி ஒன்றில், 'அப்பாயின்ட் மென்ட்' வாங்கிட்டேன். மாசம், 30 ஆயிரம் ரூபா சம்பளம். ஆக, என்னுடைய இயக்கம் தொடர்ந்தபடியே தான் இருக்கும்.''வர்ற, 18ம் தேதி தான் கல்லுாரிக்கு போகணும்... அதுவரை துாங்கி பழகிட்டா, மறுபடி வேலைக்கு போறப்போ சிரமமா இருக்குமே... அதனால தான் எப்போதும் போல, காலையில் எழுந்து குளிச்சிட்டேன்,'' என்றார், கண்களில் பிரகாசத்துடன்.''இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை... வீட்டுல சும்மா உட்கார்ந்தா, வீட்டு வேலை செய்ய சொல்லுவோம்ன்னு இப்படி ஒரு யோசனை பண்ணி மறுபடியும் வேலைக்கு சேர்ந்துட்டீங்களா... நடத்துங்க... வீட்டுல சும்மா உட்கார்ந்திருந்தா, 30 ஆயிரம் ரூபா வருமா,'' என்று சிரித்தபடி, அடுத்த வேலைகளை பார்க்க சென்று விட்டாள், புஷ்பலதா.ஆனால், மகன் விவேக், மருமகள் சிந்துஜா, இருவரும் இதைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.பேத்திகள் பள்ளிக்கூடம் போய்விட, மனைவி, மகன், மருமகள் அவரவர் அலுவலக பணிகளுக்கு சென்று விட, நீண்ட நாட்களுக்கு பின், தனியாக வீட்டில் இருந்தார், மகாபிரபு.தனியாக இருந்ததால், மனதில் பலவித எண்ணங்கள் அலைபாய்ந்தன. அரசு கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி, நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார். தற்போதைய அரசு விதிகளின்படி, ஓய்வூதியமே ஒரு லட்சத்தை நெருங்கும்.நில அளவையர் அலுவலகத்தில், அதிகாரியாக இருக்கிறார், புஷ்பலதா. மகன் விவேக், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்ற, தஞ்சை மாவட்ட மைய நுாலகத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறார், மருமகள்.பொருளாதாரத்தில் மிகவும் செழிப்பான நிலையிலேயே, மகாபிரபுவின் குடும்பம் இருந்தது. 'ஒரு லட்சத்தை நெருங்கி வரப்போகுது, ஓய்வூதியம். அப்புறம், காசு ஆசை பிடிச்சு, அப்பா ஏன் அலையுறாருன்னு நினைக்கிறானா அல்லது அப்பா ஓய்வுபெற்று வீட்டுல இருந்தா, பேத்திங்களை பள்ளிக்கு கிளம்ப தயார் செய்யுற வேலையை என்கிட்ட ஒப்படைக்க நினைச்சு, நான் தொடர்ந்து வேலைக்கு போனா அது முடியாதுன்னு கோபமா...'பணம் நிறைய சம்பாதிச்சாலும், கோவிலுக்கு அபிஷேகம், அன்னதானத்துக்கு எவ்வளவு செலவழிக்கிறோம். கோவில் கும்பாபிஷேகம், பள்ளிக்கூடத்துக்கு நிதி உதவின்னு யார் வந்தாலும், பணம் கொடுக்காம இருந்தது கிடையாது.'புஷ்பலதாவோட சொந்தம், மருமக சிந்துஜாவின் சொந்தம்ன்னு பலரும் ஏதாவது சூழ்நிலையில உதவின்னு வந்து நின்னப்ப, நானும் பண உதவி பண்ணியிருக்கேன். மனைவி, மகன், மருமகள் செய்ற உதவியையும் தடுக்குறது கிடையாது.'இப்ப, 30 ஆயிரம் ரூபா வாங்கினாலும், குறைந்தது, 5,000 - 10 ஆயிரம் வரைக்கும், தர்ம காரியத்துக்கு தான் போகப் போகுது. பணம் கிடக்கட்டும், பேராசிரியரா இருந்த என்னோட அறிவை, உடல் நலம் நல்லா இருக்கும்போதே முடக்கிப் போட்டு வீணடிக்க விரும்பலை. 'சும்மா இருக்குற மனிதனின் மனது, பேய்களின் கூடாரம்...'ன்னு ஒரு பழமொழி இருக்கு.'என் மனசு ஆறா ஓடணும்... குட்டையா தேங்கினா நாளடைவில் சாக்கடையா மாறி, சுற்றுப்புறத்தை கெடுக்கும்ன்னு தானே உடனடியா வேலைக்கு போக முடிவெடுத்தேன். அது பிடிக்கலைன்னா நேரடியா சொல்ல வேண்டியது தானே...'எதுவும் பேசாம போனா, என்ன அர்த்தம்... அடச்சை, நான் ஒரு மடையன்... காலையில எல்லாரும் வெளியில கிளம்புற அவசரத்துல இருந்ததால, பேசியிருக்க மாட்டாங்க... அது புரியாம தனியா கிடந்து புலம்பிட்டு இருக்கேன். சாயந்தரம் எல்லாரும் வந்ததும், முக்கியமா பையன்கிட்டயும், மருமகள்கிட்டயும் ஆட்சேபனை இருக்கா, இல்லை... நேரமில்லாம எதுவும் சொல்லாம போனீங்களான்னு கேட்டுடணும்...'நேரமில்லைன்னா என்னா, நல்ல முடிவுப்பா... அப்படி இப்படின்னு எதாவது சொல்ல வேண்டியது தானே...' என்று பலவாறு குழம்பி தவித்தார், மகாபிரபு.

