PUBLISHED ON : நவ 19, 2023

வெகு காலத்திற்கு பிறகு, தங்கள் குருவை பார்ப்பதற்காக, மூன்று சீடர்கள், அவரது ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்களை வரவேற்று, பல விஷயங்கள் குறித்து அளவளாவிக் கொண்டிருந்தார், குரு.
அப்போது, நல்ல சிந்தனைகளை பற்றி பேச்சு எழுந்தது.
நற்சிந்தனை என்றால் என்னவென்று, சீடர்கள் ஒவ்வொருவரும், தங்களுக்கு தெரிந்ததை பற்றி குருவிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
'ஒரு நிமிஷம் இருங்கள். இதோ வந்து விடுகிறேன்...' என்று சொல்லி, உள்ளே சென்றார், குரு.
சற்று நேரத்தில், ஒரு குடுவையில் காபியும், பலவிதமான காபி கோப்பைகளையும் கொண்டு வந்தார்.
அங்கிருந்த மூன்று சீடர்களுக்கு, மொத்தம் ஒன்பது கோப்பைகள் இருந்தன. அவற்றில் மூன்று தங்கக் கோப்பைகளாகவும், மூன்று வெள்ளிக் கோப்பைகளாகவும், மூன்று பீங்கான் கோப்பைகளாகவும் இருந்தன.
சீடர்களிடம், 'குடுவையிலிருந்து காபியை ஊற்றி நீங்களே குடித்துக் கொள்ளுங்கள்...' என்றார்.
சீடர்களும் ஆளுக்கு ஒரு தங்கக் கோப்பையை எடுத்து, அதில் காபியை ஊற்றி பருகத் துவங்கினர். அப்படியே மீண்டும் நற்சிந்தனை பற்றி அவர்கள் பேசினர்.
அப்போது குறுக்கிட்ட குரு, 'நீங்கள் மூன்று பேருமே விலை உயர்ந்த தங்கக் கோப்பையைத்தான் எடுத்து, அதில் காபியை ஊற்றி பருகினீர்கள்.
'காபி குடிக்க உங்களுக்கு அதிக விலையுள்ள தங்கக் கோப்பைகள் தான் தேவைப்பட்டுள்ளது. அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், நன்றாக யோசித்துப் பாருங்கள், நீங்கள் குடிக்கப் போவது காபியையா, காபி கோப்பையையா...' என்றார்.
'காபியைத்தான் குருவே...' என்றனர், சீடர்கள்.
'ஆனால், காபி சுவையாக இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றி எதுவும் நினைக்காமல் காபி கோப்பையில் தான், உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள். உங்கள் உடம்பில் கலந்துவிடப் போகிற காபியை விட, வெளியே வைக்கப் போகிற கோப்பையில் தான் உங்கள் கவனம் இருக்கிறது.
'நற்சிந்தனை என்பது வெறும் ஆடம்பரக் கவர்ச்சிக்கு மயங்குவதாக இருக்கக் கூடாது...' என்றார், குரு.
பி. என். பி.,