அன்று இரவு உணவுக்கு பின், நேரடியாகவே, மகன், மருமகளிடம் கேட்டு விட்டார், மகாபிரபு. அப்போதும் இதைப் பற்றி எதுவும் பேசாமல் மவுனம் சாதித்தனர்.''உங்க மனசுல ஏதோ இருக்கு... அதனால தான் மென்னு முழுங்கறீங்க... தயவுபண்ணி என்னன்னு சொல்லுங்க,'' என்றும் கேட்டு பார்த்தார், மகாபிரபு.அதற்கும், அவர்கள் இருவரும் மவுனம் சாதித்தனர்.''இதுக்கு தான் நான் வேலைக்கு போகணும்ன்னு முடிவெடுத்தது. எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்து, படிப்பு, வேலைன்னு, 50 ஆண்டுக்கு மேல பரபரப்பாவே இருந்துட்டேன். உடம்பு சரியில்லாம, ஏதாவது விசேஷத்தின் போது, வேலைக்கு போகாம இருந்துருக்கேன்.''ஆனா, இனி வேலை கிடையாதுன்னு நேத்தோட ஓய்வு கொடுத்துட்டாங்க... இன்னும், 17 நாள்ல மறுபடி வேலைக்கு போகப் போறேன்னு நல்லா தெரியுது... அப்படி இருந்தும், இன்றைய ஒரு நாள் பொழுது அவ்வளவு மெதுவா நகர்ந்துச்சு...''நீங்க எல்லாரும் உங்க வேலை, பள்ளிக் கூடம்ன்னு, 'பிசி'யாவே இருப்பீங்க. ஆனா, இனி நான் எப்பவுமே வேலைக்கு போகாம வீட்டுல உட்கார்ந்தா என்கிட்ட யார் பேசிகிட்டு இருப்பா, புத்தகத்தை படித்தும், எவ்வளவு நேரம் தான், 'டிவி'யையும் பார்க்க முடியும்...''வீட்டுல நீங்க எல்லாரும் இருக்குற நேரம் கூட, என்கிட்ட பேசலைன்னா, எனக்கு பைத்தியம் பிடிச்சுடாது... அதுக்காக தான் வேலைக்கு போறேன்னு சத்தியம் பண்ணணுமா... நான் ஒண்ணும் காசு ஆசை பிடிச்சு வேலைக்கு போகலைன்னு என்ன செஞ்சா நம்புவீங்க... ''அந்த தனியார் கல்லுாரியில, பி.ஹெச்டி., படிச்சவங்களுக்கே, 25 ஆயிரம் தான் சம்பளம். என் அனுபவத்தை மதிச்சு, திறமைக்காக, 30 ஆயிரம் ரூபா சம்பளம் தர்றாங்க. அதை வேணும்ன்னா அப்படியே கோவில் உண்டியல்ல போட்டுட்டா நம்புவீங்களா,'' என, படபடத்தார், மகாபிரபு.''நானும் காலையிலேயே கவனிச்சேன்... இப்ப எதை மனசுல வெச்சுகிட்டு ரெண்டு பேரும் வாயடைச்சு போய் அவரை, 'டென்ஷன்' ஆக்குறீங்க... காலையில வேலைக்கு போற அவசரத்துல இருந்ததால, என்னால எதையும் கேட்க முடியலை... இப்போ, எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்,'' என்று கட்டளையிட்டாள், புஷ்பலதா.''அப்பா... நீங்க பிறந்து, வளர்ந்த ஊரு சிமிழி. கும்பகோணத்துல இருந்து, 25 கி.மீ., துாரத்துல இருக்கு. அங்க தான் நீங்க, 10ம் வகுப்பு வரை படிச்சீங்க... இன்னைக்கு நீங்க பெரிய இயற்பியல் பேராசிரியரா பணியாற்றி, ஓய்வு பெற்றிருக்கலாம்... அதுக்கெல்லாம் அடித்தளம் போட்டது, நீங்க பிறந்து, வளர்ந்த சிமிழி கிராமமும், அந்த உயர்நிலை பள்ளிக் கூடமும்தான்னு நினைவு இருக்காப்பா,'' என்றான், விவேக்.''என்ன, விளையாடுறியா... நினைவில்லாம தான் வருஷா வருஷம் கோவிலுக்கு நன்கொடை கொடுத்தேனா... கோவிலை எடுத்துக் கட்ட, 10 லட்சம் கொடுத்தேனா... வருஷம் தவறாம திருவிழாவுக்கு உங்க எல்லாரையும் அழைச்சுகிட்டு போனேனா... பள்ளிக்கூடத்தை பராமரிக்க, அப்பப்ப நன்கொடை கொடுத்தேனா,'' என்று மகாபிரபு பேசும்போது, அவர் கண்கள் சிவந்திருந்தன.''அதெல்லாம் சரிதாம்பா... நியாயமான முறையில, செயல் திட்டத்தோட, முயற்சி செய்து அணுகினா, பணம் கொடுக்க ஆயிரம் பேர் இருக்காங்க... ஆனா, அங்கே இருந்து சேவை செய்ய, அதாவது, உங்களை மாதிரி, 'ஜீனியஸ்' தங்களுடைய அறிவை நன்கொடையா தர்றதுக்கு பஞ்சம் தானேப்பா...''இப்போ பாருங்க... உங்களுக்கு, 90 ஆயிரம் ரூபாய்க்கு குறையாம ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வு காலத்துல, உடல் நிலை ஒத்துழைக்கிற வரை, நம் கிராமத்துக்கு போய், பசங்களை மேம்படுத்த, உங்க அறிவை பயன்படுத்த நினைக்கலை... 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அப்படியே உண்டியல்ல போட்டுடறேன்னு சொல்றீங்களே... ''பணமா கொடுக்குற தர்மமும் அவசியம் தான். அதையும் தாண்டி, ஒருத்தன் அந்த பணத்தை தானே சம்பாதிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கறது தான் சிறந்த தர்மம். காலையில நீங்க, மறுபடி வேலைக்கு சேர்ந்துருக்கற விஷயத்தை சொன்னதும், சமீபத்துல இணையத்துல ஒரு விஷயம் படிச்சதும், இப்போ நீங்க செஞ்சிருக்கறதையும் இணைச்சு தான் நினைவுக்கு வந்தது. ''ஒரு மாந்தோப்பு முழுசும், பழம் காய்த்து பழுத்து தொங்குது. ரெண்டு பழம் பறிச்சு சாப்பிட்டதும், நம் பசி அடங்கிடும். அடுத்த தோப்பு வரை நமக்கு தேவைப்படும்ன்னு நினைச்சா, மேல ரெண்டு பழம் பறிச்சு எடுத்துக்கிட்டு பயணத்தை தொடரலாம். ''அதை விட்டுட்டு, மரத்தை பூராவும் நானே மொட்டையடிச்சு, எல்லா பழத்தையும் பறிச்சுக்குவேன். அடுத்ததா பசின்னு வர்றவங்களுக்கெல்லாம் நான் தானமா கொடுப்பேன்னு சொல்றது நியாயமே இல்லை. ''ஏன்னா, நம் கையில, 100 பழம் இருந்தா, எல்லாத்தையும் சாப்பிட முடியாது. நான்கு பழத்தை தானம் கொடுப்போம். 40 வீணாகி, ஒண்ணுத்துக்கும் உதவாம போயிடும்... எல்லாத்தையும் அப்பவே துாக்கி கொடுக்க நாம ஒண்ணும் கர்ணன் இல்லை. இன்னும் என்னென்னவோ தீமைகளும் ஏற்படும்ன்னு போட்டுருந்துச்சு...''அதோட இன்னொரு விஷயம் என்ன தோணுச்சுன்னா, நீங்க, 30 ஆயிரம் சம்பளம் வாங்கி, தான, தர்மம் பண்ணுவேன்னு சொல்றீங்க... அதே சமயம், அந்த வேலைக்கு நீங்க போகலைன்னா, தேவைப்படற யாரோ ஒருத்தருக்கு அந்த வேலை கிடைக்கும். அவனுக்கு கல்லுாரி நிர்வாகம், 10 ஆயிரமோ, 15 ஆயிரமோ சம்பளம் கொடுத்தாலும் அதை வெச்சு அவன் சக்திக்கு தகுந்த மாதிரி குடும்பத்தை காப்பாத்துவான். ''ஆனா, நீங்க, அதே, 10 ஆயிரத்தை அவனுக்கு தானமா கொடுக்கறது சாத்தியமாகுமா... இப்ப சொல்லுங்கப்பா... நீங்க வேலைக்கு போறது நியாயமா அல்லது நம் கிராமத்து பள்ளிக்கூடத்துல மாணவர்களுக்கு வழி காட்டுறது நியாயமா,'' என்று நிறுத்தினான், விவேக்.''அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்னு படிச்சிருக்கேன்... இப்போ நேரடியா பார்க்கறேன்... நானா செஞ்சிருக்க வேண்டிய காரியத்தை உணர்த்துனதுக்கு நன்றிப்பா,'' என்றார், மகாபிரபு.

க.சரவணன்






      Dinamalar
      Follow us